டென்னிஸ் விளையாட்டில் முன்னணியில் உள்ள வீரர், வீராங்கனை என்று சொல்லக்கூடியவர்களிடம் இருக்கும் பகுத்தறிவுக்குப் புறம்பான நம்பிக்கை, அறியாமையால் விளையக்கூடிய அச்சத்தால் ஏற்பட்டுள்ள பல்வேறு மூடநம்பிக்கைச் செயல்களை டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் (3.7.2014) பட்டியலிட்டு உள்ளது.
ஒவ்வொரு விம்பிள்டன் போட்டிக்கு முன்பாகவும் பிஜோர்ன் போர்க் தாடி வளர்ப்பதிலிருந்து, மரியா ஷரபோவா விளையாடும் இடத்தில் கோடுகளை மிதிக்காமல் செல்லுவதுவரை டென்னிஸ் விளையாட்டை விளையாடுபவர்களிடையே அதிகப்படியான மூடநம்பிக்கைகள் உள்ளன.
ரோஜர் ஃபெடரர்: 17 முறை கிரான்ட் ஸ்லாம் பட்டம் வென்றவரான இவர் மூடநம்பிக்கைகள் இல்லாதவராக இருப்பார் என்று நினைத்தால் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். ஆகஸ்ட் 8ஆம் தேதி அன்று பிறந்தார். அதனால் பெடரர் எட்டாம் தேதியை நல்வாய்ப்பான (அதிருஷ்ட) எண்ணாகக் கருதிக்கொண்டு, எட்டு ராக்கெட்டுகளை (பந்தடிப்பான்) எடுத்துச் செல்வார். எட்டு குடிநீர் புட்டிகளை எடுத்துச் செல்வார். ஒவ்வொரு செட் முடிந்த பின்னும் எட்டுமுறை துண்டால் துடைத்துக் கொள்வார். விளையாட்டுப் போட்டி தொடங்குவதற்கு முன்பாக எட்டுமுறை பந்தடித்துப் பார்ப்பார். (இம்முறை விம்பிள்டன் போட்டியில் பட்டத்தைக் கோட்டை விட்டுவிட்டார். இப்போதும் துண்டை 8 முறை துடைத்தாரா, இல்லை ஏழரை முறைதான் துடைத்தாரா?)
நோவோக் டிஜோகோவிக்: பெரும்பாலும் விளையாடுபவர்கள் ஒரே மாதிரியாகப் பின்பற்றும் நடைமுறைகளுக்கு சற்று மாறாக, இவர் தனக்கு கெட்டவாய்ப்பு (துரதிர்ஷ்டம்) என்று கருதும் ஷவரை இரண்டாவது முறை பயன்படுத்துவதில்லையாம். மேலும் விளையாடப்போகும்போது தனது இரு வளர்ப்புப் பிராணிகளான பூடில், பியரே ஆகியவற்றையும் அழைத்துச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். (2011-ஆம் ஆண்டில் விம்பிள்டனில் அவ்வாறு அழைத்துச் செல்ல முடியாதபோது அதனால் பெரும் மன அவதியும் உற்றாராம். இந்த முறை 2014-இல் இவர்தான் விம்பிள்டன் பட்டத்தை வென்றிருக்கிறார். ஆனால் அவரது செல்லப் பிராணிகள் அரங்கில் இல்லை என்பதை எப்படிச் சொல்வார்?)
ரபேல் நடால்: குடிநீர் புட்டியைப் பயன்படுத்துவதன்மூலம் உலகில் பிரபலமடைந்தவர். விளையாடும்போது விளையாட்டு அரங்கின் இடப்பக்கம் பெயர் தெரியும்படியாக இரு குடிநீர்ப் புட்டிகளை வைத்திருப்பார். ஒரு மிடறுக்குமேல் (one sip) எந்தப் புட்டியிலிருந்தும் தண்ணீர் குடிக்க மாட்டார். அந்தப் புட்டியை வேறு எவரும் தொடவும் விடமாட்டார். அவ்வளவு கவனமாகப் பார்த்துக் கொள்வார். முன்னாள் டென்னிஸ் வீரர் ஜான் லாயிட் நகைச்சுவையாகக் கூறும்போது, அவருடைய எதிர் விளையாட்டு வீரர் அவருடைய (ரபேல்) புட்டிகளைத் தள்ளட்டும், அப்போது என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டுமே என்று கூறுகிறார்.
செரினா வில்லியம்ஸ்: அவருடைய மாபெரும் வெற்றிக்குப் பின்னால் இருப்பது எது என்று கேட்டீர்களானால், அவருடைய காலுறை (சாக்ஸ்) என்று கூறுவார். இது மிகவும் விநோதமானதே! ஒரு போட்டியில் வென்றுவிட்டால் அந்தக் காலுறையையே தொடர்ந்து அணிந்து வருவார். அடுத்து தோல்வி அடைந்தால்தான் காலுறை மாறும். அதுவரை அதே காலுறைதான். அதுவும் துவைக்கப்படாததாகவே இருக்கும். ரிச்சர்ட் காஸ்குவெட்: காஸ்குவெட் ஒரே முறைமையைத் தொடர்ந்து பின்பற்றி வருகிறார். எப்போதெல்லாம் புள்ளிகளை வெல்கிறாரோ அப்போதெல்லாம் அதே பந்தையே கேட்பார். அந்தப் பந்து அவருக்கு அதிர்ஷ்டத்தைப் பெற்றுத்தரும் என்று நம்புகிறார். வேறு பந்தைப் பயன்படுத்த மறுத்துவிடுவார். பந்து தேடித்தரும் பையன்களிடமிருந்து அதே பந்தைத் திரும்பப் பெற்றுத் தரவேண்டும். மறுமுனையில் நின்றுவிட்டால்கூட அதே பந்தையே கேட்பார்.
மரியன் பர்தோலி: இந்தப் பெண்மணி கடந்த ஆண்டு விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். பிரெஞ்சு டென்னிஸ் விளையாட்டு வீராங்கனையான அவர் விளையாடுவதற்கு முன்பாக கோமாளித்தனமான செய்கைகளைச் செய்வார். பந்தடிக்கும் ஒவ்வொரு முறையும் கைகளைச் சுழற்றியபடி ஓய்வின்றிக் குதிப்பாராம். அப்படியான செய்கை அவருக்கு அதிருஷ்டத்தைப் பெற்றுத்தரும் என்று எண்ணிக் கொள்வார். எதிரில் விளையாடுபவருக்கும், பார்வையாளர்களுக்கும் அவருடைய நடவடிக்கை வேடிக்கையாக இருக்கும்.
ஆண்ட்ரே அகாசி: அனைத்தையும் விட இவருடைய பழக்கம் விசித்திரமானது. 1999-ஆம் ஆண்டு பிரெஞ்சு ஒப்பன் போட்டிக்குச் செல்லும்போது இவருடைய உள்ளாடையை எடுத்து வைக்க மறந்துவிட்டார். முதல் சுற்றை உள்ளாடையின்றியே விளையாட முடிவு செய்தார். அதில் வெற்றி பெற்றதும், உள்ளாடையில்லாமல் விளையாடியது அதிர்ஷ்டம் என்று நினைத்துவிட்டார் அகாசி. தொடர்ந்து அந்தப் போட்டித் தொடர் முழுக்க உள்ளாடையின்றியே விளையாடிய அகாசி, தனது 20 ஆண்டு டென்னிஸ் வாழ்க்கையில் அம்முறை மட்டும்தான் பிரெஞ்சு ஓப்பனை வென்றார். தனது உழைப்பால் வென்றவர், அதற்கு உள்ளாடையில்லாமையே காரணம் என்று கருதியதுதான் கொடுமை.
கோரான் இவானிசெவிக்: 2001ஆம் ஆண்டில் நடைபெற்ற விம்பிள்டன் போட்டியின்போது நாள்தோறும் காலையில் தொலைக்காட்சியில் டெலிடப்பீஸ் என்ற சிறுவர் தொடரைப் பக்தி சிரத்தையோடு பார்த்து வந்தார். குரோஷியரான அவர் இரவு உணவை விடுதியின் எஸ்டபிள்யூ19 என்கிற ஒரே மேசையில்தான் தொடர்ந்து உணவருந்தி உள்ளார். அந்த முறை விம்பிள்டனை வென்றதற்கு இதுதான் காரணம் என்ற மூடநம்பிக்கை அவருக்கு!
இவர்கள் விளையாட்டு வீரர்களா? தன்னம்பிக்கையற்ற கோழைகளா?
மனிதனைப் பிடித்த மூடநம்பிக்கை, அவனிடம் இருக்கும் திறமையைக்கூட கொச்சைப்படுத்திக் கீழே தள்ளிவிடவில்லையா? வெற்றி ஆட்டத் திறனுக்கா? அதிர்ஷ்டத்துக்கா? அதிர்ஷ்டம் என்றால் என்ன பொருள் தெரியுமா? குருட்டுத்தனம் என்று பொருள். திருஷ்டம் என்றால் பார்வை, அதற்கு எதிர்ப் பதம்தான் அதிர்ஷ்டம்! அதிர்ஷ்டத்தை நம்பும் இந்த விளையாட்டு வீரர்கள் அறிவுக் குருடர்கள்தான் போலும்!