தொழிலாளர் தினமான மே தினத்தில் (01.05.2011) நாடு, மொழி, இனம் கடந்து நமிநகமத்சு என்ற ஜப்பானியப் பெண், ஒரு தமிழரான ரவி அமுதனை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டார்.
உண்மை இதழுக்காக மணமக்களைச் சந்தித்தோம். மணப்பெண்ணுக்கு தமிழில் சில வார்த்தைகள் தெரியும். ஆங்கிலம் கூட கொஞ்சம்தான். ஆதலால் ரவி அமுதன் அவரிடம் கேட்டு, நமக்குத் தமிழில் சொன்னார். அவர், நமிநகமத்சுவிடம் கேட்டு, பேசத்தொடங்குமுன், ரவி அமுதனிடம் கொன்னிச்சீவா -என்றேன். நமிநகமத்சு – முகம் மலர கலகலவென்று சிரித்தவாறே கொன்னிச் சீவா என்றார் பதிலுக்கு, கொன்னிச்சீவா என்றால் வணக்கம், தொடர்ந்து சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்ட இருவருக்கும் ஓ மே தேத்தோ _ என்றேன். மீண்டும் ஒருமுறை மணப்பெண் நாணத்தோடு அரிகாத்தோ _ என்றார். ஒரு ஓ மே தேத்தோ – என்றால் வாழ்த்து. அரிகாத்தோ என்றால் நன்றி.
கேள்வி: நீங்க சுயமரியாதைக் குடும்பத்தின் வழி வந்தவர், உங்களைப் பற்றியும் உங்கள் இணையரைப் பற்றியும் சொல்லுங்கள்?
பதில்: தந்தை பெரியாரின் கொள்கைப் பற்றாளரும் சீரிய பகுத்தறிவுவாதியுமான மறைந்த எமரால்ட் கோபாலகிருஷ்ணன் – சுலோசனா ஆகியோர் எனது தாத்தா பாட்டி ஆவார்கள். பொன்னி செல்வி – இரவீந்திரன் – ஆகியோர் என்து தாய் தந்தையர் ஆவார்கள். நான் சிறு வயதிலேயே குழந்தைகள் பழகு முகாமில் கலந்து கொண்டவன், இப்போது ஆட்டோ மொபைல் துறையில் மேல் படிப்புக்காக அண்ணா பல்கலைக் கழகத்தின் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜப்பான் சென்று படித்து வருகிறேன்.
எனது இணையரின் தந்தை நகமத்சு சுகநொரி ஆட்டோ மொபைல் நிறுவனத்திற்கு உதிரிப் பொருட்கள் தயாரித்து அளிக்கும் Taihokogyo Co Ltd – இல் முதன்மை மேலாளராக இருக்கிறார். தாய் நகமத்சு சிஓமி ஆவார். எனது இணையரும் பொறியாளர்தான். ஆங்கிலம், ஜப்பான் ஆகிய மொழிகளை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியராகத் தற்போது பணிபுரிந்து கொண்டிருக்கிறார்.
கேள்வி: இரண்டு வகையில் தங்களின் திருமணம் சிறப்புப் பெறுகிறது. ஒன்று சுயமரியாதை முறையில் திருமணம் செய்து கொண்டீர்கள். இரண்டாவது காதல் திருமணம். நீங்கள் இருவரும் முதன் முதலில் எங்கு சந்தித்துக் கொண்டீர்கள்?
பதில்: முதன் முதலில் இருவரும் கராத்தே பயிற்சி வகுப்பில்தான சந்தித்துக் கொண்டோம். அறிமுகம் ஆனோம். சிந்தனைகளைப் பரிமாறிக் கொண்டோம்.
கேள்வி: மொழி உங்களுக்குத் தடையாக இருந்ததா?
பதில்: இல்லை. நான் படிப்பதற்குச் சென்றதும் ஜப்பான் மொழியை ஆறு மாதத்தில் கற்றுக் கொண்டேன். எனது இணையருக்கு ஆங்கிலம் கொஞ்சம் தெரியும். அதனால், எங்களுக்கு இடையில் மொழி ஒரு தடையாக இருக்கவில்லை.
கேள்வி: ஆங்கிலம் அங்கு அவசியமா?
பதில்: இல்லையில்லை. (உடனே மறுக்கிறார்) ஆங்கிலம் அங்கு இல்லை. விரும்புகிறவர்கள் கற்றுக் கொள்ளலாம். அதுவும் குறிப்பிட்ட கல்வி நிலையங்களில்தான். மற்றபடி முழுக்க முழுக்க ஜப்பான் மொழிதான்.
கேள்வி: உங்களில் யார் முதலில் காதலை வெளிப்படுத்தினீர்கள்?
பதில்: நான்தான். நான்தான் முதலில் என்மனதில் உள்ளதை நமிநகமத்சுவிடம் தெரிவித்தேன்.
கேள்வி: சரி, உங்களுக்கு அவரிடமும், அவருக்கு உங்களிடமும் பிடித்தமான விசயங்கள் என்னென்ன?
பதில்: எனக்கு எனது இணையரிடம் பிடித்தமானது அவருடைய கள்ளமில்லாத அன்பும், நேசமும்தான். என்று கூறிவிட்டு, நமிநகமத்சுவிடம் நான் கேட்ட கேள்வியை ரவி அமுதன் கேட்க; அவர் நாணம் மேலிட சிரித்துவிட்டு ஜப்பான் மொழியில் சொன்னதை ரவி அமுதன் சொல்கிறார். அவளுக்கு என்னிடம் பிடித்தது ஆண் தன்மை என்று சொல்கிறாள். காரணம், ஜப்பானில் பெரும்பாலும் பெண்கள்தான் முதலில் காதலைச் சொல்வார்கள். நான் காதலை முதலில் சொன்னது அவளுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. காரத்தே வகுப்பில் முதல் முதலில் சந்தித்து ஆறு மாதம் சென்றுதான் அடுத்த சந்திப்பு வாய்த்தது. அப்போது தாயைக் கண்டவுடன் ஓடிவரும் குழந்தை போல அவள் என்னைக் கண்டவுடன் ஓடிவந்தாள். அப்போதே நான் முடிவு செய்துவிட்டேன். இது காதல்தான் என்று. அவளும் அவ்வண்ணமே எண்ணிக் கொண்டிருந்தாள். நான் முந்திக் கொண்டேன்.
கேள்வி: காதலுக்கு ஜாதி, மதம், மொழி, நாடு, இனம் எதுவும் தேவையில்லைதான். ஒரு ஆணும், பெண்ணும் மனம் ஒத்துப்போனால் போதும்தான். ஆனால், சுயமரியாதைத் திருமணம் செய்வதற்கு உங்கள் இணையர் எப்படி ஒப்புக்கொண்டார். அவர்களின் பெற்றோரை எப்படி ஒப்புக் கொள்ளச் செய்தீர்கள்..?
பதில்: இதற்காக நான் பெரிதும் சிரமப்படவில்லை. இருவரும் ஒருவரை யொருவர் காதலிக்கிறோம் என்று தெரிந்தவுடன், அவர்களின் வீட்டுக்கு நேரிடையாகச் சென்று, எனது இணையரின் பெற்றோரைச் சந்தித்து என்னைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டேன். அவர்களுக்கு என்னைப் பிடித்திருந்தது. அதுமட்டுமல்ல, ஜப்பானில் பெரும்பாலும் காதல் திருமணம்தான். ஆனாலும், தொடக்கத்தில் இவ்வளவு தூரத்தில் தங்கள் பெண் வாழ்க்கைப்பட வேண்டுமா? என்று தயங்கியது உண்மைதான். ஆனாலும், அந்தத் தயக்கம் சூரியனைக் கண்ட பனி போல விலகிற்று. அதைவிட முக்கியமானது ஜப்பானில் புத்தமதம் மக்களை அந்தளவுக்குப் பக்குவப்படுத்தி வைத்துள்ளது. அங்கு கடவுள் நம்பிக்கை பெரும்பாலும் இல்லை. தனது இணையரிடம் திரும்பி – ஜப்பான் மொழியில் – உனக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா – என்று கேட்கிறார். அவரும் கலகலவென்று சிரித்து இல்லை என்கிறார். அதுமட்டுமல்ல, மதமோ, கடவுள் நம்பிக்கையோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், அது தனி நபர் வாழ்க்கைக்கு வெளியே இருப்பதுதான் நமக்கும் நல்லது. நாட்டுக்கும் நல்லது _ என்று கூறிவிட்டு, மீண்டும் கலகலவென்று சிரிக்கிறார் நமிநகமத்சு. ரவி அமுதன் அவர் சொன்னதைத் தமிழில் நம்மிடம் சொன்னதும், நாம் அதைப் பாராட்டிக் கைத் தட்டுவதைப் பார்த்து நாணம் கொள்கிறார்.
கேள்வி: தங்களின் திருமணத்தின் போது பெண்ணின் பெற்றோரும் தமிழர்களின் கலாச்சார உடையை அணிந்திருந்தனர். அது, ஒரு அடையாளத்திற்காக அணிந்திருந்தனரா? அல்லது உணர்வுப் பூர்வமாக அணிந்திருந்தனரா?
பதில்: இல்லையில்லை. அவர்கள் விரும்பி அணிகிற உடைதான். அவர்களுக்கு இந்த உடையின் மீது அதிகப் பற்று இருக்கிறது.
கேள்வி: தங்களது இணையரும் தமிழ் நாட்டுப் பெண்களைப் போல பொன் அணிகள் அணிந்திருக்கிறார். திருமணத்திற்காக அணிந்திருந்தாரா? இல்லை எப்போதும் அணிந்திருப்பாரா? பதில்: அவருக்கு விருப்பம்தான். ஆனாலும், அதைத் தொடர்ந்து அணிந்து கொள்ள இயலாது. ஜப்பானில் பணிக்குச் செல்லும் போது இதுபோன்ற அணிமணிகள் அணியக் கூடாது.
கேள்வி: ஜப்பானில் ஜாதி உண்டா?
பதில்: (மணப்பெண்ணிடம் திரும்பி நமது கேள்வியை ஜப்பான் மொழியில் கேட்கிறார். அவர் சொன்னதைக் கேட்டு. நமக்குச் சொல்கிறார்)
அவருக்கு நினைவில்லை. எப்போதோ இருந்திருக்கக்கூடுமாம். இப்போது இல்லை. அதுபோல, இந்தியாவில் இருப்பது போன்று பண்டிகைகள்கூட இருக்கிறதாம். ஆனாலும், அதற்கென்று தனி முக்கியத்துவம் கிடையாது. கடவுளை நம்புகிறவர்கள்கூட சொற்பம்தான். அவர்களும்கூட, அதைப்பற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.
கேள்வி: சமீபத்தில் ஏற்பட்ட சுனாமியின்போது, அங்கிருந்த மக்கள் நடந்துகொண்ட ஒழுக்கம் உலகம் முழுதும் இருக்கிற மக்களை வெகுவாக வியப்புக் கொள்ளச் செய்தது. இந்தக் கட்டுப்பாடு எப்படி வந்தது?
பதில்: (வழக்கம் போலவே ரவி அமுதன் கேட்டுவிட்டுச் சொல்கிறார்) தொடக்கப் பள்ளியில் இருந்தே அவர்களுக்குச் சமூக ஒழுக்கங்களைச் சொல்லித் தருவதற்கென்றே தனியாக வகுப்பு ஒன்று இருக்கிறதாம். அதில் சுற்றுப்புறத் தூய்மை, கழிவறையைத் தூய்மை செய்வது, தனி மனித ஒழுக்கம், மற்றவர்களிடம் காட்டவேண்டிய நாகரிகம், பண்பு போன்றவற்றைக் கற்றுத் தருகிறார்களாம். அதுமட்டுமல்ல, ஜப்பானில் வீட்டுக்கு விருந்தினர்கள் வந்தாலும் சரி, விடைபெற்றுச் சென்றாலும் சரி, அவர்களைக் குடும்பத்தினர் அனைவரும் ஒருங்கிணைந்து சென்று நின்று வரவேற்பதும், விடைகொடுப்பதும் நமக்கு ஆச்சரியமாக இருக்கும்.
கேள்வி: தங்கள் இருவரின் எண்ணம்போல உங்களின் வாழ்வு அமைந்திருக்கிறது? மீண்டும் உங்களுக்கு உண்மை இதழின் சார்பாக வாழ்த்துகள்!
பதில்: நன்றி! எனக்கு இன்னமும் இரண்டாண்டுகள் படிப்பு இருக்கிறது. ஆகவே, இருவரும் ஜப்பான் செல்லவிருக்கிறோம். படிப்பை முடித்துவிட்டு அடுத்தகட்டப் பணியைப் பற்றி முடிவு செய்யவேண்டும்.
ரவி அமுதன் ஜப்பான் மக்களின் ஒழுக்கத்தைப் பற்றியும் மற்றவர்களிடம் அவர்கள் காட்டும் பண்பைப் பற்றியும் குறிப்பிட்டதை நாமே நேரில் காணும் ஒரு வாய்ப்புக் கிடைத்தது. நேர்காணல் முடிந்து நாம் விடைபெறும்போது ரவி அமுதன், நமி நகமத்சு, நமி நகமத்சுவின் பெற்றோர் ஆகியோர் வாசலுக்கே வந்து அரிகாத்தே (நன்றி) சொல்லி வழி அனுப்பினார்கள்.
தந்தை பெரியார் அவர்கள் பக்தியையும், ஒழுக்கத்தையும் ஒப்புமைப்படுத்திச் சொல்லும் கருத்து மிகவும் பிரபலமான ஒன்று. பக்தி என்பது தனிச்சொத்து. ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து. பக்தி இல்லாவிட்டால் நட்டமில்லை. ஆனால், ஒழுக்கம் கெட்டுப்போனால் எல்லாமே பாழ்! இந்தப் பொன்மொழிக்கேற்ப ஒட்டுமொத்த ஜப்பானே எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அதை, கடந்த மாதம் வந்த சுனாமியின்போது சொல்லொணா இழப்புகளுக்கு ஆளாகியிருந்த அந்தச் சூழ்நிலையிலும் அவர்கள் நடந்துகொண்ட கட்டுப்பாடும் ஒழுக்கமும், மனித நேயமும் நமக்கெல்லாம் மிகுந்த வியப்பை ஏற்படுத்தியது. அப்படிப்பட்ட மக்கள் பெரியாரின் கொள்கையையும், ஒழுக்க நெறியையும், மனித நேயத்தையும் கொண்டுள்ள சுயமரியாதைக் குடும்பத்தின் ஒரு அங்கமான செல்வன் ரவி அமுதனை ஏற்றுக்கொண்டதும், தமிழர் தலைவரின் தலைமையில் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டதும், வியப்புக்குரிய ஒன்றாகத் தோன்றவில்லைதான். மணப்பெண் நமி நகமத்சுவைப் பற்றி ரவி அமுதனின் தாயாரிடம் கேட்டபோது, தனக்கு எந்த வேறுபாடும் தெரியவில்லை என்றார். தனது மகனின் மனதிற்குப் பிடித்த பெண்; ஆகவே எனக்கும் பிடித்திருக்கிறது என்றார் பெருமையுடன்.
மணமகன் ரவி அமுதனின் இயற்பெயர் அரவிந்தன் – அது சமஸ்கிருதப் பெயர் என்பதால் அமுதன் என்று பெயர் மாற்றிக் கொண்டிருக்கிறார்.
இவர்களது திருமணத்தில் கலந்து கொண்ட அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் மன்னர் ஜவஹர் தமது வாழ்த்துரையில், ஜப்பான் செல்வதற்கு, கல்லூரி சார்பாக அய்ந்து பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களை நேர்காணலுக்கு அனுப்பினோம். அதிலே மணமகன் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜப்பானுக்கு மேற்படிப்புக்குச் சென்றார். மிகச் சிறந்த ஒழுக்கமான மாணவர்தான் என்று கூறியுள்ளார்.
– நேர்காணல்: உடுமலை வடிவேல்