மருத்துவக் குறைபாடு
2009 ஆம் ஆண்டின் ஆய்வின்படி, உலக அளவில் தினமும் 7,000 குழந்தைகள் இறந்தே பிறக்கின்றன என்று லான்செட் இதழில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்தியா, சீனா, வங்கதேசம் உள்பட 10 நாடுகளில் 70 சதவிகிதக் (சுமார் 5,000) குழந்தைகள் இறந்தே பிறந்துள்ளன. 1995 ஆம் ஆண்டு 30 லட்சமாக இருந்த குழந்தைகளின் இறப்பு, 2009 இல் 26 லட்சமாகக் குறைந்துள்ளது.
பிரசவிக்கும்போது முறைப்படியான மருத்துவ ஆலோசனைகளும், உதவிகளும் கிடைக்காததே முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. மேலும், கருத்தரிக்கும் போது தாய்க்கு வரக்கூடிய நோய்கள், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்றன தாய்க்கு இருத்தல், குழந்தை வளர்வதில் உள்ள தடைகள், குழந்தைக்கு ஏற்படும் குறைகள் இவற்றுடன் பிரசவத்தின் போது எதிர்கொள்ளும் சிக்கல்களும் குழந்தை இறந்தே பிறக்கக் காரணங்களாகின்றன.
இந்தியாவில் ஆயிரம் குழந்தைகளுக்கு, 20 முதல் 66 குழந்தைகள் இறந்தே பிறக்கின்றன. பின்லாந்தில் ஆயிரத்திற்கு 2 குழந்தைகளே இறக்கின்றன.
ந்ல்லாச் சொன்னாரு!
பெரும்பாலான பொதுநல வழக்குகளில் அரசுக்கும், அதிகாரிகளுக்கும் நடத்தை நெறிமுறைகளை விதித்து, நீதிபதிகள் தீர்ப்பு அளிக்கிறார்கள். அரசியல் சட்டம், ஒவ்வொரு அமைப்புக்கும் அதிகாரங்களைப் பகிர்ந்து அளித்துள்ளதை நாம் மறந்துவிடக்கூடாது. அந்த அதிகாரப் பகிர்வை மதித்து நடக்க வேண்டும்.
சட்டசபையின் அதிகாரங்களை மிஞ்சும் வகையில், சூப்பர் சட்டசபை போல நீதிபதிகள் செயல்படக்கூடாது. சட்டங்கள் தவறாக இருந்தால், அவற்றுக்கு சட்டசபையோ, அரசோதான் பொறுப்பு ஏற்கின்றன என்பதை நீதிபதிகள் மறந்துவிடக் கூடாது.
நீதிபதிகளின் வேலை, சட்டசபையின் செயல்களை ஆய்வு செய்வதுதான். தனது சொந்தக் கொள்கைகளை சமூகத்தின் மீதோ, சட்டசபையின் மீதோ திணிப்பது அல்ல.
அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடும்போது, அதை நியாயப்படுத்த ஒரே மாதிரியான காரணம் கூறப்படுகிறது. அரசு சரிவரச் செயல்படவில்லை என்றோ, பிரச்சினையைத் தீர்க்கத் தவறி விட்டது என்றோ கூறி, நீதிபதிகள் நியாயப்படுத்துகிறார்கள். அந்த மாதிரி சமயங்களில், சட்டத்துக்கும், ஆட்சிக்கும் இடையிலான மெல்லிய கோட்டை நீதிபதிகள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
ஊழல் புகாரில் சிக்கிய நீதிபதிகள் நீதித்துறையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கிறார்கள். அவர்களை அரசியல்வாதிகள் பாதுகாக்கக்கூடாது.
நீதிபதிகள் கீழ் நீதிமன்ற நிருவாகங்களில் தேவையில்லாமல் தலையிட்டு, பதவி உயர்வு, பணிமாற்ற விஷயங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். நீதிபதிகள் தங்களின் பதவி அடிப்படையில் சலுகைகளையோ, முன்னுரிமை களையோ பெறவே கூடாது. இது ஊழலுக்கு வழிவகுக்கும். அவர்கள் பயமின்றி, பாரபட்ச மின்றி, நேர்மையாகப் பணியாற்றி சுதந்திரமாக நீதியை உலவச் செய்ய வேண்டும்.
குஜராத் கலவரத்துக்கும், நரேந்திர மோடிக்கும் தொடர்பு உண்டு
உச்ச நீதிமன்றத்தில் காவல்துறை அதிகாரி தகவல்
குஜராத் மாநிலத்தில் 2002- ஆம் ஆண்டு நடந்த கலவரத்துக்கும், நரேந்திர மோடிக்கும் தொடர்பு உண்டு என்று, குஜராத் கலவரம் நடந்த போது அங்கு மூத்த அய்.பி.எஸ். காவல்துறை அதிகாரியாக இருந்த சஞ்சீவ் பகத் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருக்கிறார்.தற்போது உளவுத்துறையில் பணியாற்றும் இவர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
குஜராத் கலவரத்துக்கும், முதலமைச்சர் நரேந்திர மோடிக்கும் தொடர்பு உண்டு. கலவரம் நடந்த போது நான் அங்கு பணியாற்றினேன். அப்போது நரேந்திரமோடி, தனது வீட்டில் காவல்துறை உயர் அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டினார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, குஜராத்தில் நடந்து வரும் கலவரத்தைக் கண்டு கொள்ள வேண்டாம். இந்துக்கள் தங்கள் கோபத்தைத் தீர்த்துக் கொள்ளட்டும். அதற்கு அனுமதியுங்கள். கலவரத்தால் பாதிக்கப்படுவோருக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டாம். அவர்களது கூக்குரலைக் கேட்க வேண்டாம்” என்று சொன்னார்.
உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள புலனாய்வுக் குழுவினரிடம் நான் இதைத் தெரிவித்தேன். ஆனால், அவர்கள் கண்டு கொள்ளவில்லை. நரேந்திர மோடிக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் எதிரானவற்றைப் புலனாய்வுக் குழுவினர் எடுத்துக் கொள்ளவில்லை. எனவே, நான் தனியாக உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்கிறேன்.
இந்த நிலையில் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் காவல்துறை பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும்.
கலப்புத் திருமணம்
கலப்புத் திருமணங்களுக்கு எதிராக கட்டப் பஞ்சாயத்து நடத்துவது தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் பின்வருமாறு ஆணையிட்டுள்ளது,
வரலாற்று ரீதியில் நமது நாடு பெரிய சமூக மாற்றத்தைச் சந்திக்கும் கால கட்டம் இது. இந்த நிலையில் கலப்புத் திருமணம் செய்யும் இளம் தம்பதியரை மிரட்டுவது, கட்டப் பஞ்சாயத்து செய்வது போன்ற செயல்களை இந்த நீதிமன்றம் அமைதியாகப் பார்த்துக் கொண்டு இருக்காது. ஏனெனில், இது பொதுமக்களை அதிகம் பாதிக்கக்கூடிய பிரச்சினையாக உள்ளது.
நமது நாட்டில் ஜாதி என்பது நாடு எதிர்நோக்கியுள்ள பெரிய சவால்களை நாட்டு மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு எதிர்க்க வேண்டிய கால கட்டத்தில் இதுபோன்ற பிரச்சினைகளால் மக்கள் பிரிந்து கிடப்பதை ஏற்க முடியாது. தேச நலன் கருதி கலப்புத் திருமணங்களை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
கலப்புத் திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதியருக்கு மிரட்டல்கள் வருகின்றன. அவர்களுக்கு எதிராக கட்டப் பஞ்சாயத்துகள் மூலம் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப் படுவதாக நாட்டின் பல பகுதிகளிலிருந்து தகவல்கள் வருகின்றன. இது மனதுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. இது போன்று மிரட்டுவது, துன்புறுத்துவது, வன் செயல்களில் ஈடுபடுவது போன்ற அனைத்தும் சட்ட விரோதமானவை. இது போன்ற செயல்களில் ஈடுபடுவோரைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.
இத்தகைய அடாவடித்தனமான நடவடிக்கை களைத் தடுத்து நிறுத்த மாநிலத் தலைமைச் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் மார்க்கண்டேய கட்சு, ஜி.எஸ்.மிஸ்ரா ஆகியோர் ஆணையிட்டுள்ளனர்.