மூட பக்தியினால்
மண்டை பிளக்கிறது
மனிதக் குருதி மண்ணில் வழிகிறது. -அந்த மடமைக்கு
தன்னையும்
உடந்தையாக்கிய மனிதனையெண்ணி
உடைந்(த)தும் அழுகிறது…
தேங்காய்.
– செங்குன்றம் ஏ.திராவிடமணி, சென்னை-_5
தேங்காயைத் தலையில்…
உடைத்துக் கொள்ளும்
மதியிலா மாந்தரை…
உலகோர்…
மாங்காய் மடையர்
வரிசையில் சேர்ப்பர்!
மானமுடையோர்.. செல்வரோ அங்கு?
– நெய்வேலி க.தியாகராசன்,
கொரநாட்டுக் கருப்பூர்
பகுத்தறிவைச் சிதறடித்து
பரவசத்திலிருக்கும் பூசாரிகளே!
மூடர்களுக்குள் எப்படியடா…
மூளையிருக்கும்!?
தேங்காயோடு சேர்ந்தே
தெறிக்குது பார் களிமண்ணும்!
– எஸ். சந்திரமோகன், பாளையம்பட்டி
தன்னம்பிக்கை இல்லா மாந்தர்களே!
தலை தாழ்ந்தே! பெறுவது தேங்காய் அடியே!
சுமை இறக்கவே! தேடாதே நேர்த்திக் கடனே!
– வி.மீனாட்சி, நாமக்கல்
நேர்த்திக்கடன் செய்த
பக்தனின் தலையில்
குருதி கொட்டுதென கடவுளா கட்டுப்போட்டார்?
– கு.செல்வா, சென்னை
மனதை மலடாக்கி
மூளையை
முற்றும் உறிஞ்சிவிடும்
பக்தி!
– சு.பொன்னியின் செல்வன், தஞ்சாவூர்
எதைச் செய்தாலும் தலை எழுத்து மாறாதா?
மொட்டைத் தலையில் தேங்காய் உடைத்தாலுமா!
– தூத்துக்குடி கு.மனோகரன், சென்னை-_95
தலையில் ஒருவன் கட்டியிருப்பது
வெள்ளைத் துணி அல்ல!
சுயமரியாதை இல்லாதவனின் அவமானம்
வ(லி)ழிபாடு பெயரில்
உடைந்தது தேங்காய் அல்ல! திராவிடனின் அறிவு.
– மு.முத்துப்பாண்டி, உழுத்திமடை
சாலை விபத்திற்குத் தலைக்கவசம்
சமயச் சடங்குகளுக்கு?
– தேனருவி, சென்னை
தரையில் உடைத்தவர்கள்
தலையில் உடைக்கிறார்கள்.
மண்பானையில் சமைத்து உண்டவர்கள்
மண்சோறு அமைத்து உண்கிறார்கள்.
அறிவுவழி சென்றவர்கள்
அழிவுவழி செல்கிறார்கள்.
– கவி.கோ.அ.தாசன், பட்டுக்கோட்டை
ரத்தம் வந்தால் தெய்வகுத்தம் _ உன்
சித்தம் கலங்கினால் ஆருடைய குத்தம்?
– திருமதி தேன்மொழி, புதுமாகாளிபட்டி
கண்காது மூக்குவாயும்
கணக்காக தலையமைப்பில்
நன்முறையில் இயங்குவது
நரம்புவழி செயலாலே
மண்டையிலே அடிபட்டால்
முழுஉடம்பும் பாதிக்கும்
மண்மூடி மாந்தர்களே
மடமைதனை விட்டொழிப்பீர்!
– கவிஞர் கதிர்மணி, கிருட்டிணகிரி
தலையில் உடையும் சிதறு தேங்காய்
மூளையில் தொடரும் உடையா விலங்காய்!
தொடர்ந்திடும் மத சழக்கரின் லீலை
இன்றும் அய்யாவின் கைத்தடிக்கு வேலை!
விரிந்த அறிவை, விழிப்புணர்வைப் பரப்பிட
விளிப்பார் உண்டோ அய்யாவுடன் ஒப்பிட?
விரைந்திடு உடனே ஆசிரியருடன் நடந்திட!
-கவிஞர் விவேகானந்தன்
தேங்காய்
கல்லில் உடையும்.
களிமண்ணில் உடையுமா?!
நேர்த்திக் கடன் தீர்க்க
கிடைத்தது தேங்காய்தானா?
கடப்பாரை, கத்தியென
கடவுளின் ஆயுதங்கள் ஏராளமுண்டே…
– கவிஞர் கல்லை நா.செயராமன், கூடுவாஞ்சேரி
புத்தியைச் சேமிக்கும்
கருவூலம் _ உன்
மண்டை…!
தேங்காய் மட்டையா உன்
மண்டை…?
– சின்ன வெங்காயம், சென்னை_78
பக்தீ பற்றியதில்
பொசுங்கியது மூளை!
– கவி.இளங்கோ, திருப்பத்தூர்
சிக்கல் தீர தலைமேலே
தேங்காய் உடைக்கும் சிறுமதியீர்!
கொக்கு தலையில் வெண்ணைவைத்து
குஞ்சைப் பிடிக்க முனைவீரோ?
செக்கு மாட்டின் உறவினர்நீர்!
செய்வ தறியாப் பைத்தியங்கள்!
– நாஞ்சில் நாரண தொல்காப்பியன், நரிக்குளம்