அனுதாபங்கள் பாபா பக்தர்களுக்கு!

மே 16-31

உடைந்து போயிருப்பார்கள் பாவம். கடைசி நம்பிக்கையான உயிர்த்தெழுதல் நடக்கவில்லை, ஒரு விசை ஒரு வினாடியில் இயக்கத்தை நிறுத்திவிட்டது.
மற்றவர் சோகத்தில் ஆரவாரிக்கும் அநாகரிகம் எனக்கு இல்லை என்றாலும், இவர்களது கண்ணீரில் என் கண்கள் கலங்கவில்லை. ஆனாலும் இன்று புட்டபர்த்தி சாய்பாபா பக்தர்களுக்கு என் அனுதாபங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்… இன்றைய மனிதனின் மரணத்திற்காக அல்ல, இதுவரைக்கும் மூடர்களாக இருந்த மக்களின் அறிவு மயக்கத்திற்காக.

பொதுவாக நம் நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம் எல்லாம் ஓர் இழவு விழுந்தவுடன் அழுதுவிட்டு, பிணத்தை ஒழித்துவிட்டு, மூன்றாம், பத்தாம், பதினாறாம் நாளில் விருந்து தின்றுவிட்டு, அடுத்த வேலையைப் பார்க்கப்போவதுதான். வசதியைப் பொறுத்து ஓராண்டுக்குப் பின் ஒரு நினைவுநாள் கொண்டாட்டம் பத்திரிகை விளம்பரம்..

ஆனால், எவ்வளவு நெருக்கமானவரின் மரணத்துக்குப் பின்னும், எவரும் வாழ்க்கையை வாழாது விடுவதில்லை. மரணமும் யதார்த்தம் என்று மனதின் மூலையில் அறிவு சொல்லிக்கொண்டிருப்பதால். அறிவே பழுதாகும்போது மனம் சிதிலமடையும், உடையும், திசைதெரியாமல் தடுமாறும். இதனால்தான் பாபா பக்தர்களிடம் எனக்கு அனுதாபம் அதிகமாகிறது.

வித்தைகாட்டி மயக்கியவனை வித்தகன் என்றுகூடச் சொல்லலாம், இறைவன் என்று சொல்ல ஆரம்பித்தால்? காசு வாங்கிக்கொண்டு யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் புகழ்ந்து திரியலாம். ஆனால், காசு கொடுத்து ஒருவனைக் கடவுள் என்று கூப்பாடு போட்டால்? இங்கேதான் அறிவின் மயக்கம். இங்கேதான் ஆபத்தும்.

எந்த அளவிற்கு தன்னம்பிக்கையிழந்து, தோல்வி வரும் என்ற பயத்தில், நம்மால் முடியாததை இவனாவது செய்வானா என்ற எதிர்பார்ப்பில் இவன்பின் இத்தனை சாதாரண மக்கள் அலைந்திருக்கிறார்கள்! இவன்மூலம் காரியம் சாதிக்கும் தொடர்புகளை விருத்தி செய்துகொள்ள வந்த வியாபாரிகள், இவனது பக்தகோடிகளையும் கவர்வதற்காக வந்து கெஞ்சிய அரசியல்வாதிகளை விட்டுவிட்டாலும், இவன்பின் நின்று நம்பிக்கிடந்தவர்கள் கோடிக்கணக்கானவர்கள். அவர்கள் மீதுதான் என் அனுதாபம். அவர்களெல்லாம் பாவம் தைரியம் இழந்தவர்கள், தடுமாறுபவர்கள் வாழ்க்கையில் உழைப்பும் முனைப்புமே வெற்றியைத் தரும் என்பது தெரியாதவர்கள், தன் காலில் நிற்கும் வலிமை இல்லாமல் தூண் தேடியவர்கள்! அவர்களுக்காகப் பரிதாபப்படுகிறேன்.

தெய்வமே உயிரை இயந்திரங்களில் தொங்கவைத்திருந்தது என்ற போதும் அந்த தெய்வத்திடம் தன்னையே உயிர்ப்பித்துகொள்ளும் சக்தி இருந்தது என்று நம்பி ஏமாந்தவர்களின் சோகத்திற்கு என்ன ஆறுதல் கூறுவது. அவர்கள் அழட்டும். கண்ணீர் விடட்டும். நம்பி ஏமாறுவதும் மனித இயல்புதான். ஆனால் துக்கத்தின் அளவு நீளமில்லை,    கூட ஆறு மாதத்திற்கு மேல் தீவிரமாய் இருக்காது. அவர்கள் மீண்டு விடுவார்கள், மரணத்தினை ஏற்று அதையும் தாண்டி வாழ்க்கையை வாழ்வார்கள். ஆனால்….

இதே பக்தர்களில் இரு பிரிவினர் உருவாக வாய்ப்புள்ளது. சிலர் செத்தால் என்ன, சாமி அருவமாய் வந்து கூட இருக்கும் எனும் பிரமையில் வாழ்வைத் தொடர்வார்கள். பிறர், சரி இந்த ஒரு தெய்வம் செத்துப்போனாலும் இன்னும் புது தெய்வங்கள் இருக்கும் என்று தேடுவார்கள். அவர்களுக்காக மீதி இருப்பவற்றுள் ஒன்று வசீகரிக்கும் அல்லது புதிதாய் ஒன்று முளைத்துக் கடைவிரிக்கும். இவர்களுக்கு இத்துடனாவது இந்த மடமையை விடலாமே என்று மட்டும் தோன்றாது.

இது நுகர்வுக் கலாச்சாரத்தின் காலகட்டம். ஒரு பொருள் காலாவதியானால் இன்னொன்று உருவாக்கி, விளம்பரப்படுத்தி விற்கப்படும். அதே பொருள்தானே, அப்போதே அது பயன்படவில்லையே என்று நிராகரிக்காமல் புதிய வடிவ- விளம்பரத்தில் விற்கப்படும் அதே வெட்டியானதை வாங்க இன்னும் மக்கள் முண்டியடிப்பார்கள். இவர்களுக்காக அனுதாபம் தெரிவிப்பதைத் தவிர்த்து நான் என்ன செய்ய முடியும்?வரிசையில் நிற்பார்கள், இந்த வரிசையில் செத்த பாபா பக்தர்கள் முன்வரிசைக்கு முண்டியடிப்பார்கள், அவர்களுக்கு அனுதாபம் தெரிவித்துவிட்டு வேறென்ன என்னால் செய்ய முடியும்?

– டாக்டர் ருத்ரன் (பிரபர மனநல மருத்துவர்) தனது வலைப்பூவில் எழுதியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *