சூரிய சக்தியில் இயங்கும் சோலார் இம்பல்ஸ்2 (எஸ்அய்2) என்ற விமானம் தயாரிக்கப்பட்டு 2015 மார்ச் அபுதாபியிலிருந்து புறப்பட்டு உலகைச் சுற்றிவரத் திட்டமிடப்பட்டுள்ளது.
மூளைப் புற்று நோயைக் குணப்படுத்தும் குருத்தணுவை (ஸ்டெம் செல்) இந்திய_அமெரிக்க மருத்துவ ஆய்வாளர் காலித் ஷா தலைமையிலான குழு உருவாக்கியுள்ளது.
பன்னாட்டு விண்வெளி ஆய்வு நிலையத்-திற்குத் தேவையான பொருள்களை ஏற்றிச் சென்ற அமெரிக்காவின் ஆளில்லா சரக்கு ராக்கெட் அண்டாரெஸ் கிளம்பிய சில வினாடிகளில் தீப்பிடித்து வெடித்துச் சிதறியது.
வங்க தேசத்தின் அரசியல் தலைவர் ரஹ்மான் நிசாமி போர்க் குற்றம் புரிந்ததாக அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
தமிழகத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக சந்தீப் சசேனா அக்டோபர் 29 அன்று பொறுப்பேற்றுள்ளார்.
அய்.நா. சபையில் கொண்டுவரப்பட்ட அணு ஆயுதப் பரவல் தடை தொடர்பான வரைவு தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்களித்துள்ளது.
காணாமல் போன நபர்கள் குறித்து உடனடியாக வழக்குப் பதிவுசெய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
மாணவர்களின் பொது அறிவை வளர்க்கும் கேள்விகள் இடம் பெறும் வகையில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு கேள்வித்தாள் வரும் கல்வியாண்டு முதல் மாற்றப்பட உள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தைக் குறைக்க வேண்டும் என்ற கேரளாவின் கோரிக்கையை உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மூவர் குழு நவம்பர் 3 அன்று நிராகரித்தது.
தந்தை மரணத்திற்குப் பின் விவாகரத்துப் பெற்ற மகளுக்கு தந்தையின் வேலையை வழங்க சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.