வாஸ்து : இடிந்து விழுந்த நம்பிக்கை

ஜூலை 16-31

– இளையராஜ்

சென்னை போரூரை அடுத்த மவுலி வாக்கத்தில் ப்ரைம் ஸ்ருஷ்டி என்ற கட்டுமான நிறுவனம் கட்டிய இரண்டு 11 மாடிக் கட்டடங்களில் ஒன்று ஜூன் 28-ஆம் தேதி பெய்த ஒரு நாள் மழைக்கும், இடி-மின்னலுக்குமே தாங்காமல் இடிந்து, தமிழகம் இதுவரை காணாத ஒரு விபத்து நடந்துள்ளது. சனிக்கிழமை கூலி வாங்கத் திரண்டிருந்த பணியாளர்கள்,  மழைக்கு ஒதுங்கியவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் சீட்டுக்கட்டு போல் சரிந்த கட்டடத்திற்குள் மாட்டிக் கொண்டனர்.

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்ற மீட்பு முயற்சிகளுக்குப் பின் அடுக்குமாடி கட்டட இடிபாட்டில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளும் உயர்ந்து 61 என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், மண்ணுக்குள் புதைந்த இரண்டு தளங்கள் என்னாயிற்று? மேலும் பலர் இருந்தார்களே, அவர்கள் என்ன ஆனார்கள்? போன்ற கேள்விகளெல்லாம் இன்னும் புதைந்தவாறே இருக்கின்றன. ஜூலை 8-ஆம் தேதி அன்றே மீட்புப் பணிகள் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிழைப்புத் தேடி தமிழகம் வந்த பிற மாநிலத்தவர்கள் தமிழக மண்ணிலேயே புதையுண்டிருக்கிறார்கள்.

நீர்ப்பிடிப்புப் பகுதிகளையும், விவசாய நிலங்களையும் குடியிருப்புகளாக மாற்றிக் கொண்டிருக்கும் ரியல் எஸ்டேட் கும்பலின் கோரப் பசியும், பெருநகரங்களில் அதிகரித்து வரும் மக்கள் நெரிசலும் இதற்கான மூலகாரணங்களாக இருக்கின்றன. ஆய்வு செய்யப்படாமல் வழங்கப்பட்ட முறையற்ற அனுமதி, தொடர்ந்து கவனிப்பின்றி இருக்கும் அரசு இயந்திரம், இதற்குப் பின்னால் இருக்கும் லஞ்சம்- ஊழல், தரமற்ற பொருள்கள், நியாயமற்ற வணிகம், லாப வெறி, பேராசை, படாடோபம் என்று இதற்கான காரணங்கள் அடுக்ககங்களை விட உயரமாக இருக்கின்றன. கட்டடம் இடிந்தது தொடர்பாக தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி ரெகுபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்துள்ளது. பல்வேறு நோக்கில் அந்தக் குழு விசாரணையைத் தொடரலாம். அந்தக் குழு விசாரணை செய்யாத, செய்ய விரும்பாத சில கோணங்களும் இருக்கின்றன.

அவற்றை எளிதில் ஒதுக்கிவிட முடியாது. ஏனெனில் மண்வளம், கட்டடத்தின் தரம், கட்டுமானப் பொருள்கள் போன்றவை எப்படி யிருக்கின்றன என்று ஓரளவு தெரிந்துகொள்ளும் பொதுமக்கள், அதனை வாங்குவதற்கு முன் மிகுந்த அக்கறையோடு விசாரித்துத் தெரிந்துகொள்வது கட்டடம் வாஸ்துப்படி கட்டப்பட்டிருக்கிறதா என்பதைத்தான். தவிர, அதற்கென்று இருக்கும் வாஸ்து வல்லுநர்களிடமும் கருத்துக் கேட்டு உறுதி செய்து கொள்கிறார்கள். இந்தப் போக்கிற்கு ப்ரைம் ஸ்ருஷ்டி கட்டி சரிந்திருக்கும் இந்தக் கட்டடமும் விதிவிலக்கல்ல… (கடைபிடிக்க வேண்டிய முக்கியமான விதிகள் எல்லாம் விலக்கி வைக்கப்பட்டுள்ளன என்பதுதான் கொடுமை!)

இடிந்து விழுந்த கட்டடத்தின் பெயர் ஜிலீமீ திணீவீலீ, அதாவது நம்பிக்கை. இதன் அருகில் இருக்கும் மற்றொரு கட்டடத்திற்குப் பெயர் ஜிலீமீ ஙிமீறீவீமீயீ, அதாவது இன்னும் கடும் நம்பிக்கை. இந்த இரண்டு அடுக்ககங்கள் குறித்தும் ப்ரைம் சிருஷ்டி  நிறுவனம் தனது இணையதளத்தில் கீழ்க்காணுமாறு தெரிவித்துள்ளது.

TRUST HEIGHTS is a living space created through twin eleven-storied apartment blocks situated on Moulivakkam near Porur junction. Tower “THE FAITH’’ has four apartments of 2bkh and the Tower ‘’THE BELIEF’’ has four apartments of 3bkh on each floor.

… …

Most of the apartments have been designed  very carefully to have maximum cross ventilation and sufficient light. Vastu shilpa has been kept in mind while designing each and every apartment in TRUST HEIGHTS in order to create a deep sense of trust that me and my family shall always live in good health and prosperity.

(http://www.primesristi.com/project-about-trust-heights.html)

இதில் உள்ள இரண்டாம் பத்தி மிக முக்கியமானது. நானும் என் குடும்பமும் நல்ல உடல்நலத்துடனும், வளத்துடனும் வாழ்வோம் என்ற நம்பிக்கையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் டிரஸ்ட் ஹைட்ஸ் அடுக்ககத்தின் ஒவ்வொரு வீடும் வாஸ்து சாஸ்திரத்தை மனதில் கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிரைம் ஸ்ருஷ்டி நிறுவனம் ஒப்புக்கொண்டபடி, இக்கட்டடம் வாஸ்து நிபுணர்களின் உதவியுடன் மிகுந்த கவனத்துடன் வாஸ்து பார்த்து வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், அப்பளம் போல் நொறுங்கிவிட்டதே, ஏன்? இக்கட்டடத்திற்கு மண்வளம் பரிசோதித்தவர், வரைபடம் தயாரித்தவர், பொறியாளர் போன்றோரெல்லாம் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றால், வாஸ்து ஆலோசகரும் கைதுசெய்யப்பட்டிருக்க வேண்டாமா? ஒருவேளை அறிவியலின்படி, வாஸ்துவை ஒரு பொருட்டாகக் கருதாமல் அரசு அமைத்துள்ள குழு விட்டுவிடலாம்; காவல் துறை விட்டுவிடலாம். ஆனால், நம்பிக்கையாளர்கள் விடலாமா?

அது மட்டுமல்லாமல், அந்தக் கட்டடத்திற்குப் போடப்பட்ட பூமி பூஜை பற்றியும் விசாரணை மேற்கொள்ள வேண்டும். கட்டடம் நேர்த்தியாக அமையவேண்டும் என்பதில் இப்படிப்பட்ட பூமி பூஜைகள் கட்டிடப்பொறியாளர் முதல் உரிமையாளர் வரைக்கும் மனதளவில் முக்கிய பங்கு வகிக்கிறது. பூஜையை அதிக செலவில் சிறப்பாகச் செய்துவிட்டோம் என்கிற அசாத்தியத் துணிச்சலில் கட்டுமானப்பணியில் உரியவர்கள் கோட்டைவிட்டிருக்கலாம்.

அப்படியிருக்கும் பட்சத்தில் அவர்களை ஏமாற்றிய மேற்படி கடவுளர் மீது நம்பிக்கை துரோக வழக்கு தொடரவேண்டும். அதற்கு காரணமான புரோகிதர் மீதும் சட்டம் பாயவேண்டும். மறைந்த நாவலர் சோமசுந்தரபாரதியார் ஒருநாள் ஒரு புரோகிதத் திருமணத்திற்குச் சென்றிருந்தார். திருமண நிகழ்வு நடைபெற்றுகொண்டிருந்தது. தாலிகட்டும் நேரம் நெருங்குகையில் திருமணத்தை நடத்திக்கொண்டிருந்த புரோகிதர் சொல்லும் மந்திரம் நாவலர் காதில் தவறாக விழ குருக்களை நெருங்கி மீண்டும் அந்த மந்திரத்தைச் சொல்லுமாறு வேண்டினார் நாவலர். இரண்டு ஸ்லோகங்கள் சொன்னதுதான் தாமதம். நிறுத்து நிறுத்து என்று சப்தமிட்டார். காரணம், புரோகிதர் சொன்னது கருமாதி வீட்டில் சொல்லப்படும் மந்திரம். நாவலர் தமிழ், சமஸ்கிருதம் இரண்டிலுமே புலமை பெற்றவர் என்பதால் அவர் மந்திரத்தின் பொருளை உணர்ந்து நிறுத்தச் சொன்னார். இந்தத் தகவலை பலரும் சொல்லக் கேட்டிருக்கிறோம்.

இதைச் சொல்வதற்குக் காரணம், மேற்கண்ட கட்டடத்திற்கு பூமிபூஜை போடப்பட்டபோது மந்திரங்கள் தவறாக உச்சரிக்கப்பட்டிருக்கலாம். எனவே அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரங்கள் ஏதேனும் இருப்பின் மந்திரங்கள் சரியாகச் சொல்லப்பட்டிருக்கிறதா என்பதைச் சரிபார்க்க வேண்டும். தேவைப்பட்டால் சங்கராச்சாரி போன்றவர்கள் தலைமையில் கூட ஒரு குழு போடலாம். மந்திரங்கள் தவறாக இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட புரோகிதருக்கு சரியான தண்டனை வழங்க வேண்டும். மந்திரங்கள் சரியாக இருந்தால் கடவுளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கத் தயங்கக்கூடாது.

இதை ஏதோ கிண்டலுக்குக் கேட்பதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இறந்தவர்களுக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவர்கள் எந்த மாநிலத்தவர் என்பது முக்கியமல்ல; அவர்கள் மனிதர்கள் என்பதால் மனிதநேயத்துடன் அவர்தம் குடும்பங்களுக்கு -_ பாட்டாளிகளின் சொந்தங்களுக்கு நமது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விடுத்த அறிக்கையில், வாஸ்து சாஸ்திரம் எல்லாம் பார்த்துக் கட்டப்பட்டுள்ளதுதான் இந்த இடிந்து விழுந்த 11 மாடிக் கட்டடம். பூமி பூஜை பலமாகப் போடப்பட்ட பிறகே, நாள் நட்சத்திரம், நல்ல நேரம் பார்த்து அடிக்கல் நாட்டப்பட்டது; பின் ஏன் இந்த அவலம் நடந்தது? இதிலிருந்து வாஸ்து, பூமி பூஜை என்ற மூட நம்பிக்கைகள் மனிதர்களைக் காப்பாற்றாது. புரோகிதர் பிழைக்க, ஜோசியர்கள் பிழைக்க வழிதான் அவை என்பதையாவது புரிந்து கொள்ள வேண்டாமா? என்று கேட்டிருக்கும் கேள்விக்கு வாஸ்து பக்தர்களும், அதைவைத்துப் பிழைப்பு நடத்துபவர்களும், அதைப் பரப்பும் ஊடகங்களும் என்ன பதில் வைத்திருக்கிறார்கள்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *