அளவிட முடியாத ஆனந்தத்தில் இருந்தனர் கோவிந்தனும் அவன் மனைவி லெட்சுமியும். பதின்மூன்று ஆண்டுகளாய் தன்னுடைய நிலப்பிரச்சினையில் கோர்ட் கேஸ் என அலைந்து திரிந்து அலுத்துப் போனவர்களுக்கு இன்று கேஸ் ஜெயித்து ஒன்றரை இலட்சம் ரூபாயைக் கையில் வாங்கியதால் மனம் மகிழ்ந்து போயிருந்தனர்.
ஒன்றரை இலட்சத்தையும் மனைவியின் கையில் கொடுத்து இந்தப்பணத்தை வாங்க, தான் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டேன் எனப் பெருமை பேசிக்கொண்டிருந்தார் கோவிந்தன். நீங்க பட்ட கஷ்டத்துக்குக் கை மேல பலன் கெடச்சிருச்சு என்றாள் லெட்சுமி. அடி இவளே ஆண்டவன் கொடுத்ததுன்னு சொல்லு என்றார். போ போ பணத்தைப் பத்திரமா சாமி அறையில சாமி படத்துக்-கிட்டவை. கை கால் அலம்பிட்டு வர்றேன். சாமிக்குப் பூஜை பண்ணி சாமியக் கும்பிட்டுரு வோம் என்றார். அத்தனையும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள். லெட்சுமி மீண்டும் மீண்டும் எண்ணி எண்ணி, தொட்டுத் தொட்டுச் சந்தோசப்பட்டுக்கொண்டே சாமி படத்தின் முன்பாக வைத்து பூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்தாள்.
சாம்பிராணி மணத்துடன் சூடம் கொழுந்து விட்டு எரிய அய்ந்து முக விளக்கு, காமாட்சி விளக்கு, குத்து விளக்கு என திரி போட்ட விளக்குகள் அனைத்தும் ஜோதிவடிவமாகச் சுடர்விட்டு எரிந்து கொண்டிருக்க, சாம்பிராணிப் புகை அந்தச் சிறிய பூஜை அறையைச் சுற்றிச்சுற்றி வர பக்திப் பரவசத்தில் மெய் மறந்து இறைவனை வேண்டிக் கொண்டிருந்தனர்.
அய்ந்து முக விளக்கு காமாட்சி விளக்கின்மீது விழ, காமாட்சி விளக்கு குத்து விளக்கின்மீது விழ, குத்து விளக்கு ஒன்றரை இலட்சம் ரூபாயின்மீது விழ, ஒன்றரை இலட்சம் ரூபாயும் தீயில் கருகிக் கொண்டிருந்தது. பக்தியில் குருடர்களாகக் கைகூப்பிக் கண்மூடி நின்றனர் இருவரும்.
– அணு கலைமகள்