கேள்வி : கோபால் சுப்பிரமணியத்தை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யும் நீதிபதிகள் தேர்வுக் குழுவின் முடிவுக்கு எதிராக மத்திய அரசு எடுத்துள்ள முடிவு நீதித்துறையில் மறைமுக தலையீடு செய்யும் ஆரம்ப முயற்சி என்று எடுத்துக் கொள்ளலாமா? – சா.கோவிந்தசாமி, ஆவூர்
பதில் : அது ஒரு கோணம் என்பது உண்மையே! இந்த மாதிரி விமர்சனங்களைத் தவிர்ப்பதற்கு விரைவில், கொலிஜியம் என்ற நீதிபதிகள் குழுவே தேர்வு செய்வதை மாற்றி, தேசிய நீதித்துறை (நியமன) கமிஷன் என்பதை (National Judicial Commission) உருவாக்கும் சட்டத் திருத்தத்தை உடனடியாக நிறைவேற்றி, இடஒதுக்கீடு முறை Union Public Service Commission மூலம் எப்படி நியமனங்கள் நடைபெறுகிறதோ அதுபோல மாற்றம் விரைவில் வந்தாக வேண்டும்; பல ஆட்சிகளில் பேசிப்பேசி கிடப்பில் இருக்கும் திட்டம் அது. அதை நிறைவேற்றிட முன்வருதல் அவசரம், அவசியம்.
கேள்வி : கோபால் சுப்ரமணியம் முதுகில் தொங்கும் நூலுக்காக, ஏடுகள் பீப்பாய் பீப்பாயாக கண்ணீர் சிந்துகின்றன! (மோடி) பிரதமர் அவர்கள் பதவி ஏற்ற ஒரு மாத காலம் கடந்ததும் அனைத்து மாநிலங்களிலும் அனைத்துத் துறைகளிலும் இந்தியை, ஏற்காத மாநிலங்களிலேயும் ஏற்க வைக்கும் அளவிற்கு சுற்றறிக்கை தயார்செய்து அனுப்பியிருப்பது பற்றி தங்களின் மேலான கருத்தென்ன?
– பெ.கூத்தன், சிங்கிபுரம்
பதில் : ஏற்கெனவே விடுதலையில், அறிக்கைமூலம் தெளிவுபடுத்தியுள்ளோம். இது பண்பாட்டுப் படையெடுப்பின் துவக்கம்; ஆர்.எஸ்.எஸ். மொழிக் கொள்கை அமலாக்கம். பாம்பு புற்றிலிருந்து தலையை நீட்டிப் பார்க்கிறது. எச்சரிக்கையும் விழிப்பும் மற்றவர்களுக்கு எப்போதும் தேவை.
கேள்வி : இலங்கை அரசு தமிழக மீனவர்களைத் தொடர்ந்து சிறைப் பிடிப்பதும் சேதப்படுத்துவதும்தான் நடக்குமா? நமது மத்திய அரசு இதைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்காமல் பார்த்துக்கொண்டேதான் இருக்குமா? தமிழக மீனவர்களும், தமிழ்நாடும், இதைப் பார்த்துக் கொண்டும் சகித்துக் கொண்டும் வேதனையோடும்தான் இருக்க வேண்டுமா? இதுபோன்ற கொடூரச் செயலுக்கு முற்றுப்புள்ளியே கிடையாதா? – ர.சௌமியா, பட்டினப்பாக்கம்
பதில் : இராஜபக்சே அரசுடன் கொஞ்சாத, கெஞ்சாத மத்திய அரசு வந்தால் சாத்தியப்படும்.
கேள்வி : நட்டத்தில் இயங்கிய இரயில்வே துறையை லாபத்தில் இயக்கி ரூ.1 விலைக் குறைப்பு செய்த லாலுபிரசாத்துக்கும் ஆட்சிக்கு வந்த 1 மாதத்தில் 15 விழுக்காடு உயர்வு செய்த மோடி அரசுக்கும் உள்ள வித்தியாசத்தை நாட்டு மக்கள் உணர்வார்களா? – ஆர்.தருண், சே.பேட்டை
பதில் : உணரவில்லை எனில் நட்டம் மக்களுக்கே தவிர, லாலு பிரசாத்துக்கு அல்ல. இப்போது எல்லாம் டிட்டோ – Do -தானே. சலவைக்குறிதானே _ முந்தைய அரசுமீது எவ்வளவு நாள் பழி போடுவார்கள்; பார்ப்போம்!
கேள்வி : அத்வானி குடியரசுத் தலைவராக முழுத் தகுதியுடையவராமே, நிதின் கட்காரிக்கு உங்கள் பதில்? – நா.சீனிவாசன், பொற்பந்தல்
பதில் : எந்தப் பதவியும் கிட்டவில்லை என்ற வருத்தத்தில் தோய்ந்துள்ள அத்வானி _ ஆதரவாளர்களுக்கு கட்காரியின் புதிய சோப் இதுவோ?
கேள்வி : பா.ஜ.க. ஆட்சியில் இல்லாதபொழுது பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்துவிட்டு, காங்கிரஸ் செய்த அதே காரியத்தைச் செய்து வருகிறதே? ஆட்சிக்கு வந்தவுடன் ரயில்கட்டண உயர்வு சரியா? (ரயிலில் டீ விற்றதாக தம்பட்டம் அடிக்கும் மோடி ரயிலில் பயணம் செய்யும் ஏழை மக்கள் பற்றி அறியாமல் இருப்பது நியாயமா?) – நி. காளிதாஸ், சேலம்
பதில் : பழைய கள்; புது மொந்தை எல்லாம் பழைய பல்லவிதான்; போகப் போகப் புரியும்!
கேள்வி : தமிழகத்தில் மொழிப் பிரச்சினை மாறி வருகிறது. 1967ஆம் ஆண்டும் இல்லை. தி.மு.க. ஆட்சியிலும் இல்லை என இல.கணேச அய்யர் கூறியுள்ளாரே?
_ ஞா.வெற்றிவீரன், திட்டக்குடி
கேள்வி : இதற்குமுன் இப்படிப் பேசாத புதுத் தெம்பு நண்பர் இல.கணேசனுக்கு வந்திருப்பதற்குக் காரணம் புரிகிறதா? பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்ந்த வீராதி வீர சூரப்புலிகளுக்கு இந்தப் பேச்சு சமர்ப்பணம். வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்தை வெளிக் கொண்டு வருவதில் மத்திய பி.ஜே.பி. அரசு மனப்பூர்வ நடவடிக்கைகளில் இறங்கி செயல்படத் துணியும் என எதிர்பார்க்கிறீர்களா?
– க.வடிவேல், ஆவூர்
பதில் : இந்த நாடகம் இனியும் எத்தனை நாளோ! உருப்படியான நடவடிக்கை எடுக்க உள்நாட்டு கறுப்புப் பண வேட்டையை உண்மையாக நடத்தினால் போதாதா?
கேள்வி : பாலாறு பிரச்சினையில் தமிழக உரிமை நிலைநாட்டப்படுவதில் கலைஞர் அரசியல் ஆதாயம் தேடுகிறார் என்ற தமிழக முதல்வரின் குற்றச்சாட்டு குறித்து? – வெ.புலமைப்பித்தன், மன்னார்குடி
பதில் : எதிர்க்கட்சிகளின் கேள்விகளை வைத்து தனது நிலைப்பாட்டைப் பலப்படுத்திக் கொண்டு அம்முயற்சிகளைத் தடுக்கும் ராஜதந்திரம் தெரியாத பரிதாபம் அது! பிரச்சினை எப்போதும் கலைஞருடன்தானே?
கேள்வி : முதலமைச்சரின் தொகுதியான சிறீரங்கத்தில் நடைபெற்றுவரும் நிகழ்ச்சிகளைக் கூர்ந்து கவனித்தால் நாம் வாழ்வது தமிழ்நாடா? அல்லது அவாள் நாடா? என்ற சந்தேகம் எழுகிறதே? – பெ.தேன்மொழி, திருப்பூர்
பதில் : மக்கள் முழுமையாகப் புரிந்துகொள்ளும் காலம் வரட்டும்; சரியான விடை கிடைக்கும்.
கேள்வி : சென்னையில் அடுக்குமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்த கோரமான நிகழ்ச்சிக்கு நேரடிப் பொறுப்பு ஏற்கவேண்டிய தமிழக அரசை, தமிழக நாளிதழ்கள் கண்டிக்கத் தயங்குவதேன்? – க.குமரன், புதுக்கோட்டை
பதில் : கண்டிப்பதா? எப்படி? 1. அச்சம், 2. ஆசை (விளம்பர வருவாய்) இரண்டைவிட அதுவா முக்கியம்? அந்தோ ஜனநாயகமே!
கேள்வி : மோடி வந்தால் தலைகீழ் மாற்றம் வரும் என்றார்கள். ஆனால் வந்த உடனே, சமையல் எரிவாயு விலை உயர்வு, ரயில் கட்டண உயர்வு, இந்தித் திணிப்பு என்ற மோடியின் அறிவிப்பு மக்களிடையே பெருத்த ஏமாற்றத்தைத் தந்துவிட்டதே? – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
பதில் : மேற்சொன்ன பதில்களே இந்தக் கேள்விக்கும் விடையாகும்.
கேள்வி : பங்குச் சந்தை தொடர்ந்து வளர்ச்சியில் இருப்பதாக ஊடகங்கள் சொல்கின்றன. இதனால் இந்தியப் பொருளாதாரம் வளர்கிறது என்று பொருளா?
_ ப.சிந்தன், தாம்பரம்
பதில் : முதலாளிகள், கொள்ளை லாபக் குபேரர்கள் வளருகிறார்கள் என்பதே அதன் உண்மைப் பொருள்! குடிசைகள் சுற்றி; அரண்மனை மறுபுறம் என்ற விசித்திரம் அது!