உடல்நலனை பாதிக்கும் சாண எரிபொருள்
உலக அளவில் இந்தியா, சீனா மற்றும் வங்காள தேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் சுத்தமான எரிபொருளைப் பயன்படுத்துவதில் பின்தங்கியுள்ளதாகவும் அதில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாகவும் அய்.நா. கூறியுள்ளது.
இந்தியாவில் சுத்தமான எரிபொருள் அனைவரும் வாங்கும் குறைவான விலையில் கிடைப்பதில்லை. 85 விழுக்காடு கிராமப்புற வீடுகளில் சாண எரிபொருளையே (பயோமாஸ்) பயன்படுத்துகின்றனர். 45 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட மக்களுக்கு இன்னும் மின்சாரம் கிடைக்கவில்லை. சாணத்தைத் தட்டி அதனை அப்படியே எரிபொருளாகப் பயன்படுத்துவதால் அதிலிருந்து காற்றைக் கடுமையாக மாசுபடுத்தும் அளவு புகை வெளியாகிறது. இதனால் வளிமண்டலத்தில் ஒரு கியூபிக் மீட்டருக்கு 300லிருந்து 3000 மைக்ரோ கிராம் அளவிற்கு காற்று மாசு அடைவதுடன், உடல் நலத்தையும் பாதிக்கிறது. எனவே ஸ்டவ்களை அதிகம் பயன்படுத்தச் செய்வது புகையின் அளவைக் கட்டுப்படுத்தும் என்று அய்.நா. தெரிவித்துள்ளது.
பரமண்டல பாஷையா சமஸ்கிருதம்?
விண்வெளியில் உள்ள பிற கோள்களில் வசிக்கும் மனிதர்களிடம் தொடர்பு கொள்வதற்கான தொடர்பு மொழியாக சமஸ்கிருதத்தையும் சீன மொழியையும் நாசா ஆய்வு மய்யம் தேர்ந்தெடுத்துள்ளதாக ஒரு செய்தி இணையதளத்தில் பரப்பப்பட்டு வருகிறது.
விண்வெளியில் ஒலியலைகளைப் பரப்பும் அமெரிக்கக் கோள்கள் சமஸ