பகுத்தறிவாளர்கள் ஆக்குங்கள்!
விடுதலை இதழில் 28.03.1978 அன்று மாணவர் பிரச்சாரப் பயிற்சிப் பள்ளி தொடங்குவது குறித்து அறிக்கை ஒன்று வெளியிட்டேன். அதில், கல்லூரி மாணவர்கள் _ இளைஞர்கள் இதில் கலந்து கொள்ளுவது குறித்து விளக்கிக் குறிப்பிட்டிருந்தேன்.
கொள்கைப் பிரச்சார பயிற்சிப் பள்ளி திராவிடர் கழகம் நடத்துகின்றது என்றால் அதற்கென்று ஒரு தனி முத்திரை உண்டு. தந்தை பெரியார் அவர்களே நேரடி மேற்பார்வையிலே அனேக பிரச்சார பயிற்சிப் பள்ளிகளை நடத்தி இருக்கிறார்கள்.
இன்றைக்கு பல்வேறு அரசியல் முகாம்-களிலே தலைசிறந்த பேச்சாளர்களாக பவனி வருபவர்களில் பெரும்பாலோர் தந்தை பெரியார் அவர்களின் பிரச்சார வகுப்பிலே தயாரான ஆயுதங்கள் ஆவார்கள்.
இளைஞர்கள், மாணவர்கள் பகுத்தறிவுவாதி-களாக வார்க்கப்படும் ஒரு சமுதாயத்திற்குத்தான் எதிர்கால உத்தரவாதம் உண்டு. நம் நாட்டைப் பொருத்தவரை ஏட்டுக் கல்வி, பள்ளிக் கல்வி என்பது அவர்களது வயிற்றுப் பிழைப்புக்கு ஒரு லைசென்ஸ் கொடுக்கும் ஸ்தாபனமாக இருந்து வருகின்றது. ஏதாவது இந்த நாட்டிலே இளைஞர்கள் மத்தியிலும், சமுதாயத்தின் மத்தியிலும் ஓரளவு பகுத்தறிவுச் சிந்தனை எழுந்து நிற்கிறது என்றால் அதற்கு சகல காரணமுமாக இருப்பவர் தந்தை பெரியார் அவர்களும் அவர்கள் கண்ட இயக்கமுமாகத்தான் இருக்க முடியும்.
நம் மக்கள் அறியாமையின் கெட்டியான உலோகமாக இருந்து வருகிறார்கள். இவர்களுடைய கெட்டியான மூடத்தனம்தான் இந்த நாட்டில் நிலவும் சகல சுரண்டல்களுக்கும் மூலதனமாக இருந்து வருகிறது. இந்த மூலதனத்தை முறியடித்தாலன்றி வேறு மீட்சியே இந்த நாட்டுக்குக் கிடையாது என்பதை நன்கு உணர்ந்த காரணத்தால்தான் தந்தை பெரியார் அவர்கள் தனது இயக்கத்தை ஒரு முழுப் பகுத்தறிவுப் பிரச்சார இயக்கமாக உருவாக்கினார்கள். 1971இல் தஞ்சை மாவட்டம் நன்னிலம் வட்டத்தைச் சேர்ந்த விடயபுரம் பூங்குடி பூங்காவில் நடைபெறவிருந்த மாணவர் பிரச்சார பயிற்சிப் பள்ளியைத் தொடங்கி வைத்து தந்தை பெரியார் அவர்கள் உரையாற்றுகையில் இத்தகைய பயிற்சிப் பள்ளி முகாம்கள் ஏன் என்பதற்கான காரணத்தை அன்று சொன்னார்கள்.
பகுத்தறிவுப் பிரச்சார பயிற்சி என்பது நம் நாட்டிற்குத் தற்போது மிக மிகத் தேவையானதாக இருக்கிறது. நம் மக்கள் பகுத்தறிவற்ற காரணத்தால்தான் மிருகத்திலும் கீழான இழிநிலையில் இருந்து வருகின்றனர். நாம் பெரும்பாலும் அறிவுக்கு மாறாக நடந்து வருபவர்கள் என்று குறிப்பிட்டார்கள்.
அதே கூட்டத்தில் பயிற்சியிலே பங்கு கொண்ட மாணவர்களுக்கும் ஒரு முக்கியமான அறிவுரையைக் கூறினார்கள்.
இதுவரை நடைபெற்ற பயிற்சி வகுப்புகளில் பயிற்சி பெற்றவர்கள் பயிற்சி பெற்றுச் சென்றதும் பலர் தங்கள்வரையில் பகுத்தறிவு-வாதிகளாக நடந்துகொண்டார்களே தவிர அவர்கள் பிறருக்குப் பயன்படக்கூடிய வகையில் தொண்டாற்றவில்லை. அதுபோலில்லாமல் இங்கு வந்திருக்கும் நீங்கள் பயிற்சி முடிந்து சென்றதும் உங்களால் முடிந்த அளவு மற்றவர்களைப் பகுத்தறிவாளர்களாக்க முற்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார்கள்.
ஏதோ விடயபுரத்திலே நடைபெற்ற பயிற்சிப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் உரிய அறிவுரையாக இதை யாரும் கருத வேண்டாம். மே மாதம் 2ஆவது வாரத்தில் சென்னையிலே தொடங்கப்பட இருக்கிற பயிற்சிப் பள்ளியிலே பங்கு பெற விரும்புகிற ஒவ்வொருவரும் இதைக் கருத்தில் கொள்ள வேண்டியவர்க-ளேயாவார்கள் என்று 30.3.1978-இல் விடுதலை தலையங்கம் தீட்டியது.
* * *
சென்னை பிராட்வேயில் இருந்த இந்த விடுதியில் (Hostel) தான் மறைந்த நமது கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை, திண்டுக்கல் கொ.சுப்ரமணியன், ஜஸ்டிஸ் எஸ்.ஜனார்தனம், கோவர்தன், அப்துல் வகாப் போன்ற பலரும் படித்தோம். இந்தப் படத்தை நமக்கு அனுப்பியவரும் எங்களோடு படித்தவருமான திருச்சி வழக்குரைஞர் திரு.மூர்த்தி அவர்களும் இருக்கிறார்.
(The Madras University Students’ Club, 152, Broadway, Madras-1. (1959-60))
எம்.யூ.எஸ்.சி. (The Madras University Students’ Club) மாணவர் விடுதியின் ஆண்டுவிழா 01.04.1978 அன்று சென்னையில் நடை-பெற்றது. இந்த நிகழ்ச்சியில் தந்தை பெரியார் அவர்கள் படத்தை மாண்புமிகு நீதிபதி எஸ்.மோகன் அவர்களும், காமராசர் உருவப்-படத்தை கழகப் பொதுச்-செயலாளர் ஆகிய நானும் திறந்து வைத்-தோம். அன்று விடுதி-யின் மாணவர் மன்ற கேப்டனாக இருந்த நமது கழகத் தோழர் வழக்குரைஞர் மானமிகு வீரசேகரன் பி.ஏ., (பி.எல்.) வரவேற்-புரை நிகழ்த்த, மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளுடன் விழா தொடங்கியது.
விழாவில் தந்தை பெரியார் அவர்களின் உருவப்படத்தைத் திறந்து வைத்து உரையாற்றிய மாண்புமிகு நீதிபதி மோகன் அவர்கள் குறிப்பிடுகையில், மாணவர்களாகிய நீங்கள் எல்லாம் இன்பமயமாக இருக்கும் இந்த மாலை நேரத்தில் நான் யாரை தலைவருக்கு எல்லாம் தலைவராக கருதியிருக்கிறேனோ, யாரை தந்தைக்கெல்லாம் தந்தையாக நினைத்-திருக்கிறேனோ, யாரை மனிதருக்கெல்லாம் மாமனிதராகப் போற்றுகிறோமோ, மகான் என்று சொல்லமாட்டேன் காரணம் அவர் ஒரு பகுத்தறிவுவாதி. அந்தத் தலைவரின் படத்தைத் திறந்து வைக்கும் வாய்ப்பினைப் பெற்றிருக்-கிறேன். என்னைச் சந்திக்க வந்த மாணவர்கள் அழைப்பிதழிலே நீங்கள் தந்தை பெரியார் படத்தைத் திறந்து வைக்க இருப்பதைப் போடலாமா என்று கேட்டார்கள். தாராளமாகப் போடுங்கள் என்று நான் சொன்னேன். இப்படி ஒரு கேள்வியை அவர்கள் ஏன் கேட்டார்கள் என்ற கேள்வியை எனக்கு நானே கேட்டுக் கொண்டேன். ஒன்று, நான் வகிக்கும் பதவி காரணமாக இருந்திருக்கும் அல்லது இப்படிப்பட்ட தலைவரின் படத்தைத் திறந்து வைத்தால் அது ஒரு பிரச்சினையாக ஆகிவிடும் என்று நான் கருதக்கூடும் என்று அவர்கள் நினைத்திருப்பார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன் ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி இப்படி ஒரு நிகழ்ச்சிக்கு வருகிறார் என்றால் சலசலப்புகள் வரும்; சஞ்சலங்கள் ஏற்படும்; படபடப்புகள் ஆயிரம் இருக்கும்; ஏளனக்காரர்கள் இருப்பார்கள். இன்றைய சூழ்நிலையில் இழந்த பேச்சுரிமைகள் எழுத்துரிமைகள் மீண்டும் கிடைத்திருக்கின்றன. அச்சமின்றி அனைவரும் வாழும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. அச்சத்தையே அறியாத தந்தை பெரியார் அவர்களின் உருவப்படத்தைத் திறந்து வைக்க நான் திறந்த மனத்தோடு இங்கே வந்திருக்கிறேன் என்னுடைய அருமைத் தலைவருக்கு என்று காணிக்கையைச் செலுத்த வந்திருக்கிறேன்.
இன்றைக்கு சமுதாயத்தில் பல்வேறு சுரண்டல்கள். ஜாதியின் பெயரால் சமுதாயத்தில் நிகழும் சுரண்டலை பெரியார் கடுமையாக எதிர்த்தார். ஜாதி இரண்டொழிய வேறில்லை என்று அவ்வையாரும் கூறியிருக்கிறார். அதே கருத்தை தந்தை பெரியார் கூறும்போது இவர் பகுத்தறிவுவாதி என்று எதிர்க்கிறார்கள். அந்தப் பகுத்தறிவு மேதை, பகலவன்போல் கதிரொளி வீசிய தலைவர் பெரியார் இல்லை என்று சொன்னால், இன்று உயர் நீதிமன்றத்திலே இத்தனை பேர் நம்மவர்களாக வந்திருக்க முடியாது. எனது அறிவுக் கண்களைத் திறந்துவிட்ட ஒரே தலைவர் பெரியார். அவர் எந்தெந்த லட்சியங்களுக்காக போராடினாரோ அதற்காக நாமும் பாடுபடுவோம் என்று உணர்ச்சிபூர்வமாக எடுத்துரைத்தார்கள்.
விழாவில் நான் உரையாற்றியபோது, சில முக்கியமான செய்திகளை எடுத்துரைத்தேன். அதில், காமராசர் முதலமைச்சராக இருந்தபோது, தந்தை பெரியார் அவர்கள் பிறந்த நாளையொட்டி ஆனந்தவிகடன் ஏடு ஒரு தலையங்கம் தீட்டியது. அதில் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ள மாபெரும் கல்வி வளர்ச்சிக்கு தந்தை பெரியார்தான் காரணம் என்று எழுதப்பட்டிருந்தது. அதற்கு அடுத்த வாரமே வாசகர் ஒருவர் ஆனந்த விகடன் ஏட்டுக்கு ஒரு கடிதம் எழுதினார். காமராசர்தான் இத்தனை பள்ளிகளையும் திறந்தார்; அவர்தானே முதலமைச்சராக இருக்கிறார், பெரியார்-தான் பதவியில் இல்லையே நீங்கள் பெரியார்தான் இவைகளுக்கு எல்லாம் காரணம் என்று எழுதியிருப்பது எப்படிச் சரியாகும் என்று அந்த வாசகர் எழுதியிருந்தார். ஆனந்த விகடன் ஏட்டில் அந்தக் கடிதத்தைப் பிரசுரித்து, அதற்குக் கீழே ஆசிரியர் குறிப்பு என்று ஒரு குறிப்பை வெளியிட்டிருந்தார்கள். அதில் நாங்கள் எழுதிய கருத்து சரியானது என்றுதான் இப்போதும் நினைக்கிறோம்.
தமிழ்நாட்டில் கல்லூரிகளை, பள்ளிகளை வைத்தவர் காமராசர்தான்; ஆனால் இவைகளுக்குக் காரணம் பெரியார்; காரியம் காமராசர் என்று ஆனந்தவிகடன் ஆசிரியர் பதில் அளித்திருந்தார்.
இந்த நாட்டிலே கல்வி என்பது, மிகப்பெரிய சமுதாயத்துக்கு மறுக்கப்பட்டதாக இருந்தது. அதை எல்லா சமுதாயத்தினருக்கும் பொதுவாக்க வேண்டும் என்று தந்தை பெரியார் போராடியபோது இடையிலே ஒரு தடை ஏற்பட்டது. இடையில் ஆட்சிக்கு வந்த ஒரு பெரியவர் தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிலையங்கள் பலவற்றை மூடிவிட்டு குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டுவந்தபோது தந்தை பெரியார் அதை மிகக் கடுமையாக எதிர்த்தார்.
அந்தத் திட்டம் தொடர்ந்திருக்குமானால் இன்று நம்மவர்கள் இந்தச் சட்டக் கல்லூரிக்குள் இவ்வளவு பேர் வந்திருக்க முடியாது. குலக்கல்விக்கு தந்தை பெரியார் அவர்கள் காட்டிய எதிர்ப்பு, அரசியல் மாற்றத்தையே உண்டாக்கியது. அந்த நேரத்தில் துணிந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்குமாறு காமராசரை பெரியார் கேட்டுக் கொண்டார். காமராசர் பொறுப்பை ஏற்று, குலக்கல்வித் திட்டத்தை ஒழித்ததோடு மட்டுமல்ல; கல்வி வெள்ளத்தை மேலும் பாயச் செய்தார். காமராசரை பெரியார் தமிழகத்தின் கல்வி வள்ளல் என்றார். இந்த நாட்டில் படிப்பு பெருகியிருக்கிறது என்றால் அது படிக்காத இருபெரும் தலைவர்கள் பெரியார், காமராசரால்தான்!
தன்னைப் படிக்காதவன் என்று குறைகூறிக் கொண்டிருந்தவர்களைப் பார்த்து காமராசர் ஒருமுறை சொன்னார்: நான் யாரிடமாவது நான் படித்தவன் என்று சொல்லிக் கொண்டேனா? நான் படிக்காதவன்தான்; ஆனால் நான் மக்களைச் சந்திப்பவன், மக்களின் பிரச்சினை என்ன என்பதைப் புரிந்தவன். நான் பூகோளம் படிக்கவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் எந்தெந்த ஆறு, எங்கெங்கே ஓடுகிறது. எங்கே உற்பத்தியாகிறது என்பது எனக்குத் தெரியும் என்று தெளிவாகச் சொன்னார்கள்.
அன்றைய நிகழ்ச்சியில் கர்மவீரர் காமராசர் அவர்களின் உறுதியான நிலைப்பாட்டையும், கொள்கைகளையும், மாணவர்கள் மத்தியில் எடுத்துக்கூறி என்னுரையை நிறைவு செய்தேன். நிகழ்ச்சியில் சட்டக் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள். பொதுமக்கள், கழக உடன்பிறப்புகள், தோழியர், தோழர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
– நினைவுகள் நீளும்…