தசரா, விஜயதசமி, தீபாவளி ஆகிய ஹிந்துமதப் பண்டிகைகள் எதுவாக இருந்தாலும், அந்தப் பண்டிகைக்கான புராணக் கதையையோ, அதனுடைய தத்து-வார்த்தத்தையோ பார்ப்பதும், அல்லது அறிவியல் தர்க்கங்களையோ அலசி ஆராயாமல் எதார்த்தமாகப் பார்த்தால்கூட, இந்த ஹிந்துமதப் பண்டிகைகள் மக்கள் விரோதமான காரியங்களையே செய்துகொண்டு இருக்கின்றன.
இதோ இப்போது கொண்டாடித் தீர்த்திருக்கிறார்களே? தசரா என்றும் விஜயதசமியென்றும், இதன் பயன் என்ன? ஊர்முழுதும் குப்பைமேடானதுதானேதவிர இதில் வேறென்ன இருக்கிறது? சென்னை போன்ற பெருநகரங்களில் இதுபோன்ற பண்டிகைகளின் போது, வாழை இலை, வாழைக்கன்று, மாவிலை உள்ளிட்டவை மங்களப் பொருட்கள் என்ற பெயரில் பயன்படுத்தப்பட்டுத் தூக்கி எறியப்படும். இதுபோன்ற நாள்களில் துப்புரவுப் பணியாளர்களும் பிறந்த ஊர்களுக்குச் சென்றிருப்பர். அதுவும் இந்த ஆண்டு தொடர்ந்து ஆறுநாட்கள் விடுமுறை? எப்படியிருக்கும் நகரம். இதில் அத்தியாவசிய உணவுப்பொருளான பூசணிக்காய், தேங்காய் போன்றவற்றைச் சூறையிடுவது என்ற பெயரில் சாலைகள் குப்பைகளால் நிரம்பி வழியும். அந்தக் குப்பைகளும் உடனடியாக அகற்றப்-படாமல் அழுகி துர்நாற்றம் ஏற்படுவதுடன் சுற்றுச்சூழலும் கெடும். இதனால் மக்களுக்கு பல பாதிப்புகள் ஏற்படும்.
நூறாண்டுகளுக்கு முன்னால் ஈரோட்டில் தொற்றுநோய் பரவி மக்கள் கொத்துக் கொத்தாக மாண்டு கொண்டிருந்த சூழலில், மனிதநேயரான தந்தை பெரியார் தனக்கு அந்த நோய் தொற்றும் என்பதைப்பற்றிக்கூட கவலைப்படாமல், களத்தில் இறங்கி அந்த மக்களுக்கு மருத்துவ உதவி கிடைக்கச் செய்தார்.
சமூக மருத்துவரான தந்தை பெரியார், அந்த நோய் பரவியதற்கான காரணத்தைச் சொல்லும்போது, இந்த மாதிரி நோய் வரக்காரணம் அந்த மாதங்கள் உற்சவ காலம். பல ஊர்க்காரர்கள் வந்து ஓர் ஊரில் கூடுவது உற்சவத்தின் அறிகுறி _- கண்டபடி சாப்பிடுவது; கண்ட இடத்தில் அசிங்கம் செய்வது; வாய்க்கால் ஓரத்தில் இருக்கும் ஊர்களின் ஜலதாரைக் கசுமாலத் தண்ணீர் வாய்க்காலில் விழுவது; அந்தத் தண்ணீரைக் குடிப்பது; தூக்கம் கெடுவது; பாமர மக்கள் அதிகம் போக்குவரத்துக் காரணமாய் ஆங்காங்கு நோய் பற்றியும், அம்மக்கள் வழிப்பயணத்தில் அடைந்த பலவீனம் — அசவுகரியம் காரணமாய்த் தங்கும் இடங்களில் நோய்க்கிருமிகள் பரவிப் பல வழிகளில் மக்களைப்பற்றும்படி ஆகிவிடுகிறது. (கடவுளும் மனிதனும் – தந்தை பெரியார்) என்று பல்லாண்டுகளுக்கு முன்னாலேயே தெள்ளத் தெளிவாகக் கூறியிருக்கிறார். ஆனால், இன்னமும் பெருவாரியான மனிதர்கள் மாறவில்லையே. இதோ அடுத்தொரு பண்டிகை. தீபாவளி. ஆளாளுக்கு ஒரு வியாக்கியானம். அதில் பட்டாசுகளை வெடித்து சாலைகள் மொத்தமும் சிதறிக் கிடக்கும். மழை பெய்யும் வாய்ப்பும் உண்டு. அந்த வெடிமருந்துடன் மழைநீரும் சேர்ந்து என்னென்ன கேடுகள் வரப்போகிறதோ? இதில் உயிருக்கும் ஆபத்துண்டு.
சுற்றுச்சூழல் கேடும் பெருமளவில் ஏற்படும். இந்த ஹிந்து மதத்தால் மக்கள் படுகிறபாடு கொஞ்சமா நஞ்சமா? சென்னையைப் போலவே பெருநகரமாக இருக்கின்ற பூங்கா நகரம், தூய்மை நகரம் என்றும் பெயர் பெற்ற பெங்களூரு, இந்தப் பண்டிகைகளால் குப்பை நகரமாக மாறியதென்று தினகரன் கர்நாடகப் பதிப்பு கட்டுரை தீட்டியிருக்கிறது. அதில், பெங்களூரு மாநகராட்சிப் பகுதி வசந்த் நகரில், மாதம்தோறும் 5 டன் குப்பைகள் உருவாகின்றன.
அத்துடன் வீடுகளில் சேகரிக்கப்-படும் குப்பைகள் தனியாக 2 அல்லது 3 டன்னும் சேர்கிறது. சாதாரண இந்தச் சூழலிலேயே துப்புரவுப் பணியாளர்கள் குறைந்த அளவில்-தான் ஈடுபடுகிறார்கள். இந்நிலையில் தசரா, – ஆயுத பூஜைக்காக கிராமங்களில் இருந்து மாவிலை, வாழை இலை, வாழைக்-கன்றுகள் கட்டுக்கட்டாக குவிந்துள்ளன. மக்கள் போடுகிற குப்பைகள் தவிர, விற்பனையாகாத இதே பொருள்களை, கடைக்காரர்கள் அப்படியப்படியே போட்டு-விட்டுப் போய்விடுகிறார்கள். இவையெல்லாம் சேர்ந்து 198 வார்டுகளிலும் நூற்றுக்கணக்கான டன் குப்பைகள் சேர்ந்துவிட்டன. மலையெனக் குவிந்துவிடும் குப்பைகளை அகற்றுவதில் பணியாளர்கள் கவனம் செலுத்துவதில்லை என்று மாநகராட்சி தரப்பில் கவலையோடு கூறுகின்றனர் என்று பொறுப்போடு செய்தி வெளியிட்டிருக்கிறார்கள்.
இதனால் தூய்மை நகரம் இன்று குப்பை நகரமாக மாறியிருக்கிறது. இதுமட்டுமா? உணவுப் பொருள்கள் எவ்வளவு வீணா-கின்றன? இந்தப் புள்ளி விவரங்களையெல்லாம் யார் எடுப்பது? கொடுப்பது? இந்தக் கணக்கு, சுகாதாரம் இவைகளில் கவனம் செலுத்தாத நாடு எப்படி உருப்படும்?
இந்தக் கேடுகளைப் பார்த்தாவது மக்களுக்குப் புத்திவரவில்லையே என்றுதான் நமக்குக் கவலையாக இருக்கிறது. கடவுள், அது தொடர்பான மூடநம்பிக்கைகள் ஆகியவற்றில்-தான் மக்கள் பலருக்குத் தெளிவு ஏற்படவில்லை என்றாலும், அவர்களை நேரிடையாகப் பாதிக்கின்ற இது போன்ற சுகாதார விசயத்திலாவது புத்தி கொள்முதல் ஆகாதா என்று நாம்தான் தவிக்க வேண்டியிருக்கிறது. கர்நாடகாவில் இதையெல்லாம் சுட்டிக்-காட்டுவதற்கான வாய்ப்பாவது இருக்கிறது. இங்கு அதுவும் இல்லை. ம்.. என்ன செய்வது? மதச்சார்பற்ற அரசு அல்ல மதமற்ற ஓர் அரசு வந்தால்தான் இந்த ஹிந்துமதக் குப்பைகளுக்கு குட்பை சொல்ல முடியும்! அதுவரையில் ஊதுகிற சங்கை ஊதிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.
– உடுமலை
Leave a Reply