’மொழிபெயர்ப்பு” எங்கள் மொழி!

டிசம்பர் 16-31

அண்மையில் இணையதளங்களில் அய்ரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்ற நிகழ்வினைப் பற்றிய

காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. வெவ்வேறு மொழிகளைப் பேசும் இத்தாலி, ஜெர்மனி, ஃப்ரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்ட இருபத்தெட்டு நாடுகள் இணைந்த இந்த ஒன்றியம் வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு மிகச் சிறந்த சான்றாக உள்ளது. 1951-ல் அய்ந்து நாடுகள் மட்டும் கொண்ட ஒன்றியமாகத் தொடங்கப்பட்ட இந்த மன்றத்தில்  அடுத்தடுத்து ஆஸ்ட்ரியா, பல்கேரியா, சைப்ரஸ் போன்ற பல நாடுகள் இணைந்ததுடன், கடந்த 2013-ஆம் ஆண்டில் குரோஷியாவும் இணைந்ததனால் இருபத்தெட்டு நாடுகள் கொண்ட பாராளுமன்றமானது. உங்கள் மொழி எதுவென்று கேட்டால், மொழிபெயர்ப்பு என்கிறார்கள் அய்ரோப்பிய ஒன்றியத்தினர். ஒவ்வொரு நாட்டினைச் சேர்ந்த உறுப்பினருக்கும் தன் மொழியில் பேசும் உரிமையும், அந்த நேரத்திலேயே அவருடைய உரையை மற்ற நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் தங்கள் மொழியில் கேட்கும்வகையில் அதனை மொழிபெயர்க்கும் வசதியும் கொண்டதாக அந்த அவை உள்ளது. உறுப்பினர் அனைவருக்கும் தத்தமது மொழி, மத, பண்பாட்டினைப் போற்றும் அடிப்படை உரிமை வழங்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். உரை மட்டுமல்லாமல் எழுத்து வடிவிலான ஆவணங்களும் அனைத்து அய்ரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படுவதாகப் பெருமை பொங்கத் தெரிவிக்கின்றனர் அக்காணொளியில்!

ம்ம்ம்ம்… அறுபத்தேழு ஆண்டுகளுக்கு முன்பாகவே உருவாக்கப்பட்ட இந்திய மாநிலங்களின் ஒன்றியம் என அழைக்கப்படுகின்ற இந்தியா – இதற்கு வழிகாட்டியாக இருந்திருக்க வேண்டும். அப்படி இல்லாதது மட்டுமன்று, பெரும்பான்மையான மக்கள் மீது ஹிந்தி யைத் தேசியமொழியாகவும், சமஸ்கிருதத்தைப் புனித நூலாகவும் திணிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. வேற்றுமையில் ஒற்றுமை  என்பது சட்டநூலிலும், பள்ளிப் பாட  நூல்களிலும் மட்டும் இருக்கின்ற ஒரு சொல்லாக ஆக்கப்பட்ட அளவு, மக்கள் மனதில் – குறிப்பாக ஆதிக்க அரசியல் தலைவர்கள், பெரிய பொறுப்புகளை வகிக்கும் அரசு அதிகாரிகள் எண்ணத்தில் ஒட்டாமல் போனதுதான் அவலம்.

– இறைவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *