கேள்வி : தமிழ்த் தேசியவாதிகள், தமிழன் இந்து என்றும், சிவனைத்தான் பழைமைத்தமிழன் வணங்கினான் என்றும் கதை கட்டுகின்றனரே.. இதற்கான காரணமென்ன?
– செ.சி.பிரபாகரன், எழுமலை
பதில் : இந்து என்ற சொல் எந்த மொழி என்று இந்தப் புதுப் பதவிப் பைத்தியங்களைக் கேளுங்கள். பார்ப்பான் இவர்கள் கணக்கில் தமிழனா? அல்லாதவனா _ கேளுங்கள். பிறகு தெரியும் சிவன் படும் பாடு! உளறல்களுக்கு உலககெங்கும் இடம் உண்டே!
கேள்வி : பெரியார் கருத்துகள் மக்களிடம் எப்படிச் சென்றடைகின்றன? கணினியா? பொதுக்கூட்டமா?- களப்பணியா? – அ.பாலமுருகன், மேலூர்
பதில் : எல்லாமும் சேர்ந்தது -_ இன்றைய காலகட்டத்தில்.
கேள்வி : கலப்பு மணம் வளர, ஜாதி ஒழிய, இன்னும் நாம் என்ன செய்ய வேண்டும்? அரசு எப்படி உதவி செய்யலாம்? – த.சரவணன், பெரம்பலூர்
பதில் : நல்ல கொள்கை உள்ள அரசு புதிதாக மி.சி.னிஷீணீ – ஜாதி மறுப்புத் திருமணங்களுக்கு முதலில் 5% இடஒதுக்கீடு என்று தொடங்கி, மற்ற பிரிவுக்கென உள்ளதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து, இதை உயர்த்தினாலே ஏராளம் (கலப்பு) ஜாதி மறுப்புத் திருமணம் _ வேலைவாய்ப்பு _ கல்வி வாய்ப்பு மூலம் தானே கிடைக்கும் என்றால் நிச்சயம் 10, 15 ஆண்டுகளில் மிகப்பெரிய மாறுதல் ஏற்படும். திராவிடர் கழகம் பல ஆண்டுகளுக்கு முன்பே இதை வலியுறுத்தியுள்ளது.
கேள்வி : நாத்திகம் பரவுவதைத் தடுத்து-விட்டதாக நக்கீரன் இதழ் பேட்டியில் இந்து முன்னணி இராம. கோபாலன் கூறியுள்ளதைப் பார்த்தீர்களா?
– இரா.முல்லைக்கோ, பெங்களூர்
பதில் : அப்படியா பலே பலே, இனிமேல் அவருக்கு வேலை இருக்காதே _ பாவம் அவர் வேலையில்லாமல் திண்டாடக் கூடாதே! பின் ஏன் கடவுளர் சிலைகளைப் பூட்டிவைக்-கின்றனர் என்று கேளுங்கள் _ அவரிடம்!
கேள்வி : சுடுகாட்டுப் பிணம் தின்னும் அகோரி நிர்வாண சாமியார் என திருச்சியிலும் தலைநீட்டுகிறதே. இது தடுக்கப்படுமா?
-நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்
பதில் : கழகத் தோழர்கள் பிரச்சாரத்தின்மூலம் தடுக்க ஏற்பாடு செய்வார்கள் _ விரைவில்!
கேள்வி : சட்டத்தைக் காயாக்கி பல்லாங்குழி ஆடும் சர்வ வல்லமை படைத்தவர்களாய் அரசியல்வாதிகளும், ஆன்மீகவாதிகளும் இருக்கும்போது, சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்பது _ கேலிக்கூத்தா? முரண்பாடா?
– சீர்காழி கு.நா.இராமண்ணா, சென்னை
பதில் : சில வேளைகளில் முரண்பாடு. பல நேரங்களில் கேலிக்கூத்து.
கேள்வி : மங்கள்யான் செவ்வாய் கோளில் நிலைநிறுத்தப்பட்டுவிட்டது. இனியேனும் செவ்வாய் தோஷம் _ ஜோதிடம் தொலையுமா?
– க.ராசன், நெய்வேலி
பதில் : அவ்வளவு சீக்கிரம் நம் மக்களுக்குப் புத்தி வந்துவிடுமா என்ன? புதியன புகுதலும் பழையன இருத்தலும்தானே நம் மக்கள் வழி _ என்றாலும் அடிப்படை ஆட்டங் கண்டு-விட்டது!
கேள்வி : தந்தை பெரியார், மணியம்மையார் திருமணம் நடந்தே ஆகவேண்டும் என்ற அவசியம்தான் என்ன? கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள். ஏனென்றால் அவருடைய பொதுவாழ்வில் பெரும் சறுக்கல் ஏற்படுத்திய நிகழ்வு என்று கூறுகின்றனரே? – ஜெயராஜ், மின்னஞ்சல் கேள்வி
பதில் : பெரியார் _மணியம்மை திருமணம் என்ற விரிவான புத்தகம் வந்துள்ளது; அதைப் படியுங்கள். பிறகு புரியும், அது சறுக்கல் அல்ல. பெருக்கல் என்பது! கேள்வி : லோக குரு என்று கூறும் காஞ்சி சங்கர மடத்தில் சமைத்த உணவை மீதி இருந்தால் குழிவெட்டி மண்ணில் புதைக்கிறார்கள் என்று கேள்விப்-பட்டோம். அது உண்மையா? மனிதநேயம் வளருமா? – சா.இராசேந்திரன், புழல்சிறை
பதில் : ஆம் உண்மைதான்; காஞ்சிபுரத்து நண்பர்கள் _ மடத்துடன் தொடர்பு உடையவர்கள் இத்தகவலை கூறியுள்ளனர்! ஜாதி காப்பாற்றும் ஏற்பாடு!
கேள்வி : பகுத்தறிவுக் கருத்துகளை இளைய சமுதாயத்தினர் சிந்திப்-பதைவிட மூடப்பழக்கங்களை எளிதில் பற்றிக் கொள்கிறார்களே! ஏன்?
– அ.கண்ணகி, மதுரை
பதில் : எப்போதும் நோய்க்கிருமிகள் உடலை எளிதில் பற்றிப் புகுந்து-கொள்ளும். சிகிச்சை _ மருந்துகள் கொஞ்சம் கால அவகாசம் எடுத்துக்-கொள்ளும். அதுபோல!
கேள்வி : கடவுளை _ மதங்களை _ மூடநம்பிக்கைகளைக் கடுமையாக எதிர்த்த தந்தை பெரியார் 1923 முதல் 1973 வரை இஸ்லாம் மதத்தை மட்டும் ஏற்றுக்கொண்டு பாராட்டி பலமுறை பேசியுள்ளாராமே _ குறிப்பாக அவரது கடைசிப் பேச்சான 1973 தி.நகர் பேச்சில்கூட இஸ்லாத்தைப் பாராட்டினாராமே, உண்மையா? – அப்துல் ஹமீது, தியாகராய நகர்
பதில் : இஸ்லாம் மதம் என்பது மற்ற மதங்களோடு ஒப்பிடுகையில் பரவாயில்லை; அதில் ஜாதி_ தீண்டாமை இல்லை என்று குறிப்பிட்டார். மற்றபடி அவர் கூறிய கருத்தின் முழு விளக்கத்தை குடிஅரசு களஞ்சியங்களில் படியுங்கள்.
கேள்வி : நாஸ்டர்டாமஸ் சொன்னதும் நடக்கிறதே? அவருக்கும் தொலைநோக்காளர் பெரியாருக்கும் என்ன வேறுபாடு?
– சி.முத்துக்குமார், கோரிப்பாளையம்
பதில் : நாஸ்டர்டாமஸ் என்பது எல்லாம் அப்படியே நடந்துவிடவில்லை; வாதத்திற்காக வைத்தாலும் அவர் கூறியதாகச் சொல்லப்படுவது திட்டவட்டமான ஆதாரங்களைக் கொண்டது அல்ல; தந்தை பெரியார் கூறியது ஆதாரபூர்வமாக, காரண காரிய விளக்கத்தின் ஆவணப் பதிவுகளாக உள்ளது!
கேள்வி : விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை மூடநம்பிக்கைக்குப் பயன்படுத்திக் கொண்டே இருந்தால், எப்போது முற்றிலும் மூடநம்பிக்கையை நம்மால் ஒழிக்க முடியும்? – கலைச்செல்வன், தர்மபுரி
பதில் : நமக்குள்ள பெரிய சவாலும் சிக்கலும் அதுதான்; என்றாலும், அறிவியல் முன் அது நிற்காது, வெற்றி பெறாது.