அட்சயதிருதியை
மங்களம் போவோம், இல்லை இல்லை சுபத்தில்தான் நிறைய நகைகள் பார்க்கலாம் என்றாள் அம்மா.
கீர்த்தனா, கீதா, ராசி, ரஞ்சனா, செலக்சன், செல்வி, பூரணம், பொன்னி, தாரகை, தங்க லிங்கம் என பத்துப் பதினைந்து நகைக்கடைகளைத் தேர்வு செய்து கடைசியில் அம்மாவின் பிடிவாதப்படியே சுபம் நகைக்கடைக்கே போவோம் என தீர்மானித்தனர் அம்மாவும் இரண்டு மகள்களும்.
அட்சய திருதியை என்பதால் கூட்டம் அதிகமா இருக்கும், சொன்னாக் கேளுங்க பார்த்துப் போங்க என்றார் அப்பா.
ஏங்க நாங்க மட்டும் தனியா போகவா? நீங்களும் புறப்படுங்க என்றாள் மனைவி ரேவதி.
நீங்க போயிட்டு வாங்க இன்னிக்கு நான் லீவு போடமுடியாதும்மா. மேலும், கூட்டம் அதிகமா இருக்கும்மா, எனக்குக் கூட்ட நெருக்கடி பிடிக்காது. நாளைக்குப் போயி இந்த நகையை வாங்கிக்கக் கூடாதா என்றார்.
ஏங்க உங்களுக்கு என்ன பைத்தியமா பிடுச்சுடுச்சு, இன்னிக்கு அட்சயதிருதியை, இன்னிக்கே நகைக்கடைக்குப் போயி ஒரு கிராமோ பத்துக்கிராமோ வாங்கினாத்தான் ராசி. இன்னிக்கு லீவைப் போடுங்க என கணவரை முறைத்துப் பார்த்தாள். பெட்டிப்பாம்பாய் அடங்கியவராக அனைவரும் புறப்படத் தயாரானார்கள்.
அவசர அவசரமாக ஆட்டோவில் ஏறி குலுங்கிக் குலுங்கி குறுக்குச் சாலை வழியாக புறவழிச்சாலையைப் பிடித்து சுபம் நகைக்கடையை அடையும் பொழுது 11 மணி ஆகிவிட்டது. கடையில் கூட்டத்தையும் கால் கடுக்க நிற்கும் மக்களையும் பார்த்துப் பிரமித்தவராய் நான் அப்பவே சொன்னேன். கூட்டத்தைப் பார்த்தீங்களா என்றார் அப்பா.
சும்மா இருங்க இன்னிக்கு நகை வாங்கியே ஆகணும். வரிசையில இடம் பிடிங்க என முறைத்தாள்.
நான்கு பேரும் கம்புகள் ஊன்றப்பட்டு கயிறு கட்டப்பட்டு இருந்த ஒடுக்கமான மனித வரிசையில் தஞ்சம் புகுந்தனர் காவலர்களின் தடியடியோடு.
ஒருமணி நேர சிறிய நகர்விற்குப்பின்தான் தெரிந்தது இந்த வரிசை முன்கூட்டியே டோக்கன் வாங்கிய வரிசை என்று. மனம் நோக அனைவரும் மாறி டோக்கன் வரிசையில் போய் நின்றனர். மூன்று மணி நேர கால ஓட்டத்திற்குப் பின் நகைக்கடையின் வாசலை எட்டிப்பிடித்தனர்.
போகும் கூட்டமும் வரும் கூட்டமும் ஒரே பாதையில் முன்னும்பின்னும் தள்ளப்படும் அந்த நெரிசலில் மூச்சுத்திணறி மயங்கி வீழ்ந்த பலரில் ரேவதியின் குடும்பத்தார்களும் கீழே தள்ளப்பட்டு மயங்கிக் கிடந்தனர்.
108ம், காவல் துறையுடன் தீயணைப்புத் துறையும் பரபரப்பாக வந்து கொண்டிருந்தது.
நகைக்கடையின் விளம்பரப் பலகைகள் தெருவெங்கும் சுபம் சுபம் எனக் காற்றில் ஆடிக்கொண்டிருந்தன.
– அணு கலைமகள்