பதவி விலகுவாரா போப்?

டிசம்பர் 01-15

– மருத்துவர் கணேஷ் வேலுச்சாமி

உயிரினத் தோற்ற வளர்ச்சிக் கோட்பாட்டுக்கோ, பெருவெடிப்புக் கோட்-பாட்டுக்கோ ஒப்புதல் தருவதற்கு போப் யார்? அவரைக் கேட்பதைவிட ஒரு பிச்சைக்காரரையோ, ஒரு குழாய்ப் பணியாளரையோ,   பெருக்கிச் சுத்தம் செய்யும் ஒரு பணியாளரையோ அல்லது ஒரு ஜோதிடரையோ நீங்கள் கேட்டிருக்கலாம்.

 

எப்போதுமே அறிவியலைத் தோற்கடிப்-பதற்காக தங்களால் இயன்ற அனைத்தையும் கிறித்தவ தேவாலய அமைப்புகள் தொடர்ந்து செய்துகொண்டுதான் இருக்கின்றன.

பைபிளைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று சொல்வதுடன் போப் நிறுத்திக் கொள்ள வேண்டும்; அறிவியலைப் பற்றி என்ன நினைக்கிறார் என்று அவர் கூறத் தேவையில்லை; அந்த வேலை அவருடையதும் அல்ல.  தியோடிசி என்று நகைச்சுவையாக அழைக்கப்படும் சமய ஆய்வியல் என்ற அவருக்கே உரித்தான பொருளைத் தாண்டி மற்ற எந்த ஒரு பொருளைப் பற்றியும் பேசுவதற்கு அவருக்குத் தகுதி இல்லை; அவர் பேசக்கூடாது.

அவர் ஏற்றுக் கொள்வதால் மட்டுமே எந்த ஒரு அறிவியல் கோட்பாடும் மிகச் சரியானதாக ஆகிவிடப்போவதில்லை. உயிரினத் தோற்ற வளர்ச்சி மற்றும் பெருவெடிப்பு ஆகிய கோட்பாடுகளை அவர் ஏற்றுக் கொண்ட போதிலும், படைப்பாளி கடவுள் என்ற காலாவதியாகிப் போன கருத்தை அவர் இன்னமும்  முற்றிலுமாகக் கைவிட்டுவிட-வில்லை. இந்த இரு கோட்பாட்டு நடைமுறை-களையும் தொடங்கி வைத்ததாகக் கருதப்படும் கற்பனைப் படைப்பாளியான கடவுள் இவற்றுக்குத் தேவை என்றே இன்னமும் அவர் வலியுறுத்தி வருகிறார். இது எப்படி இருக்கிறது என்றால், கோல் கம்பங்களை இடம் மாற்றி வைப்பது போலவும், ஒக்காமின் சவரக் கத்தியால் அறுத்து சரிசெய்யப்பட வேண்டியது போலவும் இருக்கிறது.

ஆனால் உண்மையிலேயே போப் பிரான்சிசின் கருத்துகள்,  உயிரினத் தோற்ற வளர்ச்சி என்ற கருத்துக்கான கதவைத் திறந்தவரும், பெருவெடிப்புக் கோட்பாட்டை ஆர்வத்துடன் 1996இல் வரவேற்றவருமான பயஸ் 12ஆம் போப்பின் முன்னேற்றப் பணிகளை ஒட்டியே அமைந்துள்ளன;  ஜான் பால் 2ஆவது போப் ஒரு படி மேலே சென்று உயிரினத் தோற்ற வளர்ச்சிக் கோட்பாடு ஒரு கருதுகோள்  என்பதைவிட உயர்ந்தது என்றும் நிறைந்த பயனளிக்கும் வகையில் மெய்ப்பிக்கப்-பட்ட உண்மை என்றும் தெரிவித்துள்ளார்.

அறிவியலைப் பொறுத்தவரை, அவர் என்ன கூறுகிறார், நான் என்ன கூறுகிறேன், நீ என்ன கூறுகிறாய்,  அதிகாரம் பெற்ற எவர் ஒருவரும் (அது டார்வினாக இருந்தாலும் சரி, அய்ன்ஸ்டீனாக இருந்தாலும் சரி அல்லது வேறு எவராக இருந்தாலும் சரி) என்ன சொல்கிறார்  என்பதோ,  முக்கியமானதோ அல்ல. இதில் முக்கியமானது என்னவென்றால், சான்றுகளும், ஆதாரங்களும் என்ன காட்டுகின்றன என்பதும் எதன் அடிப்படையில் அவர்கள் கூறுகிறார்கள் என்பதும்தான்.

உயிரினத் தோற்ற வளர்ச்சிக் கோட்பாட்டுக்கான சான்றுகளும், ஆதாரங்களும் ஏராளமாக இருக்கின்றன. நல்ல நிலையில் உள்ள மனம் கொண்ட எவர் ஒருவராலும் அதனை மறுக்க இயலாது. வட்டமான ஒரு ஓட்டையில் சதுரமான ஆப்பு ஒன்றினை அடிக்கவே போப் முயல்கிறார். அறிவியலின் சாதனைகளைப் பறித்துக் கொள்ள போப் முயல்கிறார். தங்களின் நம்பிக்கைக்கும் அறிவியலுக்கும் இடையே எந்தவிதப் பிணக்கும் இல்லை என்று தன்னைப் பின்பற்றுபவர்கள் நினைக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அறிவியலுக்கும் மதத்திற்கும் இடையே எந்தவித ஒத்திசைவின்மையும் இல்லாமல் இருப்பது போன்று நடிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

இதுவே ஒரு மாபெரும் தவறாகும். மதமும் அறிவியலும் எதிர்எதிர் துருவங்களாகும். அவை சந்திப்பதற்கான வாய்ப்பே இல்லை. அறைகுறை அறிவு ஆபத்தானது என்பதை நாமனைவரும் அறிவோம். இப்போது சற்று கற்பனை செய்து பாருங்கள். அறைகுறை அறிவே இவ்வளவு ஆபத்து நிறைந்தது என்றால், அறியாமை என்பது எவ்வளவு பேராபத்தானதாக இருக்கும்? அறிவியல் = மாற்றமுடியாத 100 விழுக்காடு சான்றுகளும் ஆதாரங்களும் கொண்டது; எப்போதுமே திறந்த மனம் கொண்டது; தவறு என மெய்ப்பிக்கப்பட்டால் மாற்றிக் கொள்ளத் தயாராக இருப்பது; விமர்சனங்களைத் தாங்கிக் கொள்வது; தன்னைத் தானே திருத்திக் கொள்ள இயன்றது.

மதம் = எந்தவித சான்றுகளோ ஆதாரமோ இல்லாத நிலையிலும், 100 விழுக்காடு முட்டாள்தனமான, கட்டுக் கதைகளை உண்மையெனக் கூறுவது; எதைப் பற்றியும் கேள்வி கேட்க அனுமதிக்காதது; எப்போதுமே மூடிய மனம் கொண்டது; விமர்சனத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாதது.

சாதாரணமான பொதுஅறிவின்படி பார்த்தாலும், உயிரினத் தோற்ற வளர்ச்சி நிகழ்ந்தது என்றால், அப்போது  கடவுள்தான் அனைத்து உயிர்களையும் படைத்தார்  என்ற கோட்பாட்டை அது பொய்யானது என்று மெய்ப்பித்துவிடுகிறது; அதனால் ஆதாம், ஏவாள் கோட்பாடும் மறுக்கப்பட்டுவிடுகிறது. ஆதாமும் ஏவாளும் இல்லாமல் போனால் முதல் பாவம் என்பதோ, பிறப்புமூலம்  என்பதோ இல்லை. சிலுவையில் அறையப்படுவதற்கான ஒரு பலி ஆடு தேவையில்லை! தலைமுறை தலை-முறையாக நிலைத்து தொடர்ந்து வரும் சில பாவங்களில் இருந்து மன்னிப்பு அளித்து மீட்கப்படுவதற்கான தேவையும் இல்லை! ஒட்டுமொத்த மதம் என்னும் மாபெரும் கட்டமைப்பு சீட்டுக் கட்டினால் கட்டப்பட்ட கோபுரம் போல் சரிந்துவிடுகிறது! அது ஒட்டு மொத்த கிறித்தவ மதத்தையும் மற்றும் ஆப்ரகாமைப் பின்பற்றும் இதர மத நம்பிக்கையாளர்களையும் தேவைப்படாததாக ஆக்கிவிடுகிறது. பிறப்புமூலம் என்னும் கருத்து எப்போது ஓர் உருவகக் கதையாக ஆகிவிடு-கிறதோ, பின்னர் பைபிளில் உள்ள எதனை உண்மையென்று கருதமுடியும்? பைபிளில் உள்ள அனைத்தையும் உருவக, கற்பனைக் கதை என எடுத்துக் கொண்டு ஓரினச் சேர்க்கையாளர்களை ஏன் அவர்கள் சகித்துக் கொண்டு நேசிக்கக்-கூடாது? குடும்பக் கட்டுப்பாட்டை ஏற்றுக் கொண்டு, கருக்கலைப்புக்கு பெண்களுக்கு ஏன் உரிமை அளிக்கப்படக்கூடாது? கதைப் புத்தகங்களுக்குப் பதிலாக ஆப்பிரிக்க நாடுகளில் ஏன்  கருத்தடை சாதனங்களை விநியோகிக்கக்-கூடாது? மாதவிலக்கு ஆகும் பெண்களை பாதிரியார்களாகவும் போப்புகளாகவும் ஏன் நியமிக்கக்கூடாது?

அறிவியலும் மதமும் எப்போதுமே ஒன்றுக்கு ஒன்று எதிரானதாக, முரண்பட்டதாக இருப்பவையாகும். உயிரினத் தோற்ற வளர்ச்சி மற்றும் பெருவெடிப்புக் கோட்பாடுகள் பற்றிய அவரது அறிக்கையை போப் மனப்பூர்வமாக வெளியிட்டிருந்தாரானால், அவர் தனது போப்பாண்டவர் பதவியைத் துறக்க வேண்டும்; அந்தப் பதவிக்கான சலுகைகளை, வசதிகளை அவர் துறக்க வேண்டும்.

மதம் எப்போதெல்லாம் அறிவியலை எதிர்கொள்ளுகிறதோ, அப்போதெல்லாம் இறுதி வெற்றி அறிவியலுக்கே கிடைக்கிறது. அதனால் ஏற்படும் அவமானங்களை மதங்கள் அமைதியாக விழுங்கிக் கொண்டு, அறிவியல்-தான் சரியானது என்று தயக்கத்துடன் ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதன் பிறகு, இரண்டாம் நிலைப் பகுத்தறிவு மற்றும் உள்நோக்கம் கொண்ட காரண காரிய விளக்கங்களினால், அறிவியலுக்கும் மதத்துக்கும் இடையே வேறுபாடு இல்லை, முரண்பாடு இல்லை என்று கூறி மக்களை எவ்வாறாவது ஏமாற்றவே அவர்கள் முனைகின்றனர்.
இறுதியாக ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன். நாம் எங்கிருந்து வந்தோம் என்பதைப் பற்றி மதங்கள் கூறுவது தவறாக இருக்கும் நிலையில்,  இறப்புக்குப் பிறகு எங்கே நாம் போகப்போகிறோம் என்பதைப் பற்றி அவர்கள் கூறும் அடிப்படை ஆதாரமற்ற கதைகளை நாம் ஏன் நம்ப வேண்டும்?

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *