ஆதிக் குடியிலிருந்து ஓர் அரு மருத்துவர்!

ஏப்ரல் 01-15

ஜாதியின் வெற்றிக்கான காரணம் அதன் படிக்கட்டு முறையில்தான் இருக்கிறது என்பதைத் தெளிவாகக் கண்டுணர்ந்து சொன்னவர் அண்ணல் அம்பேத்கர். இந்துமதத்தைப் பொருத்தளவில் எந்த இரண்டு ஜாதிகளும் இணையானவையல்ல; எல்லாமே மேல் அல்லது கீழ்தான்.

ஒன்றுக்குக் கீழ் ஒன்று என்ற இந்தப் படிக்கட்டு முறையின் காரணமாகத்தான், தனக்கு மேலே ஆயிரம் ஜாதிகள் இருந்தாலும், அவர்களால் தாம் நசுக்கப்பட்டாலும், நமக்கும் கீழே உள்ளவர் கோடி என்று நினைத்துப் பார்த்து நிம்மதி நாடுகிறார்கள்; அவர்களை அடக்கியாளத் துடிக்கிறார்கள். பார்ப்பனர்கள் பிற ஜாதிகளையும், அதற்கடுத்த சூத்திரர்கள் (ஷத்திரிய, வைசியப் பிரிவுகள் இணைந்தது) தாழ்த்தப்பட்டோராகிய பஞ்சமர்களையும் அடக்கி கொடுமைகளில் ஈடுபட்டாலும், அத்தனை ஜாதிகளுக்கும் கீழாக, தாழ்த்தப்பட்டவரினும், தாழ்த்தப் பட்டவர்களாக இருக்கும் நிலை அருந்ததியர் இன மக்களுக்கு!

காலம் முழுக்க இழிநிலையில் வைக்கப்பட்ட ஆதிக்குடிகளான அம் மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை; இட ஒதுக்கீட்டின் பலனை அவர்களால் அனுபவிக்க முடியவில்லை என்ற சூழலில் தான் உள் ஒதுக்கீடு என்னும் கோரிக்கை எழுந்தது. போராட்டம் வெடித்தது.

அவசியமான இந்த ஏற்பாட்டைப் புரிந்து கொள்ளாமல், அதை எதிர்த்தவர்களும் உண்டு. வழக்கு மன்றம் சென்றவர்கள் உண்டு. தெளிவாக விளக்கம் தந்து உள் இடஒதுக்கீட்டுக் கோரிக்கையை ஆதரித்தது திராவிடர் கழகம்.

தாழ்த்தப்பட்டவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டிலேயே 3 விழுக்காட்டினை உள் ஒதுக்கீடாக வழங்க, அத்தனை தடைகளையும் தாண்டி, முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான 2006-2011 திமுக அரசில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

உரிய வகையில் சட்டம் வகுக்கப்பட்டது. கடும் போராட்டத்திற்கிடையில் கிடைத்த இந்த உரிமையின் பலன் ஒன்று இப்போது கனிந்திருக்கிறது. மருத்துவக் கல்லூரியில்  இடம் கிடைத்து அருந்ததியர்களுக்கான உள்ஒதுக்கீட்டின் மூலம் படித்து வந்த முதல் மருத்துவராகியிருக்கிறார் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த ஆதித் தமிழர் பேரவையின் பொறுப்பாளராகவும் உள்ள தோழர் சுந்தரம் அவர்களின் மகள் இலக்கியா.

இரண்டாயிரமாண்டுக் கால அடிமைத்தனத்தை, ஒரு நூற்றாண்டுக்குள் கடக்கும் இந்த அளப்பரிய போராட்டத்தின் வித்துகளான தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரை நன்றியோடும், அவர்களின் உழைப்பாலும், திராவிட இயக்கத்தாலும் செழித்து வளர்ந்துள்ள சமூகநீதி என்னும் பெருமரத்தை யாராலும் வீழ்த்தமுடியாது என்ற நம்பிக்கையோடும் ஒரு சேர நினைத்துப் பார்க்கிறோம். இன்னும் ஏராளமான இலக்கியாக்கள் உருவாகட்டும்! சமத்துவம் ஓங்கட்டும்!

-சமா.இளவரசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *