இதுவரை கேட்காத குரல்

அக்டோபர் 16-31

சுசீந்திரனின் சமூகநீதி சிக்ஸர்!

விளையாட்டு தொடர்பான படங்கள் இதுவரை  வராமலில்லை. குறிப்பாக கிரிக்கெட் படங்களும் வராமலில்லை. கிரிக்கெட்டில்/ விளையாட்டில் அரசியல் படங்களும் வராமலில்லை. ஆனால், கிரிக்கெட்டில் நிலவும் ஜாதிப் பிரச்சினை….? சமூகநீதிக்குக் குரல் கொடுக்கும் படங்கள் வராமலில்லை. திறமையுள்ளவர்கள் புறக்கணிக்கப்படுவதற்கு எதிரான குரல் எழுப்பப்படாமலில்லை. ஆனால், பார்ப்பன ஆதிக்கத்துக்கு எதிரான இப்படியொரு வெளிப்படையான குரல்?

 

ஜீவா படத்தின் மூலம் இந்த இரண்டு இல்லைகளையும் இல்லாமல் செய்திருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன். திரைப்படங்களில் சமூகப் பிரச்சினைகளைப் பேசுவதே துணிச்சல். அதிலும் பலருக்கு அரைவேக்காட்டுத்தனம் தான் இருக்கும். ஜாதி, சமூகநீதி குறித்தெல்லாம் பேசுவதற்கு இன்னும் துணிச்சல் வேண்டும். பார்ப்பனியத்திற்கெதிராகப் பேசுவதென்றால் கூடுதல் துணிச்சல் வேண்டும். அதிலும் இத்தனை வெளிப்படையாய்ப் பேச…? இதை எண்ணுகிறபோதுதான் முன்னிலும் பன்மடங்கு உயர்ந்து நிற்கிறார் சுசீந்திரன். கிரிக்கெட்டில் மிளிரத் துடிக்கும் இரண்டு இளைஞர்களின் வாழ்க்கையைச் சொல்லும் கதை ‘ஜீவா’. படம் பார்க்கும் நேரம் முழுவதும் நம்மை பதின் பருவத்திற்கே அழைத்துச் செல்கிறது. சின்ன வயதில் கிரிக்கெட் மீது ஏற்படும் ஆர்வம், மெல்ல அதுவே வாழ்க்கையாகி ஒரு நல்ல கிரிக்கெட் வீரனாக வளர்வதை பந்தும், மட்டையுமாய் ஆடுகளத்திலிருந்தே அசத்தியிருக்கிறார்கள். படத்தின் தொடக்கத்தில் பதின்பருவக் காதலும், அதில் ஏற்படும் தோல்வியால் துவண்டு-போவதும், தண்ணியடிப்பதுமாகத் தான் போகிறது. ஆனால், அதற்கான மாற்றாக விளையாட்டை முன்னிறுத்தலாம் என்று வளர்ப்பு அப்பா யோசனை தந்த பிறகு ஜீவாவின் போக்கும், படத்தின் போக்கும் மாறுகிறது.

ஜீவாவாக விஷ்ணுவிஷாலும், ரஞ்சித்தாக லட்சுமணன் ராமகிருஷ்ணனும் விளையாடி படம் முழுக்க சிக்ஸர்களாக குவித்திருக்கிறார்கள். பார்ப்பன ஆசிரியர்கள் மாணவர்களின் முதுகைத் தடவி, பூணூலை நெருடிப் பார்க்கும் சூட்சமத்தை, நாம் நேரடியாக அனுபவித்த-தோடு, சுயமரியாதைப் பயிற்சிப்-பட்டறைகளில் பலர் சொல்லக் கேட்டிருக்கி-றோம். இன்றும் வங்கிகளில், மத்திய அரசு நிறுவனங்களில் இந்தத் தடவிப் பார்த்தல் நடந்துகொண்டு-தானிருக்கிறது. ஜீவாவின் விளையாட்டில் அசந்த பார்ப்பன அதிகாரி அவன் முதுகைத் தட்டிக்-கொடுப்பது போல் தடவிப் பார்க்கிறார். அதை அறிந்ததும்,  “தட்டிக் கொடுத்தார்னு நினைத்தேன். அவர் முதுகைத் தடவிப் பார்த்திருக்கிறார்” என ஜீவா பேசும் வசனத்திற்கு கைதட்டல் ஒலியில் அரங்கமே அதிர்கிறது. இந்தியக் கிரிக்கெட் அணியில் நுழைவதற்கான முதல்படியாகக் கருதப்படும் ரஞ்சிக் கோப்பை அணியில், ஜீவாவையும், ரஞ்சித்தையும் தவிர்க்க முடியாமல் வேண்டா வெறுப்பாகச் சேர்க்கிறார் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைமைப் பார்ப்பனர். அணியில் சேர்த்தாலும் மைதானத்தில் அவர்களை விளையாட அனுமதிக்காமல் விளையாடு-பவர்களுக்குக் குளிர்பானம் கொடுக்க மட்டுமே பயன்படுத்தும் காட்சி பார்ப்பனியத்தின் வக்கிரப்புத்தியை நம் புத்தியில் உறைக்கும்படிச் சொல்கிறது.

அடுத்த ஆண்டில் மூன்றே போட்டிகளில் மட்டும் விளையாட வைத்து, அதிலும் பார்ப்பன நரித்தனத்தைக் காட்டி அடுத்த ஆண்டில் ரஞ்சி அணியிலிருந்தே அவர்களை நீக்கிவிடும் இடம் வர்ணாசிரமத்தின் உச்சம். இப்படி எத்தனை ஆயிரம் இளம் திறமையாளர்களின் வாழ்க்கையை நாசமாக்கியிருப்பார்கள் என்பதை எண்ணிப் பார்க்கும்போது நம் கண்களில் ஈரம் கசிவதைத் தடுக்க முடியாது.

ஸ்ரீராமையும், சேஷகோபாலனையும் அணியில் நுழைக்க நடக்கும் தங்களுக்கு எதிரான பார்ப்பன சூழ்ச்சியைப் புரிந்து கொண்ட ரஞ்சித், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவரிடம் கேட்கும் கேள்விகள் “இதுவரை தமிழ்நாட்டிலிருந்து போன 16 பேரில 14 பேரு உங்க ஆளுங்கதானே?” எனக் குமுறி, புள்ளிவிவரத்தோடு கேட்கும் கேள்விகள் அதிகார வர்க்கத்தின் மீது வீசப்பட்ட சாட்டையடி!

திறமையாளர்கள் என்று அவர்கள் தேர்ந்தெடுத்த அவாள்களால் கடந்த 20 ஆண்டுகளாக ரஞ்சிக் கோப்பையை வெல்ல முடியவில்லை என்பதையெல்லாம் நம் மக்கள் இதுவரை கேள்விப்பட்டிருக்கவே மாட்டார்கள். ஆதாரங்களோடு அடிக்கும்போது பம்முகிறது பார்ப்பனியம். கிரிக்கெட் சங்கத்தின் தலைமையி-லிருந்து பியூன் வரைக்கும் பார்த்தசாரதி கம்யூனிட்டிதான் இருக்காங்க… ரஞ்சி டீம்ல செலக்ட் ஆகிறது மட்டுமில்ல… அதுக்குப்பிறகு உள்ளதையும் தாங்கி, தாண்டிப் போகணும் என்று கோச் எச்சரிக்கும்போது இளைஞர்களுக்குத் தெரிந்திருக்காது. ஆனால் அதை அனுபவித்து, வாழ்க்கை முடிந்ததெனக் கருதி, ரஞ்சித் தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் போதுதான் இன்றைய இளைஞர்கள் பலருக்கு உறைக்கக்கூடும். பரோட்டோ சூரி பேட் செய்யும்போது அவுட் ஆகாமல் இருக்க கர்த்தரை வேண்டும் நேரத்தில், எதிரே பந்து வீசுபவரும் நெஞ்சில் சிலுவை போட அதைப்பார்க்கும் சூரி, “அட இவனும் சிலுவை போடுறான்! கர்த்தர் என்ன பண்ணுவார்?” என கமெண்ட் அடிப்பது நறுக் நகைச்சுவை. காதலுக்காக மதம் மாறச் சொல்லி அப்பா கேட்கிறார் என்று சொல்லும் காதலியிடம், அதெல்லாம் முக்கியமில்ல என்று கிரிக்கெட் குறித்து யோசிக்கும் இடத்தில் மதமா பெருசு? என்று எளிதில் மதத்தைத் தூக்கி ஓரத்தில் வைத்துவிடுகிறார் இயக்குநர்.

இசையமைப்பாளர் இமானின் இசையும், மதியின் ஒளிப்பதிவும் சிறப்பு. விளையாட்டுத் தளப் பதிவுகள் நாம் நேரில் காண்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. சந்தோஷின் வசனத்தில் சமூக நீதி சபை ஏறியிருக்கிறது. கிரிக்கெட் போர்டின் பார்ப்பன மயம் தோலுரிக்கப்பட்டிருக்கிறது. சுசீந்திரன் அளவுக்குப் பாராட்டப்பட வேண்டியவர்கள் படத்தின் தயாரிப்பாளர்களான நடிகர்கள் விஷாலும், ஆர்யாவும்!

விளையாட்டில் பிரச்சினை என்றால் பணக்காரர் _- ஏழை பிரச்சினை என்று காட்டுவார்கள். அரசியல்வாதி பிரச்சினை செய்கிறார் என்று காட்டுவார்கள். ஆனால், நாமம் போட்ட பார்த்தசாரதி கும்பலையும், ராகவன், ஸ்ரீராம், சேஷகோபாலன் போன்ற ஆட்களையும், இளம் திறமையாளர்களான தமிழர்களை உள்ளே கொண்டுவந்துவிடத் துடிக்கும் முருகன் என்ற கதாபாத்திரத்தையும் தெளிவாக அடையாளம் காட்டி, பட்டாங்கமாகப் போட்டுடைத்திருக்கும் வசனங்களையும் காட்சிகளையும் கண்டு படத்தைப் பார்த்த பலரும் வியந்துபோயிருக்கிறார்கள். (பார்த்தசாரதிகள் வெலவெலத்துப் போயிருக்கிறார்கள்.)

ரஞ்சியில் புறக்கணிக்கப்பட்டு ரஞ்சித் மறைந்தபின், சி.பி.எல்_-லில் இர்ஃபான் மூலம் இடம் கிடைத்து, இந்திய கிரிக்கெட் அணியிலும் கால்பதிக்கிறார் ஜீவா. அவர் தன் வாழ்க்கையை பத்திரிகையாளர்களுக்குச் சொல்லும்போதும், நான் இப்படி வெளிப்படையாகப் பேசியதால் என் கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பிரச்சினை வரலாம். ஆனால் இதைச் சொல்லியாகணும் என்று மீண்டும் பிரச்சினையை நினைவூட்டி அரங்கை விட்டு வெளியே அனுப்புகிறார்.

ஓரிடத்தில் மட்டும் சொல்லிவிட்டால் தமிழர்கள் மறந்துவிடுவார்கள் என்பதால் படத்தின் கடைசியிலும் அழுத்திச் சொல்லியிருக்கும் இயக்குநர் சுசீந்திரன் மிகுந்த பாராட்டுக்குரியவர் என்பதோடு சமூகநீதிப் பற்றாளர்களின் மனதில் மரியாதைக்குரிய இடத்தைப் பிடித்திருக்கிறார். காலத்துக்கும் பெரிய பதிவாக நிற்கும் சுசீந்திரனின் ஜீவா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *