சமூகத் திருத்தம் வேண்டாமா?
நூல் : கலையும் கலை வளர்ச்சியும்
ஆசிரியர் : வ.ரா
இரண்டு பேர்கள் வாதம் செய்தால், சச்சரவுதான் உண்டாகிறது. இது இந்த தேசத்தில் மட்டும்தான் நேருகிறதா? மற்ற தேசங்களிலும் உண்டா?
இம்மாதிரி பூசல் உண்டாவது அடிமை நாட்டில்தான் அதிகம். ஏன் என்று கேட்டால், அடிமை நாட்டில், ஜனங்கள் தம் மனோரதம் பூர்த்தியாகாமல் மன வேதனைப் படுகிறார்கள். இந்த வேதனையாலும் தோல்வி மனப்பான்மையாலும், அடிமைப்பட்டுக் கிடக்கும் ஜனங்களின் நரம்பு, சரியான நிலைமையில் இருப்பதில்லை.
எது நேர்ந்தாலும், நமக்கு என்ன என்று, ஒன்று சும்மா இருந்து விடுகிறார்கள் அல்லது அர்த்தமில்லாததற்குக்கூட, சின்ன விஷயங்களுக்குக்கூட, கச்சை கட்டிக்கொண்டு சண்டைக்குப் போகிறார்கள். இது இயற்கைக்குச் சிறிதும் பொருந்தாத நிலைமையாகும்.
இந்த நிலைமையில் இருப்பதால்தான், அடிமை தேசத்து ஜனங்கள், சர்வாதிகாரி தோன்றி, எல்லாவற்றையும் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று தவறாக எண்ணம் கொள்ளுகிறார்கள். எது தேவையோ, அல்லது எது உண்மையோ அதை ஏற்றுக்கொள்ளும்படியான மனப்பான்மை இருந்தால்தான், சச்சரவில்லாமல் சீர்திருத்தத்தைச் செய்யலாம்.
அடிமை நாட்டில் எல்லாம் பிரச்சினைகள்தான். பிரச்சினைகளை அதிகமாக்கி அவைகளை கிளப்பி விட்டுக் கொண்டிருப்பது அடிமை நாட்டை ஆளுபவர்களின் வேலையாகும். ஆளுபவர்கள் இவ்வாறு செய்யலாமா என்று தரும நியாயம் பேசுவதில் பயன் இல்லை.
தராதரம் தெரியவில்லை
பிரச்சினைகள் அதிகமாக அதிகமாக, எது முக்கியமான பிரச்சினை, எதை முதலில் எடுத்துக்கொண்டு, பைசல் செய்ய வேண்டும் என்ற நிதானமே இல்லாமல் போய்விடுகிறது. இந்த நிதானம் தவறிப்போனால், சிந்தனா சக்திக்கே வேலை இருப்பதில்லை. மனதில் சோம்பல் உண்டாகி விடுகிறது.
மனச்சோம்பல் ஏற்பட்டதும், பரம்பரையிலும் வைதீகத்திலும் அபரிமிதமான நம்பிக்கை கொண்டவர்களைப் போல, ஜனங்கள் நடிக்கத் துவங்கி விடுகிறார்கள்.
எப்பேர்ப்பட்ட மூதாதைகள் என்று ஸ்தோத்திரம் செய்யப் புறப்படுகிறார்கள்.
யோசிக்கும் வேலையை, தாங்கள் மேற்கொள்ளாததால், யோசனை செய்த மூதாதைகளைப் புகழ்ந்தாலே வாழ்க்கையின் பயனை அடைந்துவிட்டது மாதிரி என்று, எண்ணவும் துணிந்து விடுகிறார்கள்.
முன்னோர்கள் வகுத்த வழிகள் சரியானவைகள் என்று கொண்டு, அவைகளை ஜனங்கள் பின்பற்றி நடக்க எத்தனித்தும், அவர்கள் ஏன் அடிமைகளாகப் போனார்கள் என்பதை விசாரிப்பதேயில்லை. தோல்விக்கு மேல் தோல்வியாலும், துயரத்துக்கு மேல் துயரத்தாலும், அடிமையின் மூளை ஸ்தம்பித்துப் போய் விடுகிறது.
தனது மூளை சரியாக வேலை செய்யவில்லை என்று அவன் ஒப்புக் கொள்ளுவதில்லை. எனவே, பெரியவர்கள் செய்தது சரி என்று நம்பிக்கை கொண்டவனைப் போல, ஆரவாரம் செய்யத் தலைப்படுகிறான். திடீரென்று அவனுக்கு வைதீகத்திலும் பரம்பரையிலும் பக்தி உண்டாகின்றது.
பொறுப்பு எஜமானர்களது!
பெரியவாள் நாளிலே எல்லாம் சரியாக நடந்தது; என்னமோ, இப்பொழுது கால விபரீதமென்று கொட்டாவி விட்டுக்கொண்டே சொல்லுகிறான். அடிமை நிலையில் இருப்பதுதான் பத்திரமானது என்றுகூட அவன் எண்ணத் துணிகிறான். அடிமை நிலையில் இருப்பின், எல்லாப் பொறுப்புகளும் எஜமானர்களைச் சேர்ந்ததுதானே!
சுதந்திரத்தைக் கேலி செய்யத் துவக்கி விடுகிறான். எந்த தேசத்தில் சுதந்திரம் இருக்கிறது? எந்த தேசத்தில் ஜாதி இல்லை? ஒரு தேசமும் சொர்க்கத்தைப் போல இருக்கவில்லை. ஆகவே, ஏன் பகல் கனவு கண்டுகொண்டு, துன்பப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும்? தற்போதைய நிலையே உத்தமமானது என்று எப்படியோ சமாதானம் செய்துகொள்ளப் பார்க்கிறார்கள்.
இல்லாவிட்டால், சுயமரியாதை என்ற சாக்கிலே, பெருங்கூச்சல் போடுகிறார்கள். சச்சரவு அவசியமில்லாதது என்று அவர்களுக்குத் தெரிவதே இல்லை. படிப்பும் பொறுப்பும் இல்லாததால், முற்போக்கைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதே இல்லை. புராணங்களை பக்திமார்க்க சபைகளில் படித்தாலே போதும் என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.
படிப்பில்லாமல் பாமரர்களாக இருக்கும் மக்களை எவ்வாறு உயர்த்துவது? அரசாங்கத்துக்கு அக்கறை இல்லையே என்று வருந்துவதால், என்ன பலன் உண்டாகப் போகிறது? பாமர மக்கள், தங்கள் கண்களையும் காதுகளையும் கொண்டுதான் கரையேற வேண்டும். பிரசங்கத்தைக் கேட்பதாலும் சினிமாப் படங்களைப் பார்ப்பதாலும் அவர்களுடைய அறிவு விசாலப்படலாம்.
எப்படி இருக்க வேண்டும்?
பிரசங்கமும் சினிமாப் படமும், எந்தத் தன்மை கொண்டவைகளாயிருக்க வேண்டும்? புனர் ஜன்மம், பூர்வ ஜன்மம், கர்ம பலன், நரகம், சொர்க்கம் பாபம், புண்ணியம் முதலியவைகளைப் பற்றி, எவ்வளவு சாதுர்யமாக பிரசங்கம் செய்தாலும், ஜனங்களுக்கு அவைகளில் விருப்பு உண்டாவதில்லை. பழைய பஞ்சாங்கம் என்று அவர்கள் சொல்லுவதில்லை; ஆனால் அலுப்படைந்து விடுகிறார்கள்.
செல்வம், கலை, சுதந்திரம், பிரயாணம், புது வாழ்வு, அனுபவ ஸயன்ஸ், கலியாணம், காதல், கவிதை, பூந்தோட்டம் வகைகள், குடியிருப்பு வசதி முதலியவைகளைப் பற்றி, பிரசங்கம் செய்தால், ஜனங்கள் காது கொடுத்துக் கேட்கிறார்கள். இவைகள், அவர்களுடைய தினசரி வாழ்க்கைக்கு, ஒவ்வொரு வகையில் தேவையானவைகள். வையத்து மழை அவ்வளவும் வீட்டிலே பெய்வதைப் போல, வீடு ஒழுகினால், ஒருவனுக்கு பாப புண்ணியத்திலே நாட்டம் ஏற்படுமா?
கூரை மேய்வதற்கு வழி என்ன? கீற்றுக்குப் பணம் வேண்டுமே? பணம் எங்கிருந்து கிடைக்கும்? தாரையாக ஒழுகுகிற வீட்டிலே எப்படிச் சமைப்பது, இவைகள்தான் அவனுடைய மனதில் எழும் கேள்விகள் ஆகும். பக்கத்து வீதியில், கடனுக்குக் கீற்று கொடுக்கிறார்கள் என்று யாராவது சொன்னால், அது அவனுடைய வயிற்றில் பாலை வார்த்தது மாதிரி இருக்கிறது.
ஒழுக்கு வீட்டில் குடியிருக்க நேருவது பூர்வ ஜன்மத்தின் பலன் என்று சொன்னால், அது அவனுடைய காதிலேயே விழாது. வீட்டின் கூரையை மேய்ந்த பிறகு, உங்களுடைய வேதாந்தத்தைக் கேட்டுக் கொள்ளுகிறேன் என்று துடுக்காக அவன் பதில் சொன்னால், அதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?
குண்டு வீழ்ந்தால்?
ராமனும் ராவணனும் ஆதிகாலத்தில் சண்டை செய்தவிதத்தில், இப்பொழுது யாருக்கு அக்கறை இருக்கும்? ஆகாயத்திலிருந்து குண்டு விழுந்தால், அதை எப்படிச் சமாளிப்பது என்பதுதான் தற்போதைய முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று. உணவுப் பொருள்கள் எங்கே மலிவாக கிடைக்கும் என்பது மற்றொரு பிரச்சினை.
இவைகளைப் பற்றி பிரசங்கத்தில் கேட்கத்தான், ஜனங்கள் பிரியப்படுகிறார்கள். காலம் சரியாகப் போகவேண்டுமே என்று பாமர மக்கள் சொல்லுவதற்கு என்ன அர்த்தம்? மானத்தோடு பிழைப்பதற்கு வழியை யாரேனும் சொல்ல மாட்டார்களா என்றுதான் அதற்கு அர்த்தம்.
இதை மனதில் வாங்கிக் கொள்ளாமல், குகன் ராமனை வணங்கி, மகத்தான பேறு எவ்வாறு பெற்றான் தெரியுமா என்று வர்ணிக்கத் துவக்கலாமா? துரியோதன், சகுனிமாமாவோடு சம்பாஷிக்கும் காட்சியை விஸ்தாரமாகப் பேசலாமா? பண்டைக் காலத்து வரலாறுகளை பொழுது போக்குக்காக அல்லது தோல்விக்குப் பின்னர் மனதைத் தேற்றிக் கொள்ளுவதற்காக, பேசிக் கொண்டிருக்கலாம். ஆனால், அவைகளுக்கும் தற்போதைய வாழ்க்கைக்கும் தொடர்பு இருப்பதாக, யாரேனும் துணிந்து சொல்ல முடியுமா?
சினிமாப் படக்கதை பெரும்பாலும் புராணக் கதைகளாக இருக்கின்றன. நவீன கதைகள் இன்னும் ஏன் தோன்றவில்லை?
புது வாழ்வு எப்படி இருக்க வேண்டும்? எந்தத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்? அதை அடைய சாதனமோ சாதனங்களோ என்ன? புது வாழ்வு என்பது இன்னதுதான் என்று தெளிவுபட்டுவிட்ட போதிலும், அது தேவையா இல்லையா என்ற கேள்வியும் பிறக்கிறது.
பல கட்சிகள் இருக்கும்!
இவைகளைப் பற்றி நமது சமுதாயத்தில், ஒற்றுமை கொண்ட அபிப்பிராயம் இன்னும் ஏற்படவில்லை. புது வாழ்வில், ஜாதிப் பிரிவினை இருக்கப்படாது என்பது ஒரு கட்சி. புது வாழ்வில், பெரிய இயந்திரங்கள் வேண்டும் என்பது ஒரு வாதம். குடிசைத் தொழில்களையும் கைவிடலாகாது என்பது மற்றொரு கட்சி. விவாகரத்து வேண்டும் என்பது ஒரு கட்சி; வேண்டாம் என்பது வேறொரு கட்சி. கலப்பு மணம் கட்டாயம் வேண்டும் என்பது ஒரு திட்டம்.
இப்படியே போய்க்கொண்டிருக்கும். எனவே, புது வாழ்வு என்பது இன்னதுதான் என்று திட்டமாகவும் தெளிவாகவும் அபிப்பிராயம் ஏற்படாததால், எழுத்தாளர்கள் நவீன கதைகளை அமைக்க சிரமப்படுகிறார்கள் போலும்!
என்றாலும் தரித்திரம், அறிவில்லாமை, சுதந்திரம், ஆரோக்கியம், சந்தோஷம், நேர்மை, சகோதரபாவம் முதலியவைகளைக் கதையில் கொண்டு வந்து, அவைகளை உயிருள்ள பாத்திரங்களாக அமையச் செய்தால், ஜனங்கள் கண்டிப்பாய் ரசிப்பார்கள். முஸ்லிமும் ஹிந்துவும் அடித்துக் கொள்ளாமல் சகோதரர்களாக இருக்க முடியும் என்று கதை மூலமாக காண்பிக்கக் கூடாதா?
அகம் பிடித்த அதிகாரியின் முரட்டு அதிகாரத்துக்கு உட்படுவது சுயமரியாதை அல்ல என்பதை எடுத்துக் காண்பிக்கக் கூடாதா? ஹரிஜனும் மனித உணர்ச்சியும் உள்ளமும் பெற்றவன்தான் என்பதை (நந்தனார் வாழ்க்கையைத் தவிர) நவீன முறையில் எடுத்துக் காண்பித்தால், பார்ப்பவர்கள் உணர்ச்சிப் பெருக்கு அடையமாட்டார்களா? ஸ்திரீகளின் கூட்டுறவு இல்லாமல் போனால், வாழ்க்கையில் இன்பமும் முற்போக்கும் கிடையாது என்பதை எடுத்துக் காண்பிக்கலாகாதா?
மேலே சொன்ன வகைகளில், கதைகளை அமைத்து, சினிமாப் படங்களை எடுத்தால், நமது ஜனசமூகம் விரைவில் சீர்திருத்தம் அடையும் என்பது என் கருத்து.