வாங்க கூட்டலாம்!

அக்டோபர் 16-31

இந்திய நாட்டில் இன்னல்களே இல்லாமல் செய்யும் வல்லமை படைத்தவராக தன்னைக் கருதுபவரும் வல்லபபாய் பட்டேலுக்கு உலகத்தில் இல்லா உயரச் சிலை உருவாக்கியே தீருவேன், இந்து தேசத்தை அமைத்தே தீருவேன் என்ற உறுதிப்பாடுடன் அதற்காக மக்களைத் தன்வயப்படுத்துவதற்காக தன்னால் இயன்றமட்டிலும் தனி மனிதனாய் நின்று இடைத்தேர்தல்களில் இடுப்பொடிந்து தள்ளாடும் தன் தாமரைச் சின்னக் கட்சியைத் தாங்கிப் பிடிக்கும் நம் தலைமையமைச்சர் நரேந்திர மோடியின் நரித் தந்திரத்தில் உருவான சுவட்சா பாரத் அபியான் (தூய்மை இந்தியா இயக்கம்) திட்டத்தில் நாடெங்கிலும் உள்ள நல்ல நடிகர்கள்  தப்புதப்பு… மனிதர்கள் பங்கேற்றனராம்.

 

பரந்துபட்ட பாரத தேசத்தின் பல பகுதியிலும் பாரதத்தின் புதல்வர்களும், புதல்விகளும் அகன்ற பாரதத்தின் அழுக்கை அகற்றுவதற்காக அக்டோபர் 2ஆம் தேதி காந்தி பிறந்த நாளன்று விளக்கமாற்றைத் தூக்கிக் கொண்டு வீதி வீதியாய் வந்துவிட்டனர்.

புதுடில்லியில் உள்ள வால்மீகி காலனிக்கு துடைப்பக் கட்டையுடன் வாளியை எடுத்துக்-கொண்டு குப்பை அள்ளுவதற்காக குழுவோடு வந்து சேர்ந்தார் புதிய நடிகர்; சாரிங்க! மறுபடியும் மறுபடியும் தப்பாவே தோணுது. டி.வி.யில உங்களுடைய படத்தையே அடிக்கடி காட்ட ஆரம்பித்துவிட்டதால் பிரதமர் என்பதே மறந்து போகுதுங்க.

துப்புரவுத் தொழிலாளிகள் வசிப்பிடத்திற்கே துப்புரவு செய்ய வந்துவிட்டார் மோடி. அதிகாலையில் மலம் அள்ளச் சென்று மாலையில் வீடு திரும்புபவர்கள் வீதியைப் பளபளக்கச் செய்த செப்படி வித்தைக்காரர் நரேந்திர மோடி அவர்கள் நல்ல உடையணிந்து வந்துவிட்டார். தெருக்களைக் கூட்டிப் பார்த்தார், தேகமெங்கும் வியர்க்க வியர்க்க. காமிராக்கள் காட்சிகளை அள்ளிக் கொண்டன. அகிலமெங்கும் காட்டத் தொடங்கின.

தொடர்ந்தார்கள் நாட்டின் மற்ற மற்றப் பகுதிகளில். கூட்டு கூட்டு என்று கூட்டினார்கள்; பெருக்கு பெருக்கு என்று பெருக்கினார்கள். தமிழிசையும், வானதியும், உமா பாரதியும், ஸ்மிருதி ராணியும்  கூட்டிப் பழகத் தொடங்கினார்கள். முடிந்த காட்சியின் முடிவுரையாக 9 பேருக்கு அழைப்பு விடுத்தார் பிரதமர். கமலஹாசன் களிப்படைந்துபோய் தனக்குக் கிடைத்த பெரும்பாக்கியம் என்றார். பாவம் அவர் என்ன செய்வார்? விசுவரூபம் பாகம் 2 வெளியாக வேண்டுமே! சூர்யா சுறுசுறுப்பாக நானும் கூட்டுவதற்குத் தயார் என்றார். இவர் எல்லோருக்கும் நல்லவராகவே இருக்கப் பார்க்கிறார். குஷ்புவோ நானும் கூட்டுகிறேன் குப்பையை என்று சொல்லிவிட்டார். அடுத்ததாக அகில உலக ஆறாவது பணக்காரர் அனில் அம்பானி நானும் இந்த ஆட்டத்திற்குத் தயார் என்று துடைப்பத்தோடு நாட்டைச் சுத்த்த்தமாகத் துடைப்பதற்குத் தயாராகிவிட்டார்.

விளக்குமாறு வியாபாரிகளோ வியாபாரத்தை பெருக்கி-யதற்காக நன்றி கூறுகிறார்கள் நரேந்திர மோடிக்கு. வீதியைக் கூட்டியது போதும் மோடிஜி. வாருங்கள்! மலத்தை மனிதர்கள் தங்களுக்கு முடிந்த இடத்தில் இருந்து வைத்து-விடுகிறார்கள். கண்ட இடத்தில் கழித்து விடுபவர்களுக்கு நமது சுவட்சா பாரத் அபியானைப் பற்றிச் சொல்லுங்கள். முன்னு-தாரணமாக நீங்களே செயலில் இறங்குங்கள். வராக அவதாரத்தை வணங்கும் தாங்கள் பூமாதேவியின் மேல் கிடக்கும் நரகலை-யெல்லாம் கூடையில் வாரிப் போடுங்கள். ஸ்டார்ட்… கேமரா ரெடி! ஆக்க்ஷன்! நாடெங்கும் நேரடியாக ஒளிபரப்புங்கள். 9 பேரைத் தேர்ந்தெடுத்து இதையும் செய்யச் சொல்லுங்கள். இன்னும் நாட்டில் நிறைய நடிகர், நடிகைகள், தொழில் அதிபர்கள் பாக்கி இருக்கிறார்கள்.

ஆனால் பாருங்கள்! என்ன சொன்னாலும் கேட்கமாட்டேன் என்கிறார்கள் நம் மக்கள். நாம் காட்டாத எய்ட்ஸ் விளம்பரமா? குடியின் தீமை பற்றி, சிகரெட்டின் அபாயம் பற்றி நாம் சொல்லாததா?  சாலை விதிகள் பற்றி நாம் கூறாததா? தூய்மை இந்தியா இயக்கமாகட்டும், மற்ற எதுவாக வேண்டுமென்றாலும் ஆகட்டும், தனி மனிதனுக்கு தன்னைப் பற்றியும் நாட்டைப் பற்றியும் பொறுப்புணர்ச்சி வர வேண்டும். அதனைக் கொண்டு வருவதற்கு கேமரா முன்னால் நடிப்பதை விட்டுவிட்டு நல்லதாக தங்களிடம் உள்ள வலிமை வாய்ந்த அரசு இயந்திரத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்பதை யோசித்துப் பார்த்துச் செயல்படுத்துங்கள்.

இப்படி விளம்பர வெளிச்சத்திலேயே நாட்டை ஆளும் பிரதமராக மட்டும் இருக்காதீர்கள். வாக்குகளைக் கூட்டுவதற்காகவும், பெருக்கு-வதற்காகவும் தன்னால் இயன்ற அளவு மனிதர்களின் மனதை வளைத்துப்போடும் முயற்சியில் பிரதமராகிய நீங்கள் ஒருபுறம் இறங்கியிருக்க, நாட்டின் இன்னொரு பகுதியில் தான் வந்து சென்றதற்காக கோவிலில் தண்ணீர் ஊற்றிக் கழுவிப் பெருக்குவதையும், கூட்டுவதையும் நொந்து போய்ச் சொல்கிறார், ஒரு மாநிலத்தின் முதல்வர்.

பீகார் மாநிலத்தின் மதிப்புமிகுந்த முதல்வர் மாண்புமிகு ஜிதன்ராம் மாஞ்சி தான் அவர். மாநிலத்தின் எச்செயலும் இவர் இசைவின்றி நடவாது.

ஆனால் என்ன செய்ய? கல்லைக் கடவுள் என்றெண்ணிக் காணச் சென்றதால் காவி உடைதரித்த பார்ப்பனர்கள் அவர் கால் வைத்த இடங்களையெல்லாம் கழுவிச் சுத்தம் செய்தார்களாம்.

இப்படி ஏற்கெனவே முப்படைக்கும் தலைமை அமைச்சராகப் பணியாற்றிய பாபு ஜெகஜீவன்ராம் அவர்களுக்கும் இதேபோன்று நடந்த அவமதிப்பும் நினைவிற்கு வருகிறது.

தேவநாதன்கள் செய்கின்ற காரியத்திற்-கெல்லாம் கடவுள் சன்னதியைக் கழுவினீர்களா என்பதையும் கேட்க வைக்கிறது.

இப்பவெல்லாம் யார் சார் ஜாதி பார்க்கிறாங்க! என்று சொல்லும் ஏமாந்த நம் மக்களும் ஏமாற்றும் பார்ப்பனர்களும் இந்த தலித் முதலமைச்சருக்கு நேர்ந்த நிலைக்கு என்ன பதில் கூறுவார்கள்? நாடெங்கிலும் நமக்காக உழைத்திட்ட நல்ல பெருந்தலைவர்கள் காலத்திற்குப் பின்னும் இந்த 21ஆம் நூற்றாண்டிலும் தலித்துகளுக்கு எதிரான மனநிலை இன்னமும் தொடர்ந்து வெளிப்படுகிறதென்றால் இதற்குக் காரண-மான ஜாதிய வெறித்தனத்தையும் இப்படி மனிதர்களைப் பிரித்துப் படைத்ததாகச் சொல்லப்படும் கடவுளையும் அடித்து நொறுக்காமல் வேறு என்ன செய்யலாம்?

நாட்டின் வெளிப்புறத்தைச் சுத்தம் செய்யத் துடிக்கும் மோடி அவர்களே! மனதில் உள்ளுக்குள் இதுபோன்ற நீங்காத  கறை-பிடித்த அழுக்குகளுடன் மனிதர்கள் உலாவு-கிறார்களே. இந்த அழுக்குகளுடன் மனிதனை உருவாக்கும் உங்கள் இந்துமதச் சித்தாந்த அழுக்குகளைக் கழுவி சக மனிதனைச் சகோதரனாய்ப் பார்க்க வையுங்கள்.

இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலாவுடன் கூட்டாகப் பெற்றிருக்கின்றாரே கைலாஷ் சத்தியார்த்தி! குழந்தைகள் உரிமைகளுக்காகப் போராடி 80 ஆயிரம் குழந்தைத் தொழிலாளர்களை மீட்டெடுத்திருக்கிறாரே! பல நாடுகளின் விருதுகளைப் பெற்றிருந்தாலும் அவரை நோபல் பரிசுக்கான குழு தேர்ந்-தெடுத்துச் சொல்லும் வரை அவரை யாருக்குத் தெரியும்? இதுவரையில் எந்த செய்தி ஊடகத்திலாவது – காட்சி ஊடகத்திலாவது அவரைக் காட்டியதுண்டா? விளம்பரமே இல்லாமல் இருந்த அவர் இன்றைக்கு விரிந்துபட்ட உலகிற்குத் தெரிந்த மனிதராய் மாறியிருக்கிறாரே! அதுதான் மனிதநேயப் பணிக்கான இலக்கணம்!

குப்பைகளை அகற்றுவதற்காக குடிசைப் பகுதிக்கு வருவதையே விளம்பரமாக்காமல் எண்ணற்ற குப்பைகளையும், ஆபாசங்களையும் அழுக்குகளையும் உள்ள உங்கள் இந்து மதத்தைத் தூய்மைப்படுத்தி முடிந்தால் மதக் கழிவையே கழுவி வெளியேற்றி சக மனிதனையும் சகோதரனாய்ப் பார்க்க வைக்கும், தழுவிக் கொள்ள வைக்கும் மண-உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளவைக்கும் மனநிலைக்கு மாற்றமுயற்சியுங்கள்!

முதலில் சுவாட்ச் பாரத் அபியான் என்று தங்களுக்குத் தெரிந்த மொழியில் மட்டும் சொல்லாமல் நாட்டுடைமைத் தொலைக்-காட்சியிலும், தனியார் தொலைக்காட்சியிலும் அந்தந்த மாநில மொழிகளில் சொல்ல வையுங்கள். சுவாட்சா என்று நீங்கள் சொல்ல எங்க ஆள் உச்சா போகச் சொல்லுகிறார் என்று நினைத்து விடுவான்.

அந்நியமாகிப் போகும் எதனையும் எந்த மனிதனும் சட்டை செய்யவே மாட்டான். காந்தியாரின்  கனவாகிய தூய்மையான இந்தியாவை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம் என்னும் பிரதமர் அவர்களே! இதைவிடப் பெரிதாக இன்னொன்றுக்கு ஆசைப்பட்டு கனவு கண்டார் காந்தியார் அவர்கள். அதுதான் மனிதநேயமுள்ள மதச்சார்பற்ற ஒற்றுமையான  சமூக நல்லிணக்க இந்தியா! அந்த அருமையான கனவினை நிறை-வேற்றுவீர்களா, காந்தியைக் காவு வாங்கிய கூட்டத்தைக் குருவாக ஏற்றிருக்கும் திருவாளர் இந்துத் தேசியவாதி மோடி அவர்களே!

– இசையின்பன்

mobile : 9940348533

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *