உடம்புக்கு நல்லது
மாற்று வழிகளல்ல
மனவலிமையே முக்கியம்
புண்பட்ட மனதை புகையை விட்டு ஆற்றலாம் என்று விளையாட்டாக சொல்லி நம்மவர்கள் சிகரெட் பிடிப்பதுண்டு. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரைக்கும் புகை போதைக்கு அடிமையாகியிருக்கிறார்கள்.
பல இடங்களில் பள்ளிச் சிறுவர்கள் புகைக்கும் கொடுமையையும் காண முடிகிறது. இச்சிகரெட்டில் உள்ள நச்சுத்தன்மை கொண்ட வேதிப் பொருட்களினால் புற்றுநோய் போன்ற நோய்கள் உருவாகி உயிர் இழப்பு ஏற்படும் என்பது எல்லோரும் அறிந்ததே. உயிர்க்கு ஆபத்து விளைவிக்கும் என்று தெரிந்தும் பலர் புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஏனோ விடுவதில்லை.
சிகரெட் பழக்கத்தை விடப் போகிறேன் என்று சொல்லும் சிலரும் புகையிலை சிகரெட்டுக்கு பதிலாக தேர்ந்தெடுத்திருக்கும் ஒரு மாற்று வழிதான் ஈ-_சிகரெட்.
ஆனால் ஈ_-சிகரெட் புகைப்பழக்கத்தை விடுவதற்கான வழி கிடையாது. அதை பயன்படுத்தி புகைக்கும் பழக்கத்திலுருந்து மீள முயற்சி செய்து தோற்றுப்போனவர்கள் நாங்கள் உள்பட பலர் என்கிறார்கள் பல முறை புகையை விட்டவர்கள்.
இந்த ஈ_-சிகரெட் ஒரு சரியான ஃபோர்ஜரி, நூறில் இரண்டு பேர்தான் இதை பயன்படுத்தி புகைப்பழக்கத்திலிருந்து மீள முடியும். இதனை முயற்சித்தால் அதிகபட்சம் ஒருமாதம் வரை கட்டுப்பாடாக இருக்கமுடியும். ஆனால் அதற்கு பிறகு மீண்டும் உங்கள் கைகளில் பழையபடி சிகரெட் புகைய ஆரம்பித்துவிடும். காரணம் உங்கள் உடலில் மூளையில் நிகோடின் படிமங்கள் இருக்கும் வரை உங்களால் ஒருநாளும் அதிலிருந்து மீளவே முடியாது. சாதாரண சிகரெட்டுகளால் புகைவழியாக உடலுக்கு கிடைத்துக்கொண்டிருந்த நிகோடினை இந்த ஈ-_சிகரெட் திரவ வடிவத்தில் புகையின்றி கொடுக்கிறது. இதனால் உடலிலிருக்கிற நிகோடின் அளவு குறைவது இல்லை. ஈ_சிகரெட்டை எங்கும் பயன்படுத்தமுடியும் என்பதால் முன்பைவிட அதிகம் பயன்படுத்தும் ஆவல் வரும். இதனால் ஏற்கனவே இருக்கிற நிகோடின் தேவையை இன்னும் அதிகமாக்கிவிடும். அதனாலேயே புகைபிடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் தான் அதிகமாகும்.
எனவே புகைப்பழக்கத்தை விடவேண்டும் என்று நினைப்பவர்கள், அதை அப்படியே முற்றிலுமாக விட்டுவிடுவதுதான் சிறந்தது. சிகரட்டுக்கு பதிலாக எந்த மாற்று போதை வஸ்துகளையும் அணுகாமல் அதற்கு பதிலாக ஆரோக்கியமான பழக்கங்களுக்கு நம்மை மாற்றிக்கொள்ளலாம். அது மிகச்சிறந்த பலனை அளிக்கும். சிகரட் பழக்கத்தை விட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு தேவை -சிகரெட் அல்ல, மன வலிமையும் தன்னம்பிக்கையும்தான்! என்கிறார் ஒரு முன்னாள் புகைஞர்.
புகையை நிறுத்த முயலுவோருக்கு ஊக்கம் அளிப்பதற்கென்றே முகநூலில் https://www.facebook.com/groups/whyquit/ என்ற குழுவில் குவிகிறார்கள் புகையை வென்றவர்கள்.
– தளபதி பாண்டியன்