அய்யாவின் அடிச்சுவட்டில்… – 116 ஆம் தொடர்

அக்டோபர் 16-31

சூளுரை நாள்

 

7.4.78-நெல்லை, 8.4.78-நாகர்கோவில் ஆகிய முக்கிய நகரங்களில் சூளுரை நாள் பொதுக் கூட்டங்களில் தொடர்ந்து கலந்துகொண்டு உரையாற்றினேன். அதில்,

அய்யா அவர்கள் 60 ஆண்டுக்காலம் இடையறாது சுயமரியாதைச் சூறாவளி வீசும்படியாகப் பயணம் செய்தார்கள். அய்யா அவர்களுடைய சுயமரியாதை இயக்கம் அய்ம்பதாண்டைத் தாண்டிய அதன் காரணமாக இந்த இயக்கம் பெற்ற வெற்றிகளை எல்லாம் தொகுத்துக் காட்டுவதற்காக, உலகத்துக்கு எடுத்துக்காட்டுவதற்கு அப்போது இந்த இயக்கத்தின் அடிநாள் தோழர்களாக, அய்யாவின் தொண்டர்களாக தங்களைத் தாங்களே அர்ப்பணித்துக் கொண்டு இருக்கின்ற லட்சோப லட்சம் குடும்பங்களை எல்லாம், எங்கள் கழகத் தலைவர் அம்மா அவர்கள் _ தந்தைக்குப் பின்னே தாய் என்ற அளவில் உணர்வோடு ஒருங்கிணைத்தார்கள்.

அம்மா அவர்கள் தலைமையில் தஞ்சைத் தரணியிலே 1976லே அதற்காக சிறப்பாக சுயமரியாதை இயக்கப பொன்விழா நிகழ்ச்சியினை நடத்தினார்கள். நடத்தி வரலாறு படைத்தார்கள். அந்தப் பொன்விழாவிற்குப் பிறகுதான் நாங்கள் மிகப் பெரிய அடக்குமுறைக்கு ஆளானோம். திராவிட இயக்கமே அடக்குமுறைக்கு ஆளானது. அந்தக் கொடுமையான அடக்குமுறைக்கு ஆளான காலகட்டத்தில் இனிமேல் இந்த இயக்கம் இருக்குமா என்ற கேள்வி எழுந்த நேரத்தில் _ சிறைச்சாலைகள் _ அங்கே சித்திரவதை நிகழ்ச்சிகள் இவை எல்லாம் இருந்த போதிலும்கூட, அம்மா அவர்கள் வெளியே அவற்றை எல்லாம் தாங்கிக் கொண்டு தம்முடைய லட்சியப் பயணத்தை உறுதியோடு நடத்திக் கொண்டு இருந்தார்கள்.

தந்தை பெரியார் அவர்களுடைய பிறந்தநாள் விழாவை செப்டம்பர் 17ஆம் நாள் அந்த 1976ஆம் ஆண்டு அவர்கள் நடத்துகின்ற நேரத்திலே, பொதுக்கூட்டம் போட நெருக்கடிகால நிலையிலே அனுமதி இல்லை என்பதால் அய்யா அவர்கள் திடலிலே, மன்றத்திலே, சொந்த இடத்திலேகூட அய்யா அவர்களுடைய பிறந்தநாள் விழாவை நடத்துவதற்குக்கூட உரிமை இல்லை என்று அன்று உரிமை மறுக்கப்பட்டது.

அன்று தந்தை பெரியார் அவர்கள் பெயரே இருக்கக்கூடாது என்று முயற்சித்தது மத்திய அரசாங்கம் -_ கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாலே! ஆனால், அதே இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னாலே சரித்திரம் எவ்வளவு வேகமாகச சுழன்று கொண்டு இருக்கின்றது.

அதே டில்லி அரசாங்கம் தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவிலே பெரியாருக்கு அஞ்சல்தலை வெளியிட்டுத் தீரவேண்டும். அதிலே எந்தவித மாற்றமும் இல்லை என்று சொல்லித் தீரவேண்டிய கட்டாயத்துக்கு வந்து இருக்கின்றதா இல்லையா எண்ணிப் பாருங்கள்.

தந்தை பெரியார் அவர்களுக்கு அவருடைய நூற்றாண்டு விழாவிலே மத்திய அரசாங்கம் அஞ்சல் தலை வெளியிட்டுச சிறப்புச் செய்வது என்று சொன்ன உடனே அதனைப பொறுத்துக் கொள்ள அவர்களுக்கு மனம் வரவில்லை. அதற்குப் பதிலாக என்ன செய்தார்கள்?

ஓரிரு பார்ப்பனர்களைவிட்டுக கடிதம் எழுத வைத்தார்கள்; நாடாளுமன்றத்திலே கேள்வி கேட்க வைத்தார்கள்  _  என்ன கேள்வி கேட்டார்கள்? பெரியார் ஒரு நாத்திகர். பெரியாருக்கு அஞ்சல்தலை வெளியிடுவதா என்று. அந்தக கேள்விக்குக்கூட எழுத்துமூலம் வந்த பதில் _ அதற்கு ஒரு அமைச்சர் சொன்னார்: எதிர்ப்பு ஏதோ சிலது வந்திருக்கின்றது, அதனை ஆராய்கின்றோம் என்று. அவ்வளவுதான்.

உடனே அன்று தமிழ்நாட்டில் எல்லோருக்கும் ஓர் உணர்வு வந்தது. அது எப்படிப்பட்ட உணர்வு? அவர்கள் எந்தக் கட்சிக்காரர்களாக இருந்தாலும் எந்தக் கொள்கையுடையவர்களாக இருந்தாலும் தமிழ்ச் சமுதாயத்திலே தந்தை பெரியார் அவர்கள் 60 ஆண்டுகளாகப பாடுபட்டது சுலபமாக அழிந்துவிடாது; அதன் ஆணிவேர் மிக ஆழமாகப் போய் இருக்கின்றது என்பதற்கு அடையாளமாக எல்லோரும் வேண்டுகோள் மத்திய அரசாங்கத்திற்கு விடுத்தார்கள்.

அடுத்த நாள் தமிழக சட்டமன்றத்திலே எதிர்கட்சித் தலைவர் கலைஞர் அவர்கள் எழுந்து கேள்வி கேட்டார்: தந்தை பெரியார் அவர்களுக்கு அஞ்சல்தலை வராது _ அவர் நாத்திகர் என்று சொல்கின்றார்களே, நான் ஏன் நாத்திகன் ஆனேன் என்ற நூல் எழுதிய பகவத்சிங்குக்கு அஞ்சல்தலை வந்து இருக்கின்ற நேரத்தில், நாத்திகராக இருந்து ஆட்சிப் பொறுப்பில் பல ஆண்டுகளாக இருந்து தம்மை நாத்திகர் என்று கூறி மறைந்த நேருவுக்கு தபால் தலை வந்திருக்கின்ற நேரத்தில், நாத்திகப் பெரியாருக்கு அவர் கொள்கை நாத்திகமாக இருந்தாலும் அவர் நாட்டுக்கு உழைத்ததை வைத்துக் கொண்டு ஏன் தபால்தலை வெளியிடக் கூடாது? அதற்கு தமிழக அரசு நிலை என்ன? என்று கேட்ட நேரத்திலே, நிதி அமைச்சர் மாண்புமிகு மனோகரன் அவர்கள் எழுந்து சொன்னார்: இதிலே எங்களுக்கும், எதிர்க்கட்சிக்கும் கருத்து வேறுபாடு கிடையாது; இதிலே ஒரே கருத்துத்தான். தந்தை பெரியார் அஞ்சல்தலை, வெளியிட்டாக வேண்டும் என்று சொன்னதோடு மேலும் ஒரு கருத்தினை எடுத்துச் சொன்னார், ஆத்திகருக்கு எவ்வளவு உரிமை இருக்கின்றதோ அதுபோல நாத்திகருக்கும் அந்த அளவு உரிமை உண்டு என்று அரசாங்கம் கருதுகின்றது என்று சட்டசபையிலேயே பிரகடனப்படுத்தி இருக்கின்றார்.

அதற்கு அடுத்து மத்திய அரசுக்கு காங்கிரஸ்காரர்கள் எழுதினார்கள், கம்யூனிஸ்டுக்காரர்கள் தீர்மானம் போட்டார்கள், மற்றும் எல்லாக் கட்சிக்காரர்களும் கருத்து வேறுபாடு இல்லாமல் கேட்க வேண்டிய அளவுக்கு தந்தை பெரியாரின்  தொண்டு உயர்ந்த தொண்டு என்பது மகிழத்தக்கது அல்லவா? அஞ்சல் துறையின் காபினட் அமைச்சர் பிரிஜ்லால் வர்மா அவர்கள் மிகத் தெளிவாக அறிவித்தார். பெரியார் அவர்களுடைய நூற்றாண்டு விழாவிலே அவர்களுக்கு அஞ்சல்தலை வெளியிடுவது என்ற மத்திய அரசாங்கத்தினுடைய முடிவிலே எந்தவித மறுபரிசீலனையும் கிடையாது. குறிப்பிட்டபடி அந்த நாளிலேயே செப்டம்பர் 17ஆம் தேதியே வந்து தீரும் என்று அறிவித்தார்…

ஒரே ஒரு சிறிய செய்தியைக் குறிப்பிடுகிறேன். இது இந்து பத்திரிகை. இதற்கும் தந்தை பெரியாருக்கும் நூற்றாண்டு விழா மார்ச் மாதம் 17ஆம் தேதி வெளிவந்தது இந்து பத்திரிகை. அம்மா அவர்கள் மார்ச் மாதம் 16ஆம் தேதி மறைந்தார்கள். இந்தப பத்திரிகை, அந்தச் செய்தியை எங்கே போடுகின்றது தெரியுமா?

வேதனையோடு சுட்டிக் காட்டுகிறோம். இது யாருக்கோ நிகழ்கின்ற சம்பவம் அல்ல. அம்மா அவர்கள் மறைந்த செய்தியை இந்து எதிலே போடுகின்றான்?

ஒபியுச்சரி (Obituary) என்ற மரணக்குறிப்பு சிறுகுறிப்புப பகுதியில் போடுகின்றது. ஒபியுச்சரி என்றால் என்ன? வெறும் மரணக் குறிப்பு என்பது. இதனை ஒரு தனிச் செய்தியாக வெளியிடக்கூட அவர்கள் தயாராக இல்லை. இதுதான் பத்திரிகா தர்மத்திலே நடுநிலை தர்மமாகப் படுகின்றது சில பேருக்கு.

படித்த நண்பர்களுக்குத் தெரியும். ஒபியுச்சரி என்று சொன்னால் மரணக் குறிப்பு. இந்தத தலைப்பில் அன்று இரண்டு பேர்களைப் பற்றி செய்தி போட்டு இருக்கின்றது. மேலே யாரைப் போடுகின்றார்? முதல் முக்கியத்துவம் யாருக்கு? டி.ஆர்.சக்கரவர்த்தி அய்யங்கார், இரண்டாவது-தான் ஈ.வெ.ரா.மணியம்மை என்று போட்டு உள்ளது.

டாக்டர் டி.எம்.நாயர் அவர்கள் சொன்னபடி,

புலி தன் புள்ளியை மாற்றிக் கொண்டாலும், நீக்ரோ தன் நிறத்தை மாற்றிக் கொண்டாலும், பார்ப்பான் மட்டும் தன் ஜாதிப் புத்தியை மாற்றிக் கொள்ளவே மாட்டான் என்று பார்ப்பனர் அல்லாத இயக்கத் தலைவர்களில் முக்கியமாகத் திகழ்ந்த டாக்டர் டி.எம்.நாயர் அவர்கள் சொன்னார்களே, அது எவ்வளவு 100க்கு 100 உண்மை என்பது புலப்படுகின்றது.

வாயில் நாக்கில் குற்றம் இருந்தால் ஒழிய வேம்பு இனிக்காது; தேன் கசக்காது: பிறவியில் மாறுதல் இருந்தால் ஒழிய ஆடு மனிதனைக் கடிக்காது; புலி புல்லைத் தின்னாது; இது போன்றதாகும் நமது பார்ப்பனர்களின் தன்மை; பிறவியில் மாறுதல் இருந்தால் ஒழிய பார்ப்பான் நல்லவனாக ஒருபோதும் இருக்க மாட்டான்     என்று தந்தை பெரியார் அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்திலே தமிழர்களுடைய உரிமைச் சாசனம் போல சொன்னார்களே, அது எவ்வளவு உண்மை என்பது இன்றைக்கும் விளங்கும்.

ஒன்றே ஒன்றை மட்டும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள், பாராட்டையோ, பதவியையோ விரும்புபவன் ஈரோட்டுப பக்கமே போகமாட்டான். தயவுசெய்து நினைத்துப் பார்க்க வேண்டும், பாராட்டை விரும்புகின்றவன் ஈரோட்டை நினைக்க மாட்டான். ஈரோட்டை விரும்புகின்றவன் பாராட்டை நினைக்கவே மாட்டான்.

இதனை நினைத்துக்கொண்டுதான் நாங்கள் தொடர்ந்து பணியாற்றக்கூடியவர்கள். இதற்கு முன்னாலே அய்யா அவர்களும், அம்மா அவர்களும் எங்களுக்கு பிரேக் போட இருந்தார்கள். ஆனால் இன்றைக்கு இளைஞர் சமுதாயம், கிளம்பிற்று காண் சிங்கக் கூட்டம் என்று சொல்லும் வகையில் இன்றைக்குப் பணிபுரிய _ எதற்கும் தயாராக ஏராளமான பேர்கள் வந்து கொண்டு இருக்கின்றார்கள். அதனை ஒருமுகப்படுத்துவது எப்படி? அதனை இழுத்துப் பிடிப்பது எப்படி என்பதுதான் எங்களுக்குக் கவலையே தவிர, இதனைத் தட்டி விடுவது எப்படி என்பதல்ல.

தட்டிவிட்டுக் கிளம்பி இருப்பதை இழுத்துப் பிடிக்க வேண்டுமே என்ற அந்தக் கவலை இதற்கு முன்னாலே லகான் பிடித்தவர்கள் மிகத் திறமைசாலிகள் வலிமை வாய்ந்த கரங்களைக் கொண்டவர்கள்.

ஆனால, இளைய கரமாயிற்றே! ஒரு வேளை இழுத்துப் பிடிக்க முடியாமல் இந்த இளைஞர் கூட்டம் வேகமாயப பாய்ந்துவிட்டால் என்ன செய்வது என்பதுதான் எங்களுக்குப் பெருத்த கவலையாக இருக்கின்றதே தவிர கழகத்தவர்கள் அய்யா அவர்கள் மறைவுக்குப் பின்னாலே, அம்மா அவர்கள் மறைவுக்குப் பின்னாலே சோர்ந்து விட்டார்கள் என்பதல்ல. இதனை இன எதிரிகள் உணர வேண்டும்.

– நினைவுகள் நீளும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *