தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 13 ஆம் நாள் நடந்து முடிந்துள்ளது. இந்தத் தேர்தலில் வழக்கத்தைவிட அதிகமாக வாக்குகள் பதிவாகியுள்ளன. இதற்கும், வன்முறைகள் இல்லாமல் தேர்தல் நடந்ததற்கும் தேர்தல் ஆணையத்தைப் பாராட்டோ பாராட்டென்று பத்திரிகைகளும் சில அறிவுஜீவிகளும் பாராட்டத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், இந்தப் பாராட்டுக்குத் தேர்தல் ஆணையம் தகுதியானதுதானா என்பதை நடுநிலையோடு எண்ணிப் பார்த்தால் இல்லை என்பதுதான் பதிலாக உள்ளது. மேற்கு வங்கம், கேரளா, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களோடு சேர்த்து தமிழகத்திற்குத் தேர்தல் நடத்தப்பட்டாலும், எல்லா மாநிலங்களுக்கும். ஒரே நிலையில் தேர்தல்கள் நடத்தப்படவில்லை. பிற மாநிலங்களில் சுவர் விளம்பரம், சுவரொட்டிகள், பிலக்ஸ் போர்டுகளுக்கு அனுமதி அளித்த தேர்தல் ஆணையம் தமிழகத்திற்கு இதனை அனுமதிக்கவில்லை. வாகன சோதனை என்ற பெயரில் செய்த கொடுமைகளால் திருமணத்திற்குக்கூட நகை வாங்கமுடியாத அவலநிலை ஏற்பட்டது. ஏப்ரல் 15 க்குப் பிறகு நகை விலை உயர்ந்ததற்கு தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளால் மக்கள் நகை வாங்க வராததும் ஒரு காரணம் என்கின்றனர் சென்னை நகை வியாபாரிகள். வாக்காளர் களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்கத்தான் வாகன சோதனையில் ஈடுபட்டதாகச் சொன்ன தேர்தல் ஆணையத்தால் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதை முற்றிலும் தடுக்க முடியவில்லை. முடிந்த அளவுக்குத் தடுத்தோம் என்றுதான் சொல்ல முடிந்தது. வன்முறையற்ற தேர்தல் என்று சிலர் லாலி பாடினார்கள். தமிழகத்தில் பொதுவாக தேர்தல்கள் வன்முறையின்றியே இதுவரை நடந்துள்ளன.
பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட வட மாநிலங்களில் நடப்பது போன்ற வன்முறைகள் ஒருபோதும் தமிழகத்தில் நடந்ததில்லை. ஆனால், இந்தத் தேர்தலின் போது பீகார் போன்று வன்முறைகள் நடப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தினைத் தேர்தல் ஆணையமே ஏற்படுத்தியது. அதற்காக துணை ராணுவத்தை முன்கூட்டியே இறக்கியது. இந்த நடவடிக்கைகளின் மூலம் தமிழகமும் ஒரு வன்முறை மாநிலம் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால், தமிழக மக்கள் அமைதியாகத் தேர்தலை நடத்திவிட்டார்கள்.
வழக்கமாக ஒரு சில இடங்களில் அந்தத் தொகுதியின் வேட்பாளரைப் பொறுத்து சிறிய அளவில் வன்முறைகள் நடப்பதுண்டு. இந்தமுறைகூட நெய்வேலி தொகுதியில் 55 மற்றும் 56 ஆவது மய்யத்தில் அ.தி.மு.க. வின் ஜெ. பேரவைச் செயலாளர் ஏ.கே. சுப்பிரமணியம் என்பவர் தலைமையில் வாக்குப்பதிவு எந்திரத்தை உடைத்துள்ளனர். இதனால், அந்தத் தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடந்துள்ளது. ஆனால், அந்தத் தொகுதியில் போட்டியிடும் பா.ம.க.வேட்பாளர் வேல்முருகன், வாக்குப்பதிவு எந்திரத்தினை உடைத்தவர்கள் மீது நடவடிக்கைப் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையையும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை. அந்த அளவுக்கு நடுநிலை யோடு(?) நேர்மையாகப் பணியாற்றுகிறது. இதனை நடுநிலை ஊடகங்கள் என்று சொல்லிக்கொள்ளும் பத்திரிகைகள் எடுத்து எழுதவில்லை.
தேர்தல் முடிந்து ஒரு மாதம் கடந்து வாக்குகளை எண்ணும் அபூர்வத்தை இந்த முறை தேர்தல் ஆணையம் படைத்துள்ளதால் பல முறைகேடுகள் நடக்கின்றன. தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற சூதாட்டம் ரூபாய் 500 கோடி வரை(ஏப்ரல் 20 அன்றைய கணக்கு இது) சென்றுவிட்டதாம். அரசுப்பணியாளர்கள் பலர் விடுமுறை எடுத்துக் கொண்டு போய்விட்டார்களாம். இதில் அய்.ஏ.எஸ். அதிகாரிகளும் அடக்கம். அரசு அலுவலகங்களில் தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிமுறை களால் மக்கள் நலப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. வழக்கமாக நடைபெறும் பணிகள்கூட தேங்கிக் கிடக்கின்றன. வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மய்யங்களில் பாதுகாக்கும் பணியில் காவலர்களும், கட்சிக்காரர்களும் ஒரு மாதம் காத்துக் கிடக்கும் கொடுமை. அதற்கு அரசின் பணமும் தேவையின்றிச் செலவு செய்யப்படுகிறது. வேட்பாளர் இவ்வளவு பணம்தான் செலவு செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கும் தேர்தல் ஆணையம் இப்படித் தேவையின்றி செலவு செய்யலாமா? அதிகமான வாக்குகள் பதிவானதற்கு தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வுப் பிரச்சாரம்தான் காரணம் என்று அறிவுஜீவிகள், பத்திரிகை யோக்கியர்கள் கை கூசாமல் எழுதுகிறார்கள். ஆனால், உண்மை என்ன? வேட்பாளர்களிடம் பணம் வாங்கியவர்கள்தான் திரண்டு வந்து வாக்களித்துள்ளனர் என்று அதே பத்திரிகைகள் தான் கூறுகின்றன. படித்தவர்கள் அதிகம் உள்ள சென்னையில் மாநிலத்தின் பிற பகுதிகளை விடக் குறைந்த அளவே வாக்குகள் பதிவாகியுள்ளன (சென்னையில் அதிகபட்சம் 70 சதவீதம்தான். ஆனால், மாவட்டங்களில் 78 சதவீதம்). தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வுப் பணியால்தான் வாக்குப்பதிவு சதவீதம் உயர்ந்தது என்றால் இந்த மாறுபட்ட நிலை ஏன்? இன்னுமொரு முக்கியமான செய்தி தேர்தல் ஆணையத்தின் பாரபட்சச் செயல்பாடுகளுக்குப் பட்டயம் கூறுகிறது. முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் மிக நெருங்கிய உறவினர் வி.எஸ். சம்பத் என்பவர் தமிழகத் தேர்தல் பொறுப்பாளராக தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.(நக்கீரன் 2011 ஏப்ரல் 11). தேர்தலில் போட்டியிடும் ஒரு முக்கியக் கட்சியைச் சார்ந்தவரின் உறவினரை எப்படி தேர்தல் பணிகளில் நியமிக்கலாம் என்று எந்த யோக்கிய சிகாமணிப் பத்திரிகையும் இதுவரை எழுதவில்லை.
ஜனநாயக அமைப்பில் இப்படி தன்னிச்சையான அதிகாரத்தை ஒரு அமைப்புக்கு அல்லது ஒரு தனி நபருக்கு அளித்தால் அது எப்படி பாரபட்சம் இல்லாமல் இயங்கும் என்பதற்குத் தேர்தல் ஆணையத்தின் எதேச்சாதிகாரப் பணிகளே சாட்சியாக இருக்கின்றன. நேர்மையாகத் தேர்தலை நடத்துகிறேன் என்று பீற்றிக் கொள்ளும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில்தான் இத்தனை குளறுபடிகள். இதனைத்தான் இங்குள்ள பத்திரிகைகள் பாராட்டுகின்றன.
– மணிமகன்