கடல் வற்றக் காத்திருக்கும் காவிக் கொக்குகள்

அக்டோபர் 16-31

தமிழ்நாடு முன்னாள் முதல்வரும், அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளருமான செல்வி ஜெ.ஜெயலலிதா மற்றும் அவரது தோழிகள் சசிகலா, இளவரசி, வளர்ப்பு மகன் சுதாகரன் ஆகியோர் மீதான வருமானத்துக்கு அதிகமாக 66.5 கோடி சொத்துக் குவித்தது தொடர்பான வழக்கு 18 ஆண்டுகள நடந்து கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா வழங்கிய தீர்ப்புடன் நிறைவுபெற்றது. குற்றம் சாட்டப்பட்ட நால்வரையும் குற்றவாளிகள் என்று அறிவித்து, நான்கு ஆண்டுகள் சிறை, 100 கோடி அபராதம் என வழங்கிய தீர்ப்பின் விளைவாக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி உடனடியாக முதல்வர் பதவியிழந்தார் ஜெயலலிதா.

 

இவ்வழக்கு தொடர்பான செய்திகள், 160 வாய்தாக்கள் தொடங்கி மாறிய 14 நீதிபதிகள் வரை எண்ணற்ற புள்ளிவி-வரங்கள், நொடிக்கு நொடி நேரடித் தகவல்கள் என ஊடகங்கள் அனைத்தையும் அள்ளித் தந்திருக்கின்றன. தீர்ப்பு தேதி மாறிய நாளிலிருந்து, 27-ஆம் தேதி தீர்ப்பு, அதன் பின்னான ஜாமீன் முறையீடுகள் என வழக்குகள் ஒவ்வொன்றின் போது ஒட்டுமொத்தத் தமிழகமும் பரபரப்புடன் காணப்பட்டது. சிதம்பரம் கோயில் முதல் சங்கராச்சாரிகள் மீதான சங்கரராமன் கொலை வழக்கு வரை ஏராளமான வழக்குகளில் நீதித்துறையின் போக்கைப் பார்த்த பலருக்கு இந்த வழக்கிலும் தீர்ப்பு எப்படியும் ஜெயலலிதாவுக்கு சாதகமாக இருக்கும் என்றே கருத்து இருந்தது. அதிலும், மத்தியில் ஆளும் பி.ஜெ.பி, அதன் பிரதமரும், ஜெயலலிதாவின் நண்பருமான மோடி, இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது எப்படியும் அம்மா வெளியில் வந்துவிடுவார் என்று நம்பிக்கொண்டிருந்த அ.தி.மு.க.வினர் வரைக்கும் அதிர்ச்சியைத் தருவதாக அமைந்தது தீர்ப்பு. தண்டனை என்று தீர்ப்பு வந்ததிலிருந்து கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளும், என்ன எழுதுகிறோம், எப்படி எழுதுகிறோம் என்றெல்லாம் அறியாத வண்ணம் சுவர்களை ஆக்கிரமித்த சுவரொட்டிகளும், வகைவகையாக நடத்திய போராட்டங்களும், போராட்டம் போல் நடைபெற்ற நாடகங்களுமாக தொடர்ந்து இந்தச் செய்திகளால் சலித்துப் போயிருக்கிறது தமிழகம். எண்ணற்ற மத அரசியல் குற்ற வழக்குகளி-லிருந்து தப்புவது எப்படி என்று தனி வகுப்பெடுக்கும் அளவு அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு தன்னையும், நண்பர் அமித்ஷாவையும் மீட்டுக் கொள்ளும் மோடி இருக்கும்போதுமா இந்த நிலைமை என்று பலர் அதிர்ந்தனர்.

அவர்கள் கட்சியில் தானே இந்தத் தேதியில் சுப்பிரமணியசாமி இருக்கிறார். எனவே எப்படியும் வழக்கு முடிந்துவிடும் என்பது தான் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், அதற்கு அப்படியே மாறாக, வெளியிலும், உள்ளும் அமைதியாக இருந்தது மோடியின் மத்திய அரசு. நியாயம் -நீதி நிலைநாட்டப்படவேண்டும் என்பதற்காக தலையிட்டிருக்க மாட்டார்கள் என்றெல்லாம் கருத முடியாது. கருதக் கூடாது என்பதை இளம்பெண் வேவு பார்க்கப்பட்ட வழக்குக்கு மூடுவிழா நடத்தியதன் மூலம் மோடி கும்பலே வலியுறுத்திச் சொல்கிறது. எனில், எப்படி இந்த முடிவு?

