இந்தியாவில் நீதித்துறைக்குப் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. ஒரு கோடி பேருக்கு எட்டு நீதிபதிகள் என்ற அளவிலேயே உள்ளனர். வெளிநாடுகளில் 10 லட்சம் பேருக்கு 50 நீதிபதிகள் என்ற அளவில் உள்ளனர். இங்கு வழக்குகள் தாக்கல் ஆவதன் எண்ணிக்கை அதிகரிக்கிறது. பொதுமக்கள் பிரச்சினை-களுக்குத் தீர்வுகாண நீதிமன்றங்களை நாட வேண்டும். கட்டப் பஞ்சாயத்தை மக்கள் நாடக்கூடாது. அதை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.
– நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா, உச்ச நீதிமன்றம்
நல்ல பள்ளி, புகழ்பெற்ற பள்ளி, மோசமான பள்ளி… என்ற பிரிவினைகள் எங்கள் நாட்டில் இல்லை. வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகபட்சம் 21 பேர்தான். எங்கள் மாணவர்கள் வகுப்பறையில் இருக்கும் நேரம் மிகவும் குறைவு. ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம் வகுப்பறையில் இருப்பதாலேயே மாணவர்கள் கற்றுக் கொள்வார்கள் என்பதை நாங்கள் நம்பவில்லை.
ஹெல்சின்கி பகுதியில் 44 வேறுபட்ட தாய்மொழிகளைக் கொண்ட புலம்பெயர் குழந்தைகள் படிக்கிறார்கள். அவர்களுக்கு 44 மொழிகளில் கற்பிக்கப்படுகிறது. எங்களுக்கு இது சவாலான வேலைதான் என்றாலும், தாய்மொழியைக் கற்பது மிகவும் அவசியம். தாய்மொழியில் சரியாக எழுத, பேச, படிக்க, சிந்திக்கக் கற்றுக்கொள்ளும்போதுதான் ஃபின்னிஷ், ஆங்கிலம் போன்ற மொழிகளைச் சரியாகப் படிக்க முடியும்.
– ஹென்னா மரியா விர்க்குணன், மேனாள் கல்வி அமைச்சர், பின்லாந்து
தீவிரவாதத்தைவிட மோசமானது இணையக் குற்றங்கள். ஆனால், அதற்கு எதிரான வலுவான சட்டங்கள் நம்மிடம் இல்லை. சில சமயங்களில் இதுபோன்ற குற்றங்களைக் கையாளும்போது உச்ச நீதிமன்றமே திகைத்து நிற்கிறது. ஆபாசப் படங்களை வளர்ந்த நாடுகள் தடை செய்துள்ளன. ஆனால் இந்தியாவில் அதைத் தடை செய்யும் சட்டங்கள் இல்லை.
– எஸ்.மோகன், மேனாள் நீதிபதி, உச்ச நீதிமன்றம்
தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுத்து கருத்துச் சொல்வதால் பல தரப்பினரின் எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பொது-வாழ்க்கைக்கு வந்துவிட்டால் மானம் – அவமானம் பார்க்கக் கூடாது என்ற பெரியாரின் வார்த்தைகளே எனக்கு வழிகாட்டுகின்றன. என் கருத்துகளுக்காக தொலைபேசியில் மிரட்டுவார்கள்; பொது இடங்களில் அவமானப்படுத்தும் வகையில் கேள்விகள் கேட்பார்கள். ஆனால், எதிர்ப்புகளின் அற்பத்தனங்களைப் புரிந்துகொண்டால், அது வலிக்காது!
– கவிஞர் மனுஷ்யபுத்திரன்