12,04,00,000 ஆண்டுகளுக்கு முன்பே…!
பகவத் கீதையில் மனித குலத்துக்கு ஏற்ற கருத்துகள் உள்ளதாம். அது மனிதனுக்காக சொல்லப்பட்டதாம். அது மனிதனுக்காகத்தான் சொல்லப்பட்டது என்பதை ஒத்துக் கொள்கிறோம். அதாவது, உயர்ஜாதி மனிதன் கீழ்ஜாதி மனிதனை ஒடுக்க, ”இது கடவுளாலேயே உண்டாக்கப்பட்டது.அதனால் நீ(கீழ் ஜாதிக்காரன். இதற்குக் கட்டுப்பட்டே ஆகவேண்டும்” என்ற காரணத்திற்காக சொல்லப்பட்டது.
அதெல்லாம் இருக்கட்டும், ”யாருமே இல்லாத கடையில யாருக்காக டீ ஆத்துறே?” என்பது போல மனித குலமே தோன்றாத காலத்தில் மனிதனுக்காக சொல்லப்பட்டது என்பதை எப்படி ஏற்றுக் கொள்வது?
கீதையை அய்ந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு சொன்னான் என்பதைக்கூட நம்பித் தொலைத்து விடுகிறோம். ஆனால்…….
… மனுவின் தோற்றத்துக்கு முன்னால், பகவானால், அவரது சீடனான சூரிய தேவன் விவஸ்வானுக்கு கீதை உபதேசிக்கப்பட்டதை ஏற்றுக் கொள்ளும் நிலையில், கீதை, 12,04,00,000 (பன்னிரண்டு கோடியே நான்கு லட்சம்) ஆண்டுகளுக்கு முன், உபதேசிக்கப்பட்டதாக உத்தேசமாகக் கணக்கிடலாம். மனித சமுதாயத்திலோ, இது இருபது லட்சம் ஆண்டுகளுக்கு மேல் வழக்கில் இருந்து வந்துள்ளது. 5000 ஆண்டுகளுக்கு முன் இது மீண்டும் ஸ்ரீ கிருஷ்ணரால் அர்ஜுனனுக்கு உபதேசிக்கப்-பட்டது……….
இந்த செய்தி, பக்தி வேதாந்த புத்தக நிறுவனம் வெளியிட்ட; அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா (ஸ்தாபக ஆசாரியர் : அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்) (சமஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலத்தில்) எழுதி, ஆத்ம தத்வ தாஸ் தமிழாக்கம் செய்த பகவத் கீதை உண்மையுருவில் என்ற நூலில் அத்.4 பக்கம் 231 ல் உள்ளது.
சத்ய யுகம் 172800ஆண்டுகள், திரேதாயுகம் 1296000 ஆண்டுகள், துவாபரயுகம் 864000 ஆண்டுகள், கலியுகம் 432000ஆண்டுகள், மொத்தம் 4320000 (நாற்பத்து மூன்று லட்சத்து இருபதாயிரம்) ஆண்டுகள்தான்.
இதில், கலியுகம், பிறந்து 5000 ஆண்டுகள்தான் ஆகிறது,எனும்போது, கீதை, 12,04,00,000 (பன்னிரண்டு கோடியே நான்கு லட்சம்) ஆண்டுகளுக்கு முன்பே, மனிதனுக்காக உபதேசிக்கப்பட்டதாக சொன்னால், கடவுள் நம்பிக்கையுள்ள மூடனும் நம்ப மாட்டானே!
– க.அருள்மொழி