அண்மையில் சென்னையில் நடைபெற்ற தலையங்க விமர்சனம் நூறாவது வார அமர்வு நிகழ்ச்சியில் பங்குபெற்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த தோழர் வேல்சாமி-ரேகா ஆகியோர் தன் இரட்டைக் குழந்தைகளுக்குப் பெயரிடச் சொல்லி வேண்ட, தலைவரும் பெண் குழந்தைக்கு அறிவுச்செல்வி என்றும், ஆண் குழந்தைக்கு அன்புச்செல்வன் என்றும் பெயரிட்டு மகிழ்ந்தார். உடனே அங்கு அமர்ந்திருந்த கருஞ்சட்டைத் தோழர்களிட-மிருந்து பலத்த கரவொலி எழுந்தது. அருகில் அமர்ந்திருந்த தோழர் ஒருவர் இந்த மகிழ்ச்சி ஆர்ப்பரிப்பிற்குக் காரணம் என்ன என்று வினவினார்.
அம்மா என்றால் அன்பு, அப்பா என்றால் அறிவு என்றும், அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம். தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம் என்றும், ஈன்று புறந்தருதல் தாய்க்குக் கடனே, சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே என்றும் ஏதோ பெண் என்பவள் அறிவு என்பதற்குச் சற்றும் தொடர்பில்லாதவள் போன்றும், அன்பினைத் தருவது மட்டும்தான் அவள் கடமை என்பது போன்றும், ஆண் என்றால் அறிவினைத் தருபவர் என்றும், அன்பு செலுத்துவது என்பது அவனுக்குத் தொடர்-பில்லாத துறை என்பது போன்றுமே சொல்லப்பட்டு வந்த, இன்றும் பெரும்பகுதி மக்களால் எண்ணப்படுதல் காணலாம். பெண்குழந்தைக்கு அறிவுச்செல்வி என்றும், ஆண் குழந்தைக்கு அன்புச்செல்வன் என்றும் பெயர் சூட்டலின் மூலம் மாற்றியமை பெண்ணுரிமைக் காவலர் தந்தை பெரியார் அவர்களின் அடியொற்றி, அவர் சிந்தனைகளி-லிருந்து சிறிதும் பிறழாத திராவிடர் கழகத் தலைவரின் சிந்தனையினைத் தெள்ளத்-தெளிவாகக் காட்டியது.
மேலும், அங்கு நிகழ்ந்த சமூக மாற்றமும், ஊடகங்களும் என்ற கருத்தரங்கத்தில் பல்வேறு ஊடகங்களிலும் பணிபுரியும் வாய்ப்பு பெற்ற நம் இளைஞர்கள் கலந்துகொண்டு திராவிட இயக்கங்களின் வளர்ச்சி, தேக்கநிலை, செயல்கள், ஊடகங்களின் புறக்கணிப்பு போன்றவை குறித்து கவலை தெரிவித்து பேசியவற்றிற்குப் பதில் அளிக்கும்விதமாக அவர் உரையில் திராவிடர் கழகம் ஊடகங்களை நம்பி இல்லை. எந்தவொரு ஊடகமும் ஆதரவு தராதபோதும் தனியாக நின்று சமுதாயப் பணிகளை எந்தத் தொய்வும் இல்லாமல் செய்து முடிக்கும் என்று முழங்கியபோது எதிர்ப்பைத் தாண்டி, புறக்கணிப்புகளை மீறி, ஊடக மறைப்புகளைக் கடந்து வளர்ந்த இயக்கம் இது; எல்லாவற்றையும் கடந்து மக்களிடம் நேரடியாகத் தொடர்புள்ள இயக்கம் இது. அதைத் தொடர்ந்து செய்வோம் என்று சொன்ன துணிச்சல், தந்தை பெரியாரை நம் கண்முன்னே நிறுத்துவதாக இருந்தது.
– இறைவி