டில்லியில் இராவணன் விழா :
தெலங்கானாவில் நரகாசுரன் விழா :
மைசூரில் இராவணனுக்குக் கொண்டாட்டம் :
இராமாயணத்தால் இழிவுபடுத்தப்பட்ட தென்னாட்டு மக்களைத் தொடர்ந்து இழிவு-படுத்தும் விதமாக ஆண்டுதோறும் இராவணன், கும்பகர்ணன்,மேகநாதன் உருவங்களைக் கொளுத்தி ராமலீலா கொண்டாடு-கின்றனர் வடநாட்டார். அதற்கு எதிர்வினையாக இராமன், லட்சுமணன், சீதை உருவங்களைக் கொளுத்தி அன்னை மணியம்மையார் நடத்திய இராவணலீலா வடநாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பது வரலாற்றுக் குறிப்பு. எனினும் இன்னும் இராமலீலா நடைபெற்றே வருகிறது.
அண்மைக்காலமாக, தமிழ்நாட்டில் மட்டும் ஒலித்த இராமலீலாவுக்கு எதிரான குரல், இப்போது பரவலாக பல இடங்களிலுமிருந்து வருகிறது. தில்லி ஜவகர்லால் பல்கலைக்-கழகத்தின் உயர்பொறுப்பில் இருப்போர் இத்தகைய விழாக்களில் பங்கெடுப்பதைக் கண்டித்தும், நாங்கள் இராவண லீலா நடத்தினால் இராமனைக் கொளுத்த வருவீர்களா என்று கேட்டும், அப்பல்கலைக்கழகத்தின் துணை-வேந்தருக்கு மாணவர்கள் ஒரு திறந்த மடலை எழுதியுள்ளனர். தமிழ்நாட்டில் இராவணலீலா நடந்தபோது அன்றைய பிரதமர் இந்திராகாந்திக்கு அன்னை மணியம்மையாரின் சார்பாக ஆசிரியர் கி.வீரமணி எழுதிய கடிதத்தையும் அதில் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள் மாணவர்கள். மேலும் தந்தை பெரியாரின் படத்தையும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருக்-கிறார்கள்.
தெலங்கானா உஸ்மானியா பல்கலைக்-கழக மாணவர்கள் அக்டோபர் 31 அன்று திராவிட வீரன் நரகாசுரன் நினைவுநாளை அனுசரிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். இந்நிலையில், கர்நாடகா பி.ஜெ.பி. தலைவர் பிரகலாத் ஜோஷி,இராவணன், லங்கேஷ் என்று பெயர் வைத்திருப்பவர்கள் எல்லாம் மாமாக்கள். என்று உளறிக் கொட்ட, கான்பூர் முதல் கன்னியாகுமரி வரை, மைசூர் உள்பட பலவிடங்களிலும் இராவணனைக் கொண்டாடும் மக்கள் இருப்பதை எடுத்துக் காட்டி பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் கன்னட இளைஞர்கள். திராவிடர் இயக்கம் வைத்த இன உணர்வுத்தீ நாடெங்கும் பற்றிப் பரவுகிறது என்பதைத்தானே இந்நிகழ்வுகள் காட்டுகின்றன.