இவ்விடம் அரசியல் பேசலாம்
ராத்திரி நேரத்துப் பூஜையில்….
தோழர் சந்தானத்தின் சலூனுக்குள் மகேந்திரன் நுழைந்ததுமே புதிதாக வேலைக்குச் சேர்ந்த முத்துவைப் பற்றித்தான் விசாரித்தார்.
“தோழர், புதுசா சேர்ந்த முத்துவை எங்க காணல? அதற்குள் வேலை பிடிக்கலைன்னு கிளம்பிட்டாரா?”
“அப்படில்லாம் இல்லைங்க தோழர், அவங்க ஊர்ல மாரியம்மன் கோவில் திருவிழாவாம், வருஷா வருஷம் எங்க இருந்தாலும் கண்டிப்பா போயிடுவாராம், அதான் லீவு கேட்டாரு, கொடுத்துட்டேன்.”
“பரவாயில்லையே! முத்துத் தம்பிக்குத் தெய்வ பக்தி அதிகமோ?”
“நானும் முதலில் அப்படித்தான் நினைத்தேன் தோழர், அப்புறம் அவனே உண்மையச் சொல்லிட்டான் தோழர்!”
“அதென்ன உண்மை தோழர்?”
“அவங்க ஊர் மாரியம்மன் கோவில் திருவிழாவுல போடுற ஆடலும் பாடலும் ப்ரோக்ராம் ரொம்ப பேமஸாம்! ஒவ்வொரு வருஷமும் மிஸ் பண்ணவே மாட்டாராம்!”
“ஓஹோ. அபிநயா கலைக்குழுவுல எம்ஜிஆர், ரஜினி மாதிரியெல்லாம் வேஷம் போட்டு ஆடுவாங்களே அந்த மாதிரி டான்ஸ் தான? அதெல்லாம் தொடர்ந்து பார்த்தால் சலிப்புத் தட்டிடுமே தோழர்! அதுக்கா அவ்வளவு ஆர்வம்?!”
“அட! நீங்க எந்தக் காலத்துல இருக்கீங்க தோழர்?”
“பின்ன எப்படி தோழர்?”
“கரகாட்டமெல்லாம் பார்த்திருக்கீங்களா தோழர்?”
“சின்ன வயசுல பார்த்திருக்கேன். அதுவும் வீட்டுக்குத் தெரியாமல் திருட்டுத்தனமா!”
“ஹஹஹ! அதான பார்த்தேன்! நானும் உங்க கேஸ் தான் தோழர்! அந்தக் கரகாட்டத்துல முதலில் கரகத்தை வைத்து நிறைய வித்தையெல்லாம் பண்ணிக் காட்டுவாங்க. அப்புறம் நேரம் செல்லச்செல்ல, நள்ளிரவு வர்றப்பதான், கூட்டம் கலையாமல், தூங்காமல் இருக்கறதுக்காக கொஞ்சம் ஆபாசமா பேசுவாங்க, மிஞ்சி மிஞ்சிப் போனால் கூட்டத்திலிருக்குற ஒரு சின்னப் பயனைக் கூப்பிட்டுப் படுக்க வச்சு வாழைக்காய் வெட்டுவாங்க! ஆனால் இந்த ஆடல் பாடல் நிகழ்ச்சி அதையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுடும் தோழர்!
“அப்படியா? அதெப்படி உங்களுக்குத் தெரியும் தோழர்?”
“எப்படி தெரியுமா? இன்டர்நெட்ல யூ டியூப் புல்லா அதுதான் தோழர் இப்போ அதிகம் பேர் பார்க்கற வீடியோவே!”
“இன்டெர்நெட் வரைக்கும் வந்திடுச்சா? அப்படி என்ன தோழர் அந்த ஆடல் பாடலில் இருக்குது?”
“அப்பட்டமா உறிச்ச கோழியாட்டம் ஆடுறதும், படுக்கையறைக் காட்சிகளை மேடையேத்துறதும் தான் தோழர் அதோட ஸ்பெஷாலிட்டியே!”
“படுக்கையறைக் காட்சிகளா? அதுவும் சாமி திருவிழா மேடையிலா?”
“அட, அந்த மேடையிலயே பெரிய சைஸ்ல சாமி படத்தை ப்ளக்ஸ்ல தொங்க விட்டுக்கிட்டு தான் இத்தனை கூத்தும் நடத்துறாங்க தோழர்! என்ன நம்ப முடியலையா?!”
“ஆமா தோழர்! அந்த ஊர் பஞ்சாயத்துன்னு ஒன்னு இருக்கும்ல, நாட்டாமைன்னு ஒருத்தர் இருப்பாருல்ல? அவரு அதையெல்லாம் கண்டிக்க மாட்டாரா?”
“அவரு எங்க கண்டிக்க? மேடையைச் சுத்தி உட்கார்ந்துக்கிட்டு செல்பேசில
வீடியோ எடுக்குற கும்பலில் அவரும் ஒருத்தராச்சே!”
“அடக்கொடுமையே! இந்த மாதிரிக் கலாச்சாரத்திற்கு விரோதமான நிகழ்ச்சிகளைத் தடுத்து நிறுத்தி சட்டத்துக்கு முன்னாடி நிறுத்த வேண்டிய அவரே இப்படியா?!”
“என்ன அவரே இப்படியா? கரகாட்டம் நடந்த காலத்துலயே இவங்கதான கரகாட்டக் கலைஞர்களுக்குப் பணம் குத்துற கோஷ்டி?! அந்தக் கலைஞர்களைப் பாதுகாக்குறேன் பேர்வழின்னு இவங்க எப்படி வழியுவாங்கன்னு சுப்பிரமணியபுரம் படத்துல கூட பார்த்திருப்பீங்களே!”
“அதுசரி! இப்படி உலக அளவுல நம்மூருத் திருவிழா மானம் கப்பலேறிக்கிட்டுத்தான் இருக்குதா? இதுல அய்யோ பாவம் மாதொருபாகன் நாவலை வச்சுக்கிட்டு, அந்த ஊர் ஜனங்களைக் காவிக்கூட்டம் உசுப்பிவிட்டுட்டு வேடிக்கை பார்க்கறதைப் பார்த்தால் பத்திக்கிட்டு வருது தோழர்!”
“அதேதான் தோழர்! ஒன்றுமில்லாத விஷயத்தை ஊதிப் பெரிதாக்குவதுதான இவங்க வேலை! ஜாதித் தீயைக் கிளறி விட்டுட்டு இப்போ குளிர் காலத்துக்குச் சுகமா குளிர் காயுறாங்க! நம்ம முத்து திரும்ப வேலைக்கு வந்தபிறகு வந்து அவனிடம் கேளுங்க! திருவிழாவைப் பத்திக் கதைகதையா சொல்வான்! இந்த மாரியம்மன் கோவில் திருவிழாகூட ஒவ்வொரு ஜாதிக்கும் தனித்தனியா நடக்குமாம் தோழர்!”
“என்னது ஒவ்வொரு ஜாதிக்கும் தனித்தனியாவா? அப்போ மாரியம்மனும் ஒவ்வொரு ஜாதிக்கும் தனித்தனியாதான் அருள்பாலிக்குமா?”
“விட்டால் மாரியம்மன் என்ன ஜாதின்னு கேட்பீங்க போல! அதைப் பத்தி நம்ம மாரியம்மனே கவலைப்படல, நமக்கு எதுக்கு தோழர்!”
“ஊர் முழுக்க ஜாதி வெறியும், மத வெறியும் மீண்டும் உச்சத்துக்கு வர்றாப்புல தெரியுதே தோழர்! எழுத்தும் கலையும்தான் மக்களோட மனநிலையை மேம்படுத்தி மனிதாபிமானத்தைத் துளிர்க்கச் செய்ய முடியும். ஆனால் அப்படிப்பட்ட படைப்பைக்கூட ஜாதிக் கண்ணோட்டத்துல பார்க்கறதும், ஆணாதிக்க சிந்தனையோட அவதூறு பரப்புவதும், கொலை மிரட்டல் விடுறதும் என்ன ஒரு கலாச்சாரமோ தோழர்!”
“இதெல்லாம் ஆட்சி மாற்றத்தால வர்ற வேகமும், துடிப்பும்தான் தோழர்! நம்மூர்ல ஜாதி வெறியைத் தூண்டுறாங்க, வடநாட்டுல என்னடான்னா, நாலு குழந்தை பெத்துக்கோ, அஞ்சு குழந்தை பெத்துக்கோன்னு மத வெறியத் தூண்டுறாங்க!”
“குழந்தைகளை வதவதன்னு பெத்துப்போட்டு இந்துக்களோட எண்ணிக்கையை உயர்த்தப் போறாங்களாம்! மேட்டூர் டேம்லயும், பெரியாரு டேம்லயும் நீர்மட்டத்தை உயர்த்தி விவசாயத்தை உயர்த்துறதுக்கு வழியக் காணும்! புள்ளகுட்டியை உயர்த்துறதுக்கு அய்டியா கொடுக்க மத்திய அரசாங்கம் எதுக்குத் தோழர்?!”
“சரியா கேட்டீங்க! நாட்டுல கொசுக்களோட தொகை பெருகிட்டுப் போறதைப் பத்திக் கவலையில்ல, இதுல முஸ்லீம்கள் எண்ணிக்கை அதிகமாகுதுன்னு கிளப்பிவிட்டு புள்ள பெத்துக்கற போட்டியைத் தூண்டி விடுறானுங்க! முதலில் தன்னோட கட்சிக்காரங்களை வதவதன்னு பெத்துக்கச் சொல்லலாம்ல! அப்படியாவது அவங்களுக்கு ஓட்டு எண்ணிக்கை அதிகமாகுதான்னு பார்க்கலாம்ல!”
“அதானே தோழர்! முதலில் அவங்க கட்சிக்குள்ள செயல்படுத்தலாமே?!”
“அங்கதான தோழர் இடிக்குது! அவங்க தலையே மனைவிகூட சேர்ந்து வாழமாட்டேன்னு அடம் பண்ணிட்டு இருக்கார்! அவரோட மனைவி தான் சேர்ந்து வாழத் தயார்னு ஊடகங்களில் பேட்டியெல்லாம் குடுத்து கேன்வாஸ் பண்றாங்க! நினைச்சாலே பரிதாபமா இருக்குதுல்ல தோழர்!”
“ஆமா, தோழர். இன்னொரு கொடுமையப் பார்த்திங்களா தோழர்? தலைநகர் டெல்லியில ஏகப்பட்ட கற்பழிப்புகள் நடைபெறுவதால் அங்கே பாதுகாப்பை அதிகப்படுத்தணும்னு சொன்னப்பலாம் கண்டுக்காமல் இருந்துட்டு இப்ப ஒபாமாவுக்காக 15,000 கேமரா வரை பொருத்தி பாதுகாப்புக் கொடுக்குறாங்க!”
“ஆனாலும் பாருங்க, 15,000 கேமராவைப் பொருத்தினாலும் அதிலிருக்கும் கேமராவை வச்சு நம்மை நாமே செல்பி எடுத்துக்க முடியாது! என்ன கொடுமை சரவணன் மாதிரியில்ல?!”
ஹஹஹ! அதேதான் தோழர்!
– கல்வெட்டான்