– சு.அறிவுக்கரசு
1954ஆம் ஆண்டில் மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் மா.இராசமாணிக்கம் உரையாற்றும்போது தமிழர் திருமணங்களில் ஆதியில் தாலி இருந்தது இல்லை என்றும் அது பாதியில் புகுந்தது என்றும் பேசினார். தினத்தந்தி நாளேட்டில் வெளியிடப்பட்ட அந்த உரையைப் படித்த ம.பொ.சி. என அறியப்பட்ட சிவஞான கிராமணி என்பவர் அதற்கு மறுப்புத் தெரிவிக்கும் மாதிரியில் உண்மைக்கு மாறானது எனும் தலைப்பில் தினத்தந்தி தீபாவளி மலரில் ஒரு கட்டுரை எழுதினார். இவர் தொடக்கத்தில் அச்சகத்தில் அச்சுக் கோப்பவராகப் பணியாற்றியவர். அதன் மூலம் தன் தமிழறிவைப் பெருக்கிக் கொண்டவர். விபச்சாரத்தில் தொடங்கி, மூடத்தனத்தில் வளர்ந்து முட்டாள்தனத்தில் முடிந்த கதை என்று தந்தை பெரியாரால் வருணிக்கப்பட்ட சிலப்பதிகாரம் எனும் தமிழ்க் காப்பியத்தைப் பயின்று, பாண்டித்யம் பெற்று எழுதியும் பேசியும் வந்ததால் சிலம்புச் செல்வர் என்று சிலரால் பாராட்டப்பட்டவர்.
இந்திய விடுதலைப் போரில் பங்கேற்றுச் சிறைக்-கோட்டம் ஏகிய காரணத்தால் தன்னை சிப்பி ஏந்திய சிவஞானம் என்று அவரே கூறிக்கொள்வது உண்டு. காங்கிரசுக் கட்சியில் இருந்தபோது இவரின் ஆதரவும் அபிமானமும் இராசகோபால ஆச்சாரியார் பக்கம் இருந்தது. பிறிதொரு பெரு அணியின் தலைவரான காமராசருக்கு எதிர்ப்பாகவே செயல்பட்டவர். பார்ப்பனருக்கு விபீஷணனாக இருந்ததால் பார்ப்பனப் பத்திரிகைகளின் விளம்பர சடகோபம் இவருக்கு நன்றாகவே சாற்றப்-பட்டது. தமிழ்ப் பற்று மிக்கவர் என்று காட்டிக் கொள்ளும் வகையில் காங்கிரசில் இருந்து கொண்டே தமிழரசுக் கட்சியை நடத்திவந்தார். அப்படி இருப்பது காங்கிரசுக் கட்சியின் சட்ட விதிகளுக்கு மாறானது என்பதால் இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்து கொள்ளுமாறு காங்கிரசுக் கட்சி கூறியது. அவரும் தமிழரசுக் கழகத் தலைவராகவே இருக்க விரும்பி, காங்கிரசிலிருந்து விலகி நின்றார். சில ஆண்டுகளில் இவரது குரு ஆச்சாரியார் தனிக்கட்சி தொடங்கியபோது இவர் கூட்டணிக் கட்சியாகும் வாய்ப்புக் கிடைத்தது. இருகைவிரல் எண்ணிக்கைக்கு உள்பட்ட உறுப்பினர்கள் எண்ணிக்கை கொண்ட தமிழரசுக் கழகத்தின் தலைவர் எனும் பதவி இவருக்குக் கிட்டியது.
இவருடைய தமிழ்ப் பற்று மிகவும் பிரபலமானது. இந்தி மொழி தமிழ்நாட்டில் திணிக்கப்பட்டபோது இவர் இந்தி வாழ்க என்றார். தமிழும் வாழ்க என்றார். பிறகு இந்தி எழுத்துகளைத் தார் கொண்டு அழிக்கும் போராட்டத்தைப் பெரியாரும் அண்ணாவும் நடத்தியபோது தனது தொண்டர்களைக் கொண்டு தாரை மண்ணெண்ணெய் பூசி அழித்து இந்தி எழுத்துகளைத் துலங்கச் செய்த தமிழ்ப் பற்றாளர்(?)! சில ஆண்டுகள் கழித்து தி.மு.க. அரசின் பதவிகளைக் கேட்டுப் பெற்ற பண்பாளர். அமைச்சர் பதவி கேட்டு ஆலாய்ப் பறந்து அறிஞர் அண்ணாவை அணுகியபோது, விடுதலையில் பெரியார் எழுதிய தலையங்கத்தின் தலைப்பே இது என்ன, நாடா? சுடுகாடா? என்பது. அதிலிருந்தே தந்தை பெரியாரின் கருத்து என்ன என்பதை விளங்கிக் கொண்டார் அண்ணா! ம.பொ.சி.க்கு மந்திரி பதவி தரப்படவில்லை, நாடு பிழைத்தது!
அப்பேர்ப்பட்ட ம.பொ.சி. மறுப்பு எழுதிய மா.இராசமாணிக்கனார் தம் கருத்தை நூலாகவே ஆக்கியுள்ளார். (படிக்க: தமிழர் திருமணத்தில் தாலி).
வரலாற்று ஆசிரியர் பி.டி.சீனுவாச அய்யங்கார் எழுதிய தமிழர் வரலாறு எனும் நூலில் குறித்துள்ளவாறு (ஆங்கில நூல்) 1.எரிவளர்த்தல் இல்லாத, 2.தீவலம் வராத, 3.புரோகிதர் இல்லாத அந்தக் காலத் திருமணங்கள் முற்றிலும் தமிழர்க்கே உரிய திருமணங்களாகும் எனக் குறிப்பிடுகிறார். அகநானூறு பாடல்கள் 86ம் 136ம் கூறும் திருமணங்கள் மேற்கண்ட முறையில் நடந்தனவே! 86ஆம் பாடலின்படி திருமண நிகழ்ச்சியின் முதல் கட்டம் விருந்து. அடுத்து மணப்பந்தலில் தரையில் புதுமணல் பரப்பப்பட்டு விளக்கேற்றி வைக்கப்பட்டது. இளங்காலைப் பொழுதில் நடந்ததால் விளக்கு வைக்கப்பட்டது. அடுத்து உரோகிணி நட்சத்திரம் சந்திரனுடன் கூடிய நல்ல நேரத்தில் மணமகளைக் குளிப்பாட்ட பெண்கள் குடங்களில் நீர் எடுத்து வருதல். நீர்க்குடங்களில் நெல்லும் அரும்பும் தூவி நான்கு பெண்கள் வாழ்த்துக் கூறினர். நன்மணம் முடிந்தது.
136ஆம் பாடலின்படி இறைச்சி கலந்து சமைக்கப்பட்ட (புலால்) வெண்சோறு விருந்து நடைபெற்றது. திங்களும் உரோகிணி நட்சத்திரமும் கூடிய நல்ல நேரத்தில் மணமனை அலங்கரிக்கப்பட்டது. மணமுழவும் முரசும் முழங்கப்பட்டன. மணமகளைக் குளிக்க வைத்தனர். வாகை இலை அறுகின் கிழங்குகளும் அரும்புகளோடு கட்டப்பட்ட வெள்ளை நூல் மணமகளுக்கு காப்பு என்ற வகையில் சூட்டப்பட்டது. மணமகளுக்குத் தூய ஆடை அணிவிக்கப்பட்டது. அணிமணிகள் அணிவிக்கப்பட்டன. திருமணம் முடிந்தது.
பார்ப்பனப் புரோகிதர் நுழைந்தது சிலப்பதிகாரக் கதையில்தான். மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட, தீவலம் செய்து கோவலன் கண்ணகி திருமணம் நடந்துள்ளது. பாலிகை ஏந்தி (முளைப்பாரி) மகளிர் நின்றுள்ளதும் கூறப்படுகிறது. மணப் பெண்ணின் கையை மணமகன் பிடித்தல்தான் கடைசிச் சடங்கு. இதை வடமொழியாளர் பாணிக்கிரகணம் என்று கூறுவர். ஆரியச் சடங்குகள் மெல்லமெல்ல ஒவ்வொன்றாகப் புகுத்தப்பட்டுள்ளன. ஆனாலும் தாலி வரவில்லை. தாலி கட்டப்படவில்லை.
மேற்கண்ட சடங்குகள் செய்யப்படுவதற்கு முன்பு அகலுள் மங்கல அணி எழுந்தது எனும் சொற்றொடர் உள்ளது. இதனை மாங்கல்ய சூத்திரம் எனப் பொருள் கூறியுள்ளார் ஒருவர். அவரே பிறிதொரு இடத்தில் வரும் மங்கல அணியே அன்றியும் / பிறிதணியணியப் பெற்றதை எவன் கொல் எனும் வரிக்குப் பொருள் கூறும்போது மங்கல அணி என்பதை இயற்கை அழகு எனக் கூறுகிறார் என்பதை டாக்டர் மா.இராசமாணிக்கம் எடுத்துக் காட்டியுள்ளார். மங்கல அணியிற் பிறிதணி மகிழான் என்று அந்திமாலைச் சிறப்புசெய் காதையில் வரும் இடத்தில் இயற்கை அழகு என்றே பொருள் கூறி, அதைத் தவிர வேறு அணியைச் செய்யவில்லை என்கிறார்.
கோவலன் கொலைப்பட்ட பிறகு, மதுரையை எரித்துத் தன் சினம் தணித்த கண்ணகி துர்கா கோவிலின் முன் நின்று தன் கைவளையல்களை உடைத்தாள் என்றுதான் சிலப்பதிகாரம் பாடுகிறது. தாலியை அறுத்தாள் எனப் பாடவில்லை. எனவே கைவளையல்கள்தான் மணமான பெண்ணுக்கான அடையாளமாக இருந்துள்ளது.
இன்றைக்கும் கருவுற்ற பெண்டிர்க்கு வளைகாப்பு நடத்தப்படுகிறது. குழந்தை பெற்று உயிருடன் மீளவேண்டும், சுமங்கலியாகவே வாழவேண்டும் எனக் காட்டுவதற்காக வளைகாப்பின்போது வளையல்கள் கைமுழுக்க அணிவிக்கப்படுவதும் இதனால்தான். அந்தச் சடங்கே மூடத்தனம். பிள்ளைப்பேறு சுகமாக நடைபெற மருத்துவ வசதிகள்தான் தேவை. வளையல்கள் என்ன செய்யும்? இந்த மூடத்தனத்தைத் தமிழ்நாடு அரசே தன் செலவில் செய்கிறது எனும்போது இந்திய அரசமைப்புச் சட்டக்கூறு 51(கி) மக்களைப் பார்த்துச் சிரிக்கிறது.
எட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கதைக் காப்பியத்தில் ஆண்டாளின் திருமணம் கண்ணன் எனும் கடவுளோடு நடந்ததாக உள்ளது. இந்திரன் முதலிய தேவர்கள் வருகை, மணமகளுக்குப் புத்தாடை கட்டி காப்பு நாண் கட்டுதல், மணமகன் வருகை, பின்னணி இசை முழங்க கண்ணன் ஆண்டாளின் கையைப் பிடித்தல், புரோகிதர் மந்திரம் கூறல், தீவலம் வருதல், ஆண்டாளின் காலைக் கண்ணன் தூக்கி அம்மிமேல் வைத்தல், கண்ணனும் ஆண்டாளும் தத்தம் கைகளை இணைக்க உறவினர்கள் பொரி வாரித் தூவுதல், குங்குமச் சாந்துபூசி மணமக்களை மஞ்சனம் ஆட்டல் என எல்லாச் சடங்குகளும் கூறப்பட்டன. தாலி கட்டப்படவில்லை.
9ஆம் நூற்றாண்டின் சூளாமணி நூலில் மணமகளை அவள் தந்தை தாரை வார்த்துத் தந்தது, தீ வளர்த்தது, தீவலம் வருவது, அம்மி மிதித்தது, அருந்ததியைக் காட்டியது எனும் சடங்குகளே குறிக்கப்படுகின்றன. தாலி பற்றிய பேச்சே கிடையாது.
10ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்ட சீவக சிந்தாமணியில் 3200 பாடல்கள் உள்ளன. செய்யுள்கள் 81_84இல் கோவிந்தை திருமணம் பேசப்படுகிறது. அதில் மங்கலக் கடிப்பு என வருகிறது. கடிப்பு என்றால் காதணி. தாலி வரவில்லை. செய்யுள்கள் 345, 346இல் பாடப்படும் காந்தருவதத்தை திருமணம் தீவலம் வருவதோடு முற்றுப் பெறுகிறது. தாலி இல்லை. செய்யுள்கள் 213_215இல் கூறப்படும் குணமாலை திருமணத்திலும் தாலிபற்றிய குறிப்பில்லை. செய்யுள்கள் 179_181இல் வரும் பதுமை திருமணத்திலும் தாலி இல்லை. கேமசரி திருமணம் (பாடல் 79) தாலி கட்டியதைப் பாடவில்லை. அதுபோலவே கனகமாலை, விமலை, கரமஞ்சரி இலக்கணை ஆகியோர் திருமணங்களிலும் தாலி கட்டப்பெறவில்லை.
11ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட கந்த புராணத்தைக் கச்சியப்ப சிவாச்சாரி என்பார் எழுதினார். இதில் அப்பா, மகன் திருமணங்கள் பாடப்பட்டுள்ளன. சிவன்_உமா திருமணம், முருகன்_தெய்வயானை திருமணம், முருகன் _ வள்ளி திருமணம் ஆகியவை பாடப்-பட்டுள்ளன. சிவன் உமாவின் கையைப்பற்றிய சடங்கான பாணிக்கிரகணம் பற்றி மட்டுமே குறிக்கப்படுகிறது. நாரதன் இருந்து நடத்திவைத்த முருகன்_வள்ளிக்குறத்தி திருமணம் எரி வளர்த்துப் பிற சடங்குகளோடு நாரதன் புரோகிதம் பார்க்கச் செய்யப்பட்டதாம். இந்திரன் மகளான தெய்வயானையுடன் முருகன் செய்து கொண்ட திருமணம் மணமகளின் தந்தை தாரை வார்த்துத் தர, முருகன் ஏற்று, பிரம்மனால் செய்யப்பட்ட தாலியைத் தெய்வயானையின் கழுத்தில் கட்டினான் என்று பாடப்படுகிறது.
செங்கமலத்திறை சிந்தையின் ஆற்றி
அங்கையின் ஈந்திட ஆண்டகை கொண்ட
மங்கலநாணை மணிக்களம் ஆர்த்து
நங்கை முடிக்கொர் நறுந்தொடை சூழ்ந்தான்
என்று பாடல் 247 கூறுகிறது. மூன்று திருமணங்கள் குறித்துப் பாடிய கச்சியப்பன் ஒரு திருமணத்தில் மட்டும் தாலி கட்டுகிறான்; தாலியைக் காட்டுகிறான்.
இந்தப் பாடல் எவனோ செருகியதாக இருக்குமோ? இடைச்செருகலாக இருக்கும் என்கிற அய்யத்தைப் பேராசிரியர் எழுப்புகிறார்.
இதே காலகட்டத்தில் இயற்றப்பட்ட கலிங்கத்துப் பரணியில் பாணிக் கிரகணம் மட்டுமே செய்விக்கப்படுகிறது. தாலி காணோம்.
12ஆம் நூற்றாண்டில் சேக்கிழார் பாடிய பெரிய புராணத்தில் சிவாச்சாரியான (குருக்கள்) சுந்தரர் இரண்டு திருமணங்களும் சுமார்த்தப் பார்ப்பனனான சம்பந்தனின் ஒரு திருமணமும் காட்டப்படுகின்றன. தாரை வார்த்தல், கரம் பிடித்தல், தீவலம் வருதல் முதலியன மட்டுமே வருகின்றன. தாலி கட்டப்படவில்லை.
குங்கிலியக் கலய நாயனார் என்பார் வறுமையில் வாடியபோது மனைவியின் கோதில் மங்கல நூல் தாலி கொடுத்து நெல் வாங்கியதாகக் கூறப்படுகிறது. தாலியை நூலில் கோத்து அணிந்திருந்தது தெரியவருகிறது. இதனையே காலவழு (Anachronism) என்று ஆய்ந்து அறிவிக்கிறார், பேராசிரியர் இராசமாணிக்கனார். 12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டாலும் வரலாறுக்குரிய நாயனார் 7ஆம் நூற்றாண்டவர். எனவே 12ஆம் நூற்றாண்டுப் பழக்கத்தை 500 ஆண்டுகளுக்கு முன்பே திணித்துக் கூறிய குற்றம் உடையது என்கிறார்.
(தொடரும்)