புரட்டுக்கு மறுப்பு

நவம்பர் 01-15

முன்னோடி. . .

பின்னோடி….?

– கி.தளபதிராஜ்

தமிழ்நாடு தமிழருக்கே’ கோரிக்கையை முதலில் எழுப்பியவர் மறைமலையடிகள் தான். தனித்தமிழ்நாடு கோரிக்கையை முன் எழுப்பியவர் பெரியார் இல்லை என்கிறார் மணியரசன். வழக்கமான அவரது புரட்டுக்கு மறுப்பு.

இந்தியா ஒரு நாடா? என 1930களிலேயே வினா எழுப்பியவர் பெரியார்.

இந்தியா ஒரு நாடு ஆனால்தானே, இந்தியா முழுமையும் பற்றிப் பேச நமக்கு உரிமை உண்டு. இந்தியா ஒரு நாடாகியிருக்கின்றதா? இந்தியா, ஜாதிகள் காட்சிசாலையாக, சாமிகள் காட்சிசாலையாக இருக்கின்றதே ஒழிய வேறு என்னமாயிருக்கிறது? இந்த நிலையிலுள்ள இந்தியா விடுதலையோ, முன்னேற்றமோ அடைவது என்பது சாத்தியமானதாகுமா? மற்ற நாட்டார்கள் தங்கள் நாட்டை ஒரு நாடாக்கி நம் நாட்டையும் அதோடு சேர்க்கப் பார்க்கிறார்கள். யார் எந்த நாட்டோடு சேர்ந்து கொள்வதென்று போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

(சேலத்தில் பெரியார்  உரை -‘குடிஅரசு’ 1.6.1930) இந்தியா நம் தாய்நாடு என்று சொல்வதற்குத்தான் என்ன ஆதாரம் இருக்கிறது? இந்தியா என்கிற பெயர் இந்த நாட்டுக்கு எப்போது ஏற்பட்டது? இதற்கு எல்லை என்ன? பர்மா சென்ற ஆண்டு பிரிந்துவிட்டது. அதற்குமுன் நேபாளம், பூடான் பிரிந்துவிட்டன. அதற்குமுன் காந்தாரம், காபூல் பிரிந்துவிட்டன. இப்படியே எவ்வளவோ பிரிந்தும், சேர்ந்தும் இருக்கின்றன. இந்த நிலையில் தாய்நாடு எது? தகப்பன் நாடு எது? புராண காலத்தில் 56 நாடுகள் இருந்தனவே, அப்போது ஒரு நாட்டுக்காரன் இன்னொரு நாட்டைத் தாய்நாடு என்று கருதினானா?

மாகாண சுதந்திரம் கொடுத்து மாகாணத்துக்கு மாகாணம் சர்வ சுதந்திரமாய் தன்தன் காலிலேயே நிற்கும்படியான நிலைமை ஏற்பட்டு, அய்ரோப்பா தேசத்தைப்போல மொழிவாரியாக தனித்தனி நாடாகப் பிரித்துக்கொண்டபின் இந்தியா எப்படி எல்லோருக்கும் தாய்நாடாகும்? நேபாளம் நம் ஒரு ஜில்லாவைப்போல் உள்ள விஸ்தீரணம். அவர்கள் இந்தியாவைத் தாய்நாடென்பார்களா? சயாமில் பெரிதும் இந்து மதம்தான். அவர்கள் இந்தியாவைத் தாய்நாடென்பார்களா?

அய்ரோப்பாவில் நார்வே, ஸ்வீடன், டென்மார்க், ஹாலெண்டு, பெல்ஜியம், போர்ச்சுகல், கிரீஸ் ஆகிய நாடுகள் நமது நான்கு ஜில்லா, மூன்று ஜில்லா போன்ற விஸ்தீரணமுள்ளவை. இவர்கள் எல்லோரும் தங்கள் நாட்டைத் தாய்நாடு என்பார்களே ஒழிய அய்ரோப்பாவைத் தாய்-நாடென்-பார்களா?

ஆகவே, தமிழ்நாட்டவர்கள், திராவிட மக்கள், எந்தக் காரணம் கொண்டு இந்தியாவைத் தாய்நாடென்று கூறவேண்டுமென்பதும், எதற்காக இந்தியா முழுவதும் எப்போதும் ஒரு குடையின் கீழ் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட வேண்டும் என்பதும் எனக்கு விளங்கவில்லை.
(ஈரோடு கொல்லம்பாளையத்தில் பெரியார் உரை -‘குடிஅரசு’ 26.9.1937)

1937லேயே நாடு பிரியவேண்டுமென்றேன். இதை அன்றிருந்த வடநாட்டார் தெரிந்துதான் இருக்கிறார்கள். பதவி ருசியைக் காட்டி நம்மவர்களை ஏய்த்து விடுகிறார்கள்.
(விடுதலை 25.7.1957)

நாட்டுப்பிரிவினை என்னும் விஷயத்தை 1938லேயே முதன்முதலாக நான் துவக்கினேன். பிறகு ஜஸ்டிஸ் கட்சித் தலைவனானவுடன் அப்பிரச்சினை ஜஸ்டிஸ் கட்சி பிரச்சினையாகி பிரபலம் பெற்று, ஜின்னா சாயபு, அம்பேத்கர் ஆகியவர்களுடைய ஆதரவும் பெற்று, யுத்தத்திற்குப் பிறகு பிரிட்டீஷ் அரசாங்கத்திடமும் அது சமர்ப்பிக்கப்பட்டது. இதை(பிரிவினையை)ப் பற்றிப் பல திட்டங்கள் பிரிட்டீஷாரிடமே கொடுக்கப்பட்டன. அத்திட்டங்களில் ஒன்றுதான் பாகிஸ்தான் பிரச்சினையாகவும் முளைத்தது. – (விடுதலை தலையங்கம் 30.3.1967)

1930களில் துவங்கி தன் இறுதி மூச்சு அடங்கும் வரை பல்வேறு காலகட்டங்களில் தனித்தமிழ்நாடு கோரிக்கையை வலியுறுத்தி வந்த பெரியாரை மறுத்து 11.9.1938இல் சென்னையில் தந்தை பெரியார், நாவலர் சோமசுந்தர பாரதியார், மறைமலையடிகள் ஆகியோர்  கலந்து கொண்ட இந்தி எதிர்ப்புக் கூட்டத்தில் மறைமலையடிகள் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ தீர்மானத்தை முன்மொழிந்ததாகவும் அவரே அதற்கு முன்னோடி எனவும் மணியரசன் வாதிடுவது சரியா?

ஒரு மாநாட்டில் ஒரு தீர்மானத்தை ஒருவர் முன்மொழிவதாலேயே அவர் அந்தத் தீர்மானத்தின்  காரணகர்த்தா ஆகிவிடுவாரா என்பது பொதுவாழ்வில் ஈடுபடுவோர் அறியாததல்ல என்பது ஒருபுறம் இருக்கட்டும். அந்தத் தீர்மானத்தின் நோக்கம் பெரியார் கேட்ட இந்திய அமைப்பிலிருந்து விடுபட்ட தனித்தமிழ்நாடு கோரிக்கையை முன்வைத்தா? 11.9.1938இல் நடைபெற்ற கூட்டத்தைப்பற்றி 25.9.1938இல் வெளியான குடிஅரசு கட்டுரை கூறுவது என்ன? தமிழ்நாட்டைத் தனியாகப் பிரிக்க தமிழர்கள் கிளர்ச்சி செய்ய வேண்டும். இந்தி எதிர்ப்பு இயக்கம் தமிழ் மாகாணப் பிரிவினை இயக்கத்திற்கு முதல்படியே………

தமிழ் ராஜாங்கப் பாஷையாகித் தீரவேண்டும். தமிழ் மாகாணம் தனியாகப் பிரிக்கப்பட்டால்தான் தமிழ் ராஜாங்க பாஷையாக முடியும். ஆகவே தமிழ் மாகாணப் பிரிவினை விஷயத்தில் தமிழர்கள் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும் என்கிறது. மணியரசன் வலியுறுத்தும் தமிழ்த்தேசியம் இதுதானோ? இதற்குத்தான் மறைமலையடிகள் முன்னோடி என்று சொன்னால் அதுவும் உண்மையல்லவே!

1926இல் ஒன்றுபட்ட சென்னை மாநிலத்திலிருந்த பத்து தமிழ் மாவட்டங்களைத் தனியாகப் பிரித்து டொமினியன் அந்தஸ்து வழங்க வேண்டும் என மத்திய சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தவர் சர்.சி.சங்கரன் நாயர் என்ற மலையாளியாயிற்றே!

பெரியாரைக் கொச்சைப்படுத்தி நீங்கள் சாதிக்கப்போவதுதான் என்ன? என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *