ஹீரோ சான்ஸ் போச்சே!
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி வெற்றிபெற்ற செய்தி வந்து பதவியேற்பு நடைபெறும் முன்னர், மே 23-ஆம் தேதி ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரகம் தாக்கப்பட்டது. அன்றே அது முறியடிக்கவும்பட்டது என்பது செய்தி. இதெல்லாம் முடிந்து ஒரு வாரத்தில் ஒரு தகவல் அனைவருக்கும் பரப்பப்பட்டது.
மோடி ஆப்கானில் இருந்த இந்திய வீரர்களிடம் போனில் பேசி கட்டளைகளைப் பிறப்பித்தார். இன்றே இவர்களைப் போட்டுத் தள்ளிவிட்டு வாருங்கள். நான் உங்களுடன் இன்றிரவு விருந்துண்ண வருகிறேன் என்று உற்சாகமூட்டினார் என்பதாக தகவல்கள் வெளிவந்தன. பதவியேற்காத நிலையில் இப்படி ஒருவர் பேசமுடியுமா? இது உறுதிப்படுத்தப்பட்ட தகவலா என்றெல்லாம் தெரியாமல் இப்புரளி பரப்பப்பட்டுக் கொண்டிருக்க, தேர்தலெல்லாம் முடிஞ்சு போச்சு, இன்னும் உங்க ரீலை முடிக்கலையா நீங்க? என்று மோடியின் விளம்பரக் குழுவுக்கு நினைவூட்ட வேண்டியிருந்தது.
அந்த அளவுக்கு தேர்தல் பிரச்சார புரளிகளைப் போல, அதன் பிறகும் கொடுத்த காசுக்கு மேல கூவிக் கொண்டிருந்தது அவரது டீம். மோடி வந்ததும் துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக சிங்களக் கடற்படையைத் துவம்சம் செய்வார் என்று சொன்னவர்கள், மோடியின் ஆட்சியில் தொடர்ந்து மீனவர்கள் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆப்கானில் கடத்தப்பட்ட தமிழகப் பாதிரியார் இன்னும் மீட்கப்படாமலேயே இருக்கிறார். இந்நிலையில்தான் செவிலியர்கள் கடத்தப்பட்ட விவகாரம் வெளிவந்தது. உலகளவில் கவனம் பெறப்போகும் இந்த விவகாரத்தில் மோடியின் ஹீரோயிச இமேஜை உயர்த்துவது எப்படி, மோடியை சர்வதேச இராஜதந்திரியாகக் காட்டுவது எப்படி என்றெல்லாம் அதுக்குன்னு இருக்கும் 11 பேர் கொண்ட குழு ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தது. ஆனால், அய்.எஸ்.அய்.எஸ். போராளிகளால் செவிலியர்கள் மரியாதையாக நடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட செய்திகள் வெளிவந்ததும் சான்ஸ் போச்சே என்று புலம்புகின்றனராம் மோடியும், அவருக்கு திரைக்கதை, வசனம் எழுதும் கும்பலும்.