சிறுகதை : குருசாமி

ஜனவரி 01-15

– கி.தளபதிராஜ்


ஊர் முழுதும் இருளில் மூழ்கிக் கிடந்த நள்ளிரவில் அந்த மேட்டுத் தெருவில் நின்று கொண்டிருந்த பேருந்தின் வெளிச்சத்தில் தூரத்திலிருந்து பார்த்தபோது கருமையாக ஏதோ சில உருவங்கள் நிற்பது மட்டும் தெரிந்தது.

 

காற்றோட்டத்தில் காதில் வீழ்ந்த சப்தம் அது அய்யப்ப பக்தர்களின் கூட்டம் என்பதை உணர்த்தியது. பேருந்தினை நெருங்கியபோது ஓட்டுநரும், கிளீனரும் சேர்ந்து பேருந்தை சுற்றிச்சுற்றி சரிபார்த்துக் கொண்டிருந்தனர்.

பக்தர்கள் இருமுடி கட்டிப் புறப்படுவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். ஆரவாரத்-தோடு காணப்பட்ட அந்தக் கூட்டத்தில், அமைதியாக சரணத்தை பாதி விழுங்கி பாதி வெளியில் சொல்லிக் கொண்டிருந்த அந்த கன்னிசாமி கண்ணனின் உடம்பு சிலிர்த்தது. கண்கள் படபடத்தன. ஏதோ ஒரு அச்சம் அவனை உலுக்கிக் கொண்டிருந்தது.

நேற்றுவரை அவன் செய்யாத குற்றங்கள் இல்லை. இன்று அவன் கன்னிசாமி. வழியனுப்ப வந்தவர்களெல்லாம், ஒவ்வொரு சாமி காலிலும் வீழ்ந்து ஆசி வாங்கினார்கள். நேற்றுவரை தூற்றியவர்கள்கூட இதோ கன்னிசாமி கண்ணனின் காலிலும் வீழ்கின்றனர். அவனுக்குள்ளேயே ஒரு மகிழ்ச்சி! அச்சத்திலும் ஒரு பெருமிதம்!

காரிருள் அகன்று காலைப் பொழுது புலர ஆரம்பித்தது. சாமிகள் முண்டியடித்து அவரவர் வசதிக்கேற்ப ஒருவரையொருவர் தள்ளி பேருந்தில் இடம்பிடித்துக் கொண்டிருந்தபோது வழியனுப்ப வந்தவர்களை நோட்டமிட்டுக் கொண்டிருந்த கன்னிசாமி கண்ணனின் கண்களில் அவள் தென்பட்டாள்.

தூக்கி வாரிய முடி! அகன்ற கண்கள். அந்தப் பெண் அவனை நோக்கி மெல்ல நடந்து வரவே அவளை உற்று நோக்கினான். அவள் அருகில் வந்து அவன் பாதங்களைத் தொட்டு வணங்கிய அந்தக் கணப்பொழுது, அந்தப் பரிசம், அவனுள் பாய்ந்து அவன் சிந்தனையை எங்கோ கொண்டு சென்றது.

மற்ற சாமிகளின் அய்யப்ப சப்தம் காதுகளில் நுழைந்து இவன் மீண்டும் சுய நினைவுக்கு வர சற்று நேரம் பிடித்தது.

அவனுக்குப் பயத்தில் மனது படபடத்தது! அவன் வாய் எல்லோரோடும் சேர்ந்து சரணம் சொல்லிற்று.

பேருந்து புறப்பட ஆயத்தமானதும், சாமிகள் காட்டுக் கூச்சலாகச் சேர்ந்து சரணம் போட்டார்கள். சில வினாடிக்குப் பின், அல்லோல கல்லோலப்பட்டு இருந்த அந்த இடத்தை அமைதிப்படுத்தி பேருந்து புறப்பட்டது!

கண்ணனின் மனம் மீண்டும் அந்தக் கன்னிப்பெண் மேல் படர்ந்தது! அவளின் நினைவு எழும்போதெல்லாம் தான் தவறு செய்வதாக நினைத்து அந்த எண்ணத்திலிருந்து மாறிக்கொள்ள முயன்றான். நேற்று வரை ஊர்ப் பெண்களிடம் மோசமாக நடந்து கொண்டது, தெருச் சண்டை, சாராய விற்பனை இப்படி எல்லா நிகழ்ச்சிகளும் மாறி மாறி எழுந்து அவனை மருட்டியது.

