இதுவரை வெளிவராத தகவல்
– சரவணா இராசேந்திரன்
2014 -மே மாத இறுதியில் சிரியாவின் தெஹர் அஸ் ஸூர் பிராந்தியத்தில் இருந்து அதிரடியாக பெரும்படையுடன் ஈராக்கின் எல்லையைக் கடந்த ஈராக்கிய அய்.எஸ்.அய்.எஸ் போராளிகள் மொசூல், கிர்குக் எர்பில் என முக்கிய நகரங்களைக் கைப்பற்றி திக்ரித் நகர் நோக்கி படைநடத்திச் சென்றனர். திக்ரித் நகரம் மறைந்த ஈராக் அதிபர் சதாம் உசேனின் சொந்த ஊர் ஆகும். இந்த நகரத்தில் ஈராக் அரசும் சில தனியார் அமைப்புகளும் இணைந்து நடத்தும் ஈராக்கின் 4-ஆவது பெரிய மருத்துவமனை உள்ளது.
General Hospital Salahuddin என்ற இந்த மருத்துவமனைக்காக 2012-ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள ஓர் அரசு அனுமதிபெற்ற தனியார் நிறுவனத்தினரால் ஒப்பந்தத்தின் அடிப்படையில் 70-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் அனுப்பபட்டனர். திக்ரித் நகரின் மிகப்பெரிய மருத்துவமனையான சலாஹத்தீனில் பங்களாதேஷ், இந்தோனேசியா, மற்றும் தாய்லாந்தைச் சேர்ந்த செவிலியர், மருந்தாளுநர், பிசியோதெரபிஸ்ட் என 200க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்தனர். இவர்களில் பலர் மீண்டும் தங்கள் நாட்டிற்குத் திரும்பிவிட்டார்கள். சிலர் விடுப்பில் சென்றுள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த 49 செவிலியர்களுடன் 13 வேற்று நாட்டு மருத்துவப் பணியாளர்கள் தங்கி இருந்தனர். இந்நிலையில்தான் ஜூன் 13 ஆம் தேதி திக்ரித் நகரம் போராளிகளின் கைவசம் சென்றது. ஒரு நாள் முழுவதும் நடைபெற்ற சண்டையில் மருத்துவமனைப் பகுதியில் குண்டு விழாவிட்டாலும் துப்பாக்கிச்சுடும் சத்தமும், பீரங்கிகளின் ஓசையும் செவிலியர்களை மிகவும் அச்சத்திற்குள்ளாக்கியது. மேலும் அவர்களுக்கு அதிர்ச்சியாக பல ஈராக்கிய மருத்துவர்கள் உடனடியாக மருத்துவமனையைக் காலிசெய்துவிட்டு ஈராக் இராணுவத்தினருடன் வேறு இடம் சென்றுவிட்டனர். இவர்கள் வேறு பிரிவைச் சேர்ந்த மருத்துவர்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் திக்ரித் நகரைக் கைப்பற்றிய போராளிகள் மருத்துவமனையை முழுவதுமாக சோதனையிட்டனர்.
நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் இதர பணியாளர்களின் விவரங்களை வாங்கிக் கொண்டனர். இந்திய செவிலியர்களின் விவரங்களை அரபி தெரிந்த பங்களாதேச பெண்மணி ஒருவர் கொடுத்தாக சோனா என்ற மலையாள செவிலியர் அரபி பத்திரிகை ஒன்றுக்குத் தெரிவித்தார். போராளிகள் அனைவரின் விவரங்களையும் வாங்கிக்கொண்டு அனைவருக்குமான உணவு மற்றும் தண்ணீர் இருப்பையும் உறுதிசெய்துவிட்டு திக்ரித் நகரம் தங்கள் வசம் வந்துவிட்டதை அவர்களிடம் கூறினர். ஆசியன் லைட் என்ற அரபி செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த சோனு மரியா கூறியதாவது, போர் ஆரம்பித்துவிட்டது என்றதுமே எங்கள் மருத்துவமனையில் சில மருத்துவர்கள் பாக்தாத் சென்றுவிட்டனர். எங்களால் அப்படிச் செல்ல முடியாது, மேலும் போரின்போது மருத்துவமனை தாக்குதலுக்கு இலக்காகாது என்றும் போராளிகளை எளிதாக ஈராக் இராணுவம் விரட்டிவிடும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறியது. ஆனால் அதற்கு மாறாக போர் தொடங்கிய 24 மணிநேரத்திற்குள் திக்ரித் போராளிகளின் கைவசம் சென்றுவிட்டது. நாங்கள் மிகவும் அச்சத்தில் இருந்தோம். 14 ஆம் தேதி மதியவேளையில் போராளிகள் குழுவில் சிலர் ஆங்கிலம் தெரிந்த இரண்டுபேருடன் வந்து மருத்துவமனையில் இருந்த எங்களைப் பற்றி விசாரித்தனர். பிறகு எங்களைப் பற்றிய விவரங்களைச் சேகரித்துக் கொண்டு வெளியேறிவிட்டனர். அவ்வப்போது தூரத்தில் ஈராக் இராணுவத்திற்கும் போராளிகளுக்கும் மிடையே நடக்கும் சண்டையின் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் இருந்தது, மேலும் கீழ்த்தளத்தில் நாங்கள் தங்குவதற்கு எல்லா வசதிகளும் இருந்தன, நீங்கள் அனைவரும் மருத்துவமனையின் பணிகளை அச்சமின்றிப் பார்க்க வேண்டும் என்று போராளிகள் கூறியதாக பங்களாதேஷ் தோழி எங்களுக்குக் கூறினார்.
25-ஆம் தேதி போராளிகள் மருத்துவமனைக்கு வந்து நிலைமை சீரான பிறகு நீங்கள் அனைவரும் உங்கள் நாட்டிற்குச் சென்றுவிடலாம் என்று கூறினார். இதனிடையே இந்தியத் தூதரகத்துடனும் தொடர்பில் இருந்தோம். இந்தியாவில் இருந்த எங்களது உறவினர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தோம். இதுதான் எங்களுக்குப் பெரிய நிம்மதியையும் நம்பிக்கையையும் தந்தது. இந்நிலையில் திக்ரித்தை அமெரிக்க இராணுவத்துடன் இணைந்து ஈராக் தாக்கப் போவதாக செய்தி பரவத் தொடங்கிவிட்டது. ஈராக் நேரடியாக தாக்குதல் நடத்தினால் மருத்துவமனையும் பாதிக்கப்படும் என பலரும் பேச ஆரம்பித்துவிட்டனர். இந்தியத் தூதரகமோ தற்போது உங்களை வெளியே கொண்டுவர முடியாது. நிலைமை சீரான பிறகு முயற்சிக்கிறோம் என்று கூறிவிட்டது. அமெரிக்கா போருக்கான உதவிகளைச் செய்வது குறித்த தகவல் பரவியதும் ஜூன் ஒன்றாம் தேதி எங்களைப் போராளிகள் 3 பேருந்துகளில் 200 கி. மீட்டர் தொலைவில் உள்ள மொசூல் நகருக்கு அழைத்துச் சென்றனர். பங்களாதேஷ் தோழி எங்களுக்கு அவ்வப்போது ஆறுதல் கூறினாலும் எங்களுக்கு உண்மை நிலவரம் தெரியவில்லை. பாலைவனப் பகுதிப் பயணத்தைக் கடந்து மொசூல் நகரம் சென்ற பிறகுதான் தெரிந்தது எங்களைப் பாதுகாப்பாக இந்தியாவிற்கு அனுப்புவதற்குத்தான் இங்கு அழைத்து வந்தார்கள் என்று! அங்கிருந்தும் எங்கள் வீட்டாருக்குத் தகவல் தந்துவிட்டோம்.
இந்த நிலையில் 3ஆம் தேதி இரவு எர்பில் நகரில் உள்ள விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டோம். மொசூல் நகரில் தங்கி இருந்த போதுதான் மின்சாரவசதி இன்றி சிறிது சிரமப்பட்டோம். ஆனால் மறுநாள் நாங்கள் இங்கு அழைத்துவரப்பட்டோம் என்று அவர் அரபு பத்திரிகையாளரிடம் கூறினார். ஜூலை நான்காம் தேதி இரவு ஈராக் நாட்டில் உள்ள எர்பில் நகர விமான நிலையத்திற்கு இந்தியாவில் இருந்து சிறப்பு விமானம் செவிலியர்களை அழைத்துவரச் சென்றது. இந்த விமானத்தில் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் உடன் சென்றனர்.
எர்பில் நகர விமான நிலையத்திலிருந்து இந்தியாவிற்குப் புறப்பட்ட சிறப்பு விமானத்தில், 46 இந்திய செவிலியர்கள் உள்ளிட்ட 116 இந்தியர்கள் பயணம் மேற்கொண்டனர். அந்த விமானம் ஜூலை 5ஆம் தேதி காலை இந்திய நேரப்படி 11 மணியளவில் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தது. அந்த 46 இந்திய செவிலியர்களில் பெரும்பாலானோர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்த விமானம் கொச்சி விமான நிலையத்திற்கு முதலில் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் இறுதியாக இந்த விமானம் இன்று புதுடில்லி விமான நிலையம் சென்றடைந்தது.
கொச்சி விமான நிலையத்தில் மீட்கப்பட்ட அனைவருக்கும், கேரள மாநில முதல்வர் நேரில் ஆறுதல் கூறினார். மீட்கப்பட்டவர்களின் பெற்றோர்களும், அவர்களது உறவினர்களும், அவர்களை உற்சாகமாக வரவேற்றனர்.
இந்தியா திரும்பிய தமிழகத்தைச் சேர்ந்த செவிலியரான மோனிஷா, கொச்சின் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போதும் மேற்கண்ட தகவலை உறுதி செய்தார். இந்திய அதிகாரிகள் தயங்கித் தயங்கி நின்ற போதும், அய்.எஸ்.அய்.எஸ். போராளிகளின் நியாயமான செயல்பாடுகளே செவிலியர்களை வெளியில் கொண்டு வந்துள்ளது. ஆனால் இச்செய்தி இந்தியாவில் பெரும்பாலான ஏடுகளில் வெளிவராமலே பார்த்துக் கொண்டனர். இந்தியாவே சென்று மீட்டுவந்தது போல இவர்கள் தரும் செய்திகள் பொய்யானவை என்பதைத்தான் மீண்டுவந்த செவிலியர்கள் தரும் நேரடித் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீண்டு வந்த செவிலியர்களில் பெரும்பான்மையரான கேரளாவைச் சேர்ந்த அனைவருக்கும் அரசு வேலை தருவதாக அவர்களை நேரில் சென்று பார்த்த கேரள முதல்வர் உம்மன்சாண்டி உறுதியளித்திருக்கிறார். தமிழ்நாட்டுப் பெண்ணான மோனிஷாவுக்கு தமிழக அரசிடமிருந்து ஒரு தகவலும் வரவில்லையாம்.