தகவல் புரட்சி யுகம் என்று அழைக்கப்படும் புதுமையான மின்னணுப் புரட்சியால், உலகத்தின் ஒரு கோடி அல்லது மூலையில் உள்ள செய்தி, அடுத்த சில நொடிகளில் மற்றொரு கோடிக்கோ, மூலைக்கோ பரவும் வண்ணம் வேகமான மின்னஞ்சல் வசதி -_ அதையொட்டிய முகநூல், டுவிட்டர், வாட்ஸ் அப் எத்தனை எத்தனையோ!
அவற்றின்மூலம் ஏராளமான கருத்துப் பரிமாற்றங்கள் சுதந்திரமாக நடைபெற்று வருகின்றன உலகெங்கும்!
ஆனால், ஆட்சியாளர்கள் – இந்தக் கருத்துரிமை வெளிப்பாட்டின் கழுத்தை நெரிக்கவே புதிய சட்டங்களையும், திருத்தங்களையும், தங்களுக்குள்ள ஆட்சி, அதிகார பலத்தின் காரணமாக மக்கள்மீது திணிக்கச் செய்கின்றனர்.
அப்படி வந்த ஒரு திருத்தச் சட்டம்தான் 66ஏ (தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் சட்டத்தின் பிரிவு) என்ற செக்ஷன்.
ஆட்சியாளர்கள் இதில் கூறப்படும் கருத்துக்காக எவரையும் கைது செய்யலாம், தண்டிக்கலாம்.
இதைக் காட்டி முன்பு மும்பையிலும், மேற்கு வங்கத்திலும் இன்னும் பல ஊர்களிலும் கூறப்பட்ட கருத்துக்காக இரவோடு இரவாக கைது; சிறையில் அடைப்பு என்ற பாசிசப் போக்குகள் மலிந்துவரும் வேளையில், இப்படி ஒரு 66ஏ பிரிவு செல்லாது; இது இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படையான கருத்துச் சுதந்திர உரிமைக்கு எதிரான சட்டம் என்று திட்டவட்டமாக, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மார்ச் 24 அன்று அளித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பில் கூறியுள்ளனர்!
இந்தச் சட்டத்தின் பிரிவை நாங்கள் ஆழ்ந்து ஆராய்ந்து தேவையான அளவுக்கே பயன்படுத்துவோம் – தவறாகப் பயன்படுத்தமாட்டோம் என்று மத்திய அரசு தரப்பில் எடுத்து வைக்கப்பட்ட கருத்தினை ஏற்கவில்லை உச்ச நீதிமன்றம்.
இந்த அம்சத்தை நாம் வெகுவாகப் பாராட்டுகிறோம்; காரணம், இதற்கு முன்பு ஜனநாயக உரிமைகளுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட அத்துணை கறுப்புச் சட்டங்கள் – கடுமைச் சட்டங்கள் (Draconian Laws ) அனைத்தையும் நுழைக்கும்போது, இப்படிப்பட்ட வாக்குறுதிகளை நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் ஆளுவோர் கூறுவதும், பிறகு நடைமுறையில் அவற்றைக் காற்றில் பறக்க விடுவதும் சர்வ சாதாரணமான நிகழ்வுகள் ஆகும்.
தவறாக எழுதப்படும் அவதூறு பரப்பும் செய்தி, கட்டுரைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சிவில், கிரிமினல் தேசப் பாதுகாப்பு முதலிய சட்டங்கள் ஏராளம் சட்டப் புத்தகங்களில் உள்ளபோது, இம்மாதிரி புதிய உற்பத்திகள் பாசிசத்தின் வெளிப்பாடுகளேயாகும்.
எனவே, இத்தீர்ப்பின்மூலம், ஜனநாயகத்தின் அடிக்கட்டுமானம் குலைக்கப்படாமல் _- கருத்துச் சுதந்திரமே அது -_ காப்பாற்றப்பட்டுள்ளது!
எனவே, இத்தீர்ப்பினை வரவேற்கிறோம்.
– கி.வீரமணி,
ஆசிரியர்