எந்த மனச் சலனமும் இல்லாததுபோல் மற்ற குருசாமிகள் உற்சாகமாய்ச் சரணம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இவர்களால் மட்டும் எப்படி எந்தக் கவலையும் இன்றி, சரணம் சொல்ல முடிகிறது? இந்தச் சாமிகள் எந்தத் தவறையும் செய்யவில்லையா?

அவன் மனம் தன்னையும் அந்த குருசாமிகளையும் ஒப்பிட்டுப் பார்த்தது.

ஓ! அவர்கள் எங்கே! நான் எங்கே! இந்தச் சின்ன வயதில் எத்தனை தவறுகள்! குற்றங்கள்!

சாமி

என்ன சாமி? _ சரணத்தில் ஆழ்ந்திருந்த குருசாமி திரும்பி கண்ணனைப் பார்த்தார்.

சாமி நீங்கள் சபரி மலைக்குப் போக வேணடிக்கொண்டு மாலை போட்ட பிறகு ஏதாவது குற்றம் செய்ததுண்டா?

இந்தக் கேள்வி குருசாமியையே ஒரு நிமிடம் சங்கடத்தில் ஆழ்த்தியது என்றாலும் சமாளித்தவாறு தொடர்ந்தார்.

இரண்டு வருடங்கட்கு முன் நான் மாலை போட்டிருந்தபோது எனக்குக் காய்ச்சல் வந்துவிட்டது. டாக்டரிடம் காண்பித்து மருந்து சாப்பிட்டேன். அந்த நேரத்தில் வெந்நீரில் குளிக்க வேண்டியதாயிற்று. அதை நினைத்து பலநாள் வருந்தியிருக்கிறேன்.

கண்ணனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவுதானா? நம்பக்கூட முடியவில்லையே? ஒருவேளை இந்தச் சாமி தான் செய்த தவறையெல்லாம் மறைக்கிறாரோ?

அது சரி! சாமிக்குக்கூட காய்ச்சல் வருமா? இது என்ன வினோதம்? மாலை போட்ட நாளில்கூட பவர் இல்லை என்றால் இதனால் என்ன பயன்? _ அவன் சிந்தனை விரிந்து சென்ற அதே வேகத்தில் திடீரென ஏற்பட்ட அச்சம் அவனைச் சிந்திக்க விடாமல் முடக்கியது.

ஓ! மேலும் மேலும் குற்றம் செய்கிறேனே! கடவுள் மீதே சந்தேகமா? கடவுளே! சரணம் அய்யப்பா!!

பயத்தில் அவன் வாய் சரணத்தைச் சற்று வேகமாக ஒலித்தது.

மதிய உணவு வேளை நெருங்கியது. போட்டி போட்டு உணவுப் பொட்டலங்களை எடுக்க வந்த சாமிகளை நோக்கி, சாமிகளெல்லாம் அவரவர் இடத்திற்குப் போகவேண்டும். எல்லாச் சாமிக்கும் கொடுக்க வேண்டியுள்ளதால் ஆளுக்கு ஒரு பொட்டலம்தான். இரண்டு மூன்று பொட்டலங்கள் எடுத்த சாமி திருப்பித் தந்துவிட வேண்டும் என்று குருசாமி கூச்சலிட்டார்.

இது என்ன சாப்பாட்டுச் சாமிகள்!

கேரளாவைப் பற்றி ஏதேதோ கவர்ச்சியாய்க் கேள்விப்பட்டுத்தான் கண்ணன் கன்னிசாமி ஆனான். ஆனால் நிலைமை வேறாக இருந்தது, வேதனையாயிருந்தது.

பேருந்து மலைப்பகுதியில் ஏறிச் சென்றுகொண்டிருந்தபோது அங்கே பெரிய பள்ளத்தில் பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று தலைகீழாகப் படுத்து ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருந்த காட்சி சாமிகளின் கண்களில் பட்டது.

சரணம் அய்யப்பா!

எத்தனை சாமி மண்டையப் போட்டுதோ? _ இது ஒரு கன்னிசாமியின் குத்தல்.

ஒழுங்கா முறையா பயபக்தியா இருந்தா தானே? எந்தச் சாமி என்ன பாவம் செஞ்சிட்டு வந்துச்சோ? இது குருசாமி.

கண்ணனுக்குப் பயம் அதிகரித்தது. நமக்கும் இதே நிலைதானோ? அவன் இதயம் படக் படக் என்று வேகமாய் அடித்துக் கொண்டது.

அந்தப் பேருந்தில் இருந்த அத்தனை சாமியும் கேடியா யாரோ ஒரு சாமி செய்த தவறுக்கு அத்தனை சாமியும் பலியாவானேன்? கண்ணனுக்கு இந்தக் கேள்வியை குருசாமியிடம் கேட்க வேண்டும் போல் இருந்தது.

பேருந்து ஓரிடத்தில் நின்றதும் குருசாமி கட்டளைப்படி எல்லா சாமிகளும் இறங்கி மலை மீது நடக்க ஆரம்பித்தது. சரணங்கள் முழங்க சாமிகள் வேகமாய் முன்னேறின.

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை குண்டும் குழியும்… வேகமாக சொல்லிக்கொண்டு முன்னே நடந்த ஒரு சாமி அம்மா என்று கத்தியது. எதிரே கிடந்த சின்னக் கல்லில் கட்டை விரல் இடித்து இரத்தம் வழிந்தது.

கல்லும் முள்ளும் குத்தினா தெரியும்
குண்டும் குழியும் விழுந்தா புரியும்

என்று எங்கோ கேட்டது நினைவில் வர கண்ணனுக்குச் சிரிப்பு வந்தது. பயத்தில் சிரிப்பை அடக்கிக் கொண்டான்.

அய்யோ! அய்யப்பா! நான் திரும்பத் திரும்பக் குற்றம் செய்கிறேனே! என்னை மன்னித்து விடு. சாமி சரணம் கண்ணனின் உதடுகள் மீண்டும் சரணத்தை ஒலித்தது.

மலையில் ஒரு பொழுது இரவு தங்க நேர்ந்தது. பகல் முழுவதும் நடந்த களைப்பில் எல்லாச் சாமிகளும் உறங்கிக் கொண்டிருக்க அன்று இரவெல்லாம் கண்ணன் தான் செய்த தவறுகளையெல்லாம் நினைத்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தான். நீண்ட மனப் போராட்டத்திற்குப்பின் நானெல்லாம் மலைக்கு வந்ததுதான் தவறோ என்று நினைத்தான்.

மறுநாள் பொழுது விடிந்து அய்யப்பன் தரிசனமெல்லாம் முடித்து சாமிகள் தாங்கள் வந்த பேருந்தைத் தேடிப் பிடித்து ஊருக்குப் புறப்பட்டன. சிறிது நேரம் சென்றதும் கேரளாவில் ஒரு இடத்தில் பேருந்து நின்றது.

பேருந்து இங்கு மூன்று மணி நேரம் நிற்கும். எல்லாச் சாமிகளும் சுற்றிப் பார்த்துவிட்டு சரியாக ஒரு மணிக்கு வந்துவிட வேண்டும் என்று குருசாமி கட்டளையிட்டார்.

கண்ணனுக்கு ஆயுள் தண்டனையிலிருந்து தப்பியது போல இருந்தது. விட்டால் போதுமென்று வேகமாகச் சற்று தூரத்திலிருந்த பெட்டிக் கடையை நெருங்கினான். அங்கு சில பருவப் பெண்கள் சிரித்துச் சிரித்து வியாபாரம் செய்தது தங்களை விற்பதற்கென்பது பார்த்த மாத்திரத்திலே புரிந்தது.

தான் புகைபிடிக்க வந்ததை வேறு யாரும் பார்த்து விடுவார்களோ என்ற பயத்தில் கடைக்குச் சற்றுத் தள்ளி திருட்டுத்தனமாய் புகைத்துக் கொண்டிருந்த கன்னிசாமி கண்ணனின் பார்வையில் குருசாமிகள் ஒரு சிலர் அந்தக் கடையை நோக்கி வருவது தெரிந்தது. இவர்களுக்கு இங்கு என்ன வேலை. புருவத்தை உயர்த்தி மறைந்து நின்று நோட்டமிட்டான். வேகமாக வந்த குருசாமிகள் அங்கு நின்ற பெண்களைப் பார்த்துச் சிரிக்க அவர்களும் சிரித்தார்கள். இந்தச் சிரிப்பு இவர்கள் ஒருவரையொருவர் முன்பே அறிந்தவர்கள் என்பதைக் காட்டியது. அடுத்த கணம் குருசாமிகள் ஆளுக்கொரு பெண்ணுடன் அருகிலிருந்த விடுதியில் அவசர அவசரமாய் நுழைந்தனர்.

கன்னிசாமி கண்ணனின் சிந்தனையில் மின்னல் தெரிந்தது. தான் சபரிமலைக்கு வந்ததே தவறோ? என்று நினைத்தவன், தான் சரியான இடத்திற்கு வந்ததை உணர்ந்தான்.

மங்கையொருத்தியைக் கைப்பிடித்தான்!

மகரஜோதி மகிமை அவனுக்குப் புரிந்துவிட்டது!!

இனி அவனும் குருசாமி!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *