அன்று.. நரேந்திர தபோல்கர்
இன்று … கோவிந்த் பன்சாரே படுகொலை?
மகாராட்டிர மண்ணில் ஜாதீய வாதம், மதவாதம், மூடநம்பிக்கை இவற்றுக்கு எதிராக இயக்கம் நடத்திய நரேந்திர தபோல்கர் இந்துத்துவ வெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் (2012 ஆகஸ்டு). இப்பொழுது அதே பணிகளைச் செய்து வந்தவரும், அம்மாநில இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்தவருமான தோழர் கோவிந்த் பன்சாரே மதவெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இருவருமே நடைப்பயிற்சி சென்றபோதுதான் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
நரேந்திர தபோல்கரைச் சுட்டுக் கொன்ற கொலையாளிகள்தான் இவரையும் சுட்டுக் கொன்றிருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.
நரேந்திர தபோல்கரைச் சுட்டுக்கொன்ற கொலையாளிகளை இதுவரை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தாத நிலையில், அடுத்த கொலையும் இப்பொழுது நடந்திருக்கிறது. (அன்று காங்கிரஸ்; இன்று பா.ஜ.க. ஆட்சி)
தோழர் கோவிந்த் பன்சாரே வலதுசாரி மதவாத அரசியலுக்கு எதிராகச் சிம்மக் குரல் கொடுத்து வந்தவர்; சாமியார்களுக்கு எதிரான கடும் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்; உயர் ஜாதி ஜாட் பிரிவினரின் கட்டப் பஞ்சாயத்துகளுக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்களை ஒருங்கிணைத்தவர்.
சிவாஜியை இந்துத்துவாவாதிகள் தங்களின் மதவெறி அரசியலுக்குத் தூக்கிப் பிடித்ததை, தக்க வெளியீடுகள் மூலம் தூள் தூளாக்கியவர்!
சிவாஜி பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பன்சாரே காந்தியைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சேவுக்குச் சிலை எழுப்ப வேண்டும் என்று கூறப்பட்டதைக் கடுமையாகச் சாடினார்; அதே நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி.யைச் சேர்ந்த வெறியன், தோழர் பன்சாரேயின் கருத்திற்கு எதிராக மேடையில் ஏறி வெறிக் கூச்சல் போட்டுள்ளான். நாதுராம் கோட்சே உண்மையான தேச பக்தர் என்று கூறியதோடு பன்சாரேயின் பேச்சை எதிர்த்து நீதிமன்றம் செல்லுவேன் என்றும் மிரட்டியிருக்கிறான். தோழர் கோவிந்த் பன்சாரே பதற்றம் சிறிதும் அடையாமல் அமைதியாக, தாராளமாக வழக்குப் போடுங்கள் இதே கருத்தை அங்கும் வந்து சொல்லுவேன் என்று கூறியிருக்கிறார்.
அவர் படுகொலை செய்யப்பட்டு இருப்பதில் இந்த இந்துத்துவா பின்னணி இருக்கிறது என்பதில் அய்யமில்லை.
நாடு ஒரு மோசமான தருணத்தில் இருக்கிறது; இந்திய அரசமைப்புச் சட்டத்தால் உறுதி செய்யப்பட்டுள்ள விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும், சீர்திருத்த உணர்வை ஊட்ட வேண்டும்; அது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்பதற்கு எதிரான மதவெறி சக்திகள் படுகொலைக் கருவியைக் கையில் எடுத்துக் கொண்டுள்ளன.
மதவெறி நஞ்சை அன்றாடம் கக்கிவரும் சக்திகள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ள நிலையில் ஆட்சியில் அமர்ந்துள்ளவர்களை இயக்குவிக்கும் இடத்தில் இருக்கும் இந்தத் தருணத்தில், மதச் சார்பின்மை சக்திகள், இடதுசாரிகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்கவும், போராடவும் முன்வர வேண்டும்.
மதம், பக்தி என்பவை எல்லாம் தனி மனிதனைச் சார்ந்தது; வீட்டுக்குள் பூஜை அறைக்குள் முடங்கிக் கிடக்கட்டும்!
மனித உரிமைக்கும், சமூக நல்லிணக்கத்துக்கும் பேரச்சுறுத்தலாக இருக்கும் இந்தப் போக்கு முடிவு கட்டப்பட வேண்டும்.
நேர்மையான சட்ட ஆட்சி – நீதிமன்றத்தின் பொறுப்பு, ஊடகங்களின் கடமை இவற்றின் பங்களிப்பும் இதில் மிக முக்கியமானதாகும்! தேவையுமாகும்.
21ஆம் நூற்றாண்டில் முற்போக்குச் சமுதாயம், சரிநிகர் வாழ்வு மணக்கும் அத்தியாயம் மலர வேண்டுமே அன்றி, மதவெறிப் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியாகி, நாளும் கலவரச் சூழலும், அமைதியைத் தொலைத்த அருவருக்கத்தக்க நிலையும் நிலவ வேண்டுமா என்பதை முடிவு செய்வோம்! அரசியலுக்கு அப்பாற்பட்டு பகுத்தறிவுப் பிரச்சாரம் சுழன்றடிக்கட்டும்! சுழன்றடிக்-கட்டும்!!
அவருக்கு நமது வீர வணக்கம்; பல தபோல்கர்களும், பன்சாரேகளும் உருவாவது நிச்சயம். அவரது குடும்பத்தினருக்கும், இயக்கத்திற்கும் நமது ஆழ்ந்த இரங்கல்.
நரேந்திர தபோல்கர்களுக்கும், கோவிந்த் பன்சாரேக்கும் நாம் காட்டும் உண்மையான மரியாதை இதுதான். வன்முறை ஆயுதம் -_ பகுத்தறிவு முற்போக்கு பொதுவுடைமைச் சித்தாந்தங்களை வீழ்த்த முடியாது என்றே செயலில் காட்டுவோம் _ – வாரீர்!
கி.வீரமணி, ஆசிரியர்