அடுத்தது தமிழ்நாடுதான் -தென்னாடு தான் என்று அமித் ஷாவுக்கு இலக்கு தரப்பட்டிருப்-பதாக நீண்ட நாட்களாகவே சொல்லப்-பட்டுவருகிறது. மேற்கொண்டு ஆர்.எஸ்.எஸ். தலைவர் வேறு, தமிழ்-நாட்டையும், கேரளாவையும் குறிவைத்துப் பேசியிருக்கிறார். தமிழ்நாட்டில் ஜெயலலிதா கைதால் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டிருப்-பதாகப் புதிய அக்கா வேறு கருத்து தெரிவிக்கிறார். ஆர்.எஸ்.எஸ்-சின் கைகள் தமிழ்நாட்டைப் பதம்பார்க்கக் குறிவைக்கின்றன என்பதைத் தெளிவாகக் காட்டும் இந்த அறிகுறிகளையும் கணக்கில் கொண்டால் நடப்பது என்ன என்பதை ஒருவாறு புரிந்து கொள்ளமுடியும்.

ஏற்கனவே 2ஜி பொய் வழக்கு மூலம் தி.மு.க. மீது ஊழல் பழி சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்-செயலாளருக்கு ஊழல் வழக்கில் தண்டனை என்றால் அங்கே வெற்றிடம் ஏற்பட்டிருப்-பதாகப் பேசிப்பேசியே வெற்றிடத்தை உருவாக்க கோப்பல்ஸ்கள் காத்திருக்க மாட்டார்களா? எனில், கொள்கை வழிவந்த தி.மு.க.வை அல்லவா அவர்கள் முதலில் மடக்கியிருக்க வேண்டும் என்று கேட்கத் தோன்றும். ஆனால், அங்கே தான் ஆரியத்தின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவேளை தி.மு.க. இல்லாவிட்டால், அந்த இடத்தை இன உணர்வுக் கொள்கை உடைய ஒருவரால் தான் நிரப்ப முடியும். எப்பாடு பட்டாலும் அது காவிக் கூட்டத்திற்கு பயன் தராது.

அதே வேளையில் அ.தி.மு.க இன்னும் வலுப்படும். ஆனால், முதலில் அ.தி.மு.க வீழ்த்தப்பட்டால் அந்த இடம் தனக்குக் கிடைக்கும் என்று ஆரியம் திட்டமிடுகிறது. தி.மு.க.வா, அ.தி.மு.க.வா என்றால் ஆரியம் அ.தி.மு.க. பக்கம். இப்போது அ.தி.மு.கவுக்கு ஆபத்து என்றால் அதை பி.ஜெ.பி.யைக் கொண்டு நிரப்பத்தான் ஆரியம் நினைக்கும். ஜெயலலிதாவுக்குப் பிறகு மீண்டும் ஒரு ஆரியத் தலைமை அங்கு ஏற்பட வாய்ப்பில்லாத சூழலில் அ.தி.மு.க.வைக் குறித்து அதற்கென்ன அக்கறை?

இந்தச் சூழலில் ஆரியத்துக்கு இரண்டுமே திராவிடக் கட்சிகள் தான். இந்நிலையில் அனைத்து பாரதூர விளைவுகளையும் எண்ணிச் செயல்படுவதே திராவிட இனத்துக்குப் பாதுகாப்பானது. ஊழல் என்ற பெயரில் திராவிட இயக்கங்களை ஒழித்துவிட்டு, உத்தமபுத்திரர்கள் போல் உள்ளே நுழைய வேண்டும் என்பதே மிகப்பெரும் ஊழல் பெருச்சாளிகளான பி.ஜெ.பி.யினரின் கணக்கு. இதை வெளிக் கொண்டுவந்து அவர்களின் குட்டை உடைக்க வேண்டியதும், எச்சரிக்கை உணர்வோடு இவ்வினத்தை வழிகாட்ட வேண்டியதுமான கடமை பெரியார் இயக்கமாம் திராவிடர் கழகத்தைத் தவிர வேறு யாருக்கு இருக்க முடியும்.

இச்சூழலில் தான் தொடர்ந்து நிதானமான அறிக்கைகளை வெளியிட்டு, புதிதாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் பிற்படுத்தப்பட்ட-சமூகத்தவரான ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழக அரசுக்கு எச்சரிக்கை செய்தார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. நாகப்பட்டினத்தில் கடந்த 3.10.2014 அன்று அவர் ஆற்றிய உரை சிந்திக்கத்தக்கதாகும்

இப்போது ஒரு பெரிய வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது. அது என்னவென்றால், கடந்த 50 ஆண்டுகாலமாக இதுவரையில் அகில இந்திய கட்சிகள் தேசியம் பேசக்கூடியவர்கள் யாரும் பதவிக்கு வர முடியவில்லை. எப்படியாவது ஆட்சியில் இருப்பவர்களைக் கீழே தள்ள வேண்டும்; அதை எதைச் செய் தாவது தள்ளவேண்டும் அதுதான் மிக முக்கியம். எதை எதையோ சொல்லிப் பார்த்தார்கள், அவர்களால் அது முடியவில்லை.

இப்பொழுது கடைசியாக, யாரும் சுலபமாக ஏமாறக் கூடிய ஒரு செய்தி. அது என்னவென்று சொன்னால், ஊழல்! ஊழலை ஒழிக்கவேண்டும் என்று சொன்னவுடன், நம்மாள்களும் ஆமாங்க, ஊழலை ஒழிக்கவேண்டும் என்று சொல்கிறார்கள்.

ஊழல்களை நாங்கள் ஆதரிப்பவர்கள் அல்ல;  ஊழலை ஒழிக்கவேண்டும்; ஊழல் இருக்கக்-கூடாது; நேர்மையான ஆட்சி நடக்கவேண்டும். ஆனால், நண்பர்களே, நடுநிலையில் இருந்து நீங்கள் சிந்திக்கவேண்டும். அரசியலில் இந்தக் கட்சி ஊழல் செய்தது; அந்தக் கட்சி ஊழலில் மாட்டிக் கொண்டது; அடுத்த கட்சி ஊழலில் சிக்கப் போகிறது. ஆகவே, இந்த இரண்டு கட்சியையும் ஒழித்துவிட்டு நாங்கள் தான் ஊழலற்ற உத்தமப் புத்திரர்கள் என்று கூறி, பிரச்சாரம் செய்து நாம் வந்துவிடலாம் என்று நினைக்கிறார்கள்.  அண்ணன் எப்பொழுது சாவான்; திண்ணை எப்பொழுது காலியாகும் என்று நினைக்-கிறார்கள்; எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இந்த எச்சரிக்கை மணியை அடிக்கக்கூடிய தகுதி எங்கள் ஒருவருக்குத்தான் உண்டு. இதனைப் பெருமையாகச் சொல்லவில்லை, வேதனையோடு சொல்கிறோம்.

மற்றவர்கள் எல்லாம் இந்த வேலைக்கு வரவில்லை. எல்லோருக்கும் அரசியல் பார்வை; எல்லோருக்கும் தேர்தல் கண்ணோட்டம்! எங்களுக்கு அடுத்த தேர்தல் கண்ணோட்டம் அல்ல; அடுத்த தலைமுறை கண்ணோட்டம்; மானமுள்ள தலைமுறை; உரிமையுள்ள தலைமுறை; அந்தத் தெளிவான தலைமுறை; பகுத்தறிவு உள்ள ஒரு தலைமுறை; அந்தத் தலைமுறை வரவேண்டும் என்கிற உணர்வோடு சொல்கிறோம்.

இன்றைய ஜனநாயகத்தில் இன்றைய தேர்தல் முறை இருக்கின்ற வரையில், இந்த ஊழலை எப்பேர்ப்பட்டவர் களாலும் ஒழிக்க முடியுமா? என்றால், முடியாது!

எந்தக் கட்சி வேட்பாளராக இருந்தாலும் சரி, அவருக்கு 75 லட்சம் ரூபாய் என்று ஒரு வரையறை வைத்திருக்கிறார்கள் என்றால், முன்பைவிட செலவு குறைவாக அல்லவா இருக்கவேண்டும்; ஒழுக்கமான அரசியல்-வாதியாக இருந்தால்; ஜனநாயகம் திருந்தி இருக்கிறது என்றால், முன்பு எவ்வளவு உச்சவரம்பு வைத்தார்களோ, அதைவிட குறைவாக வைக்கலாமே! முன்பைவிட அதிகமான ரூபாயை வரையறையாக வைத்தால், அதற்கு என்ன காரணம்?

சரி, அந்த வரையறைக்குள்தான் வேட்பாளர்கள் கணக்குக் கொடுக்கிறார்கள் என்று யாராவது சொல்லட்டும்! உண்மையை மறைக்காமல், அவர்களுடைய நெஞ்சில் கை வைத்து சொல்லட்டும். நான் கையெழுத்துப் போட்டேன் பாருங்கள், அந்த வரையறைக்குள்தான் செலவு செய்திருக்கிறேன்; அதற்குமேல் செலவே செய்யவில்லை என்று சொல்லட்டுமே! அவர் எந்தக் கட்சி வேட்பாளராக இருந்தாலும் சரி, இது ஒரு பொது உண்மை. சாதாரண பஞ்சாயத்து உறுப்பினரிலிருந்து, நாடாளு மன்ற உறுப்பினர் வரையில் லட்சக்கணக்கான ரூபாயி லிருந்து கோடிக்-கணக்கான ரூபாய்கள் செலவழிக்கப் படுகின்றன.

பிறகு என்ன ஊழலைப்பற்றி பேசுவதற்கு யாருக்கு என்ன தகுதி இருக்கிறது? எல்லாவற்றையும்விட, ஆமாங்க, இதெல்லாம் ஊழல்தானுங்க என்று சொல்கின்ற நம்மில் எத்தனை பேர் பணம் வாங்காமல் ஓட்டுப் போட்டிருக் கிறோம்? ஒவ்வொருவருக்கும் 200 ரூபாய், 500 ரூபாய் கொடுத்தால் ஓட்டு போடுவார்கள் என்று சொல்வது இன்றைக்கு வெளிப்படை. விரும்பினாலும், விரும்பா விட்டாலும் பணம் கொடுத்து ஓட்டு வாங்கினார்கள் என்கிற குற்றச்சாட்டு இருக்கிறதா, இல்லையா? இவ்வளவும் கணக்கில் வருகிறதா, நன்றாக சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

வாக்கை விற்கக்கூடிய வாக்காளர்கள்; பொய் சொல்லி செலவை அதிகமாகச் செய்யக்கூடிய வேட்பாளர்கள்; இவர்களையெல்லாம் வைத்துக்கொண்டு ஒரு ஜனநாயகம், அதுமட்டுமல்ல, கட்சிக்கு தாராளமாக பணம் கொடுக்கலாம். அது கணக்குக் காட்டவேண்டிய அவசியமில்லை. அதை எந்த அரசியல் கட்சியும் வாங்கி வைத்துக்கொள்ளலாம். தகவல் அறியும் சட்டத்தில்கூட, அந்தத் தகவல்களை-யெல்லாம் கேட்கக்கூடாது.

இவ்வளவையும் வைத்துக்கொண்டு, அப்புறம் என்ன ஊழலை ஒழிக்கவேண்டும் என்று சொல்வது – யாரை ஏமாற்ற? முதலில் இந்த நடைமுறை மாறினால்தானே, ஊழலை ஒழிக்க முடியும்.

இவர் ஊழல் செய்தார் என்று, இவரை ஒழி! அடுத்து அவர் ஊழல் செய்தார் என்று அவரை ஒழிங்க! அடுத்தது நாங்க! இந்தியைக் கொண்டு வருவதற்கு, சமஸ்கிருதத்தைக் கொண்டு வருவதற்கு, தேசியம் பேசிக்கொண்டு மிகவும் சவுகரியமாக வருவோம் என்று சொல்லி இந்த நாட்டில் சுப்பிரமணிய சாமிகள் புறப்பட்டுள்ளனர். ஆரியம் திட்டமிடுகிறது. தமிழ்நாட்டினுடைய வரலாற்றையே மாற்றிக் காட்டவேண்டும் என்பதற்குத் தயாராகிறார்கள்.

இப்பொழுது அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. நாங்கள் அடுத்ததாக வந்துவிடுவோம். மக்கள் எல்லோரும் எங்கள் பக்கம் திரும்பி விட்டார்கள் என்று சொல்கிறார்கள்.

இன்றைக்கு அரசாங்கம் மாறியது; மோடி அரசாங்கம் வந்தது. ஈழத் தமிழர் பிரச்சினையில் என்ன மாறுதல் வந்தது? காங்கிரசு அரசாங்கத்தி-லிருந்து என்ன மாறுதல்? இங்கே நாகை மீனவர்கள் எப்பொழுது பார்த்தாலும் போராடிக் கொண்டுதானே இருக்கிறார்கள். மீனவர்களை விடுதலை செய்கிறோம் என்று சொல் கிறார்கள். அதேநேரத்தில், மீனவர்களுடைய வாழ்வாதாரத் திற்கு என்ன தேவை? படகுகள் இல்லாமல் அவர்கள் எப்படி தங்களுடைய தொழிலை செய்ய முடியும்? படகுகளை கொடுக்கமாட்டோம் என்கிறார்கள்; நாள்-தோறும் ஒரு நாடகம் நடைபெறுகிறது.

ஈழப் பிரச்சினை, வெளிநாட்டு உறவுப் பிரச்சினை, மொழிப் பிரச்சினை; மொழியில் இரு மொழிக் கொள்கை; அண்ணா உருவாக்கினாரே, அந்த இருமொழிக் கொள்கை, இந்த  கொள்கையுடைய அரசு இருக்கின்ற வரையில்தானே இருக்கும். அவர்கள் வந்துவிட்டால் என்னாகும்? சமஸ் கிருதம் மேலே வந்து உட்கார்ந்துவிடுமே! வணக்கம் சொன் னால், அபராதம் போடுவார்கள். நமஸ்காரம் என்றுதானே சொல்லவேண்டும் என்பார்கள்.

இப்பொழுதே, காலில் விழுகின்ற கலாச்சாரம் வட நாட்டில் இருந்து வந்து விட்டதே! கயிறு கட்டுகின்ற கலாச்சாரம் வந்துவிட்டதே!

திராவிடர் கழகத்தினுடைய கண்ணோட்டத்தில் இவரை எதிர்க்கிறோம், அவரை ஆதரிக்கிறோம் என்ப தல்ல, ஊழலை நியாயப்படுத்துகிறோம் என்பதல்ல. ஊழல் யார் செய்தாலும், தண்டனை என்றால், அவர்கள் தண்டனையை பெற்றுத் தீரவேண்டும்.  மனமாற்றம் அடைய வேண்டும் திருந்த வேண்டும்; குற்றம் செய்யவில்லை யென்றால் அதற்குரிய வழிமுறை என்னவோ, அந்த வழிமுறையில்தான் செல்லவேண்டும், அதுதான் மிக முக்கியம்.

சட்டப்படி அதற்கு வழிமுறைகள் இருக்கின்றன. அந்த வழிமுறைகளைக் கையாளவேண்டுமே தவிர, பொதுமக்களுக்கோ அல்லது பொதுச்சொத்துக்கோ, பொது அமைதிக்கோ பங்கம் ஏற்படுத்தக்கூடாது. இதைச் சொல்வதற்கு எங்களுக்கு முழு உரிமையும், கடமையும் இருக்கிறது.

இன்றைக்கு அதிகாரமெல்லாம் டில்லியில் குவித்து வைத்துக்கொண்டு, ஒரு ஆட்சி அங்கே மிகப்பெரிய அளவிற்கு வந்துவிட்டது என்று சொல்கின்ற நேரத்தில், இங்கு நமக்கு இதுவரையில் இருந்த வாய்ப்பு களையெல்லாம் அடியோடு மாற்றுவதற்கு, இதுதான் சரியான நேரம் என்று சொல்லி, திட்டமிடுகிறார்கள்.

கடல் வற்றி கருவாடு தின்ன ஆசைப்பட்ட கொக்கு,
குடல் வற்றி செத்ததாம்
என்று ஒரு பழமொழி உண்டு.

அதுபோல், வடக்கே இருந்து வருகிறவர்கள் எல்லாம், கடல் வற்றி கருவாடு தின்னலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், நிச்சயம் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் அதற்கு ஏமாறமாட்டார்கள்.

நீங்கள் அந்த ஆசையிலேயே குடல் வற்றி சாகவேண்டியதுதான்;  சாக வேண்டும் என்று ஆளை சொல்லவில்லை.

இந்த முயற்சிகள் வெற்றி பெறாது என்று சொல்கிறோம். என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உரையாற்றினார். ஆக, காவிக் கொக்குகள் கொத்தித் தின்னும் நிலையிலிருந்து காக்க வேண்டியதும் நம் அனைவரின் கடமை!

– சமா.இளவரசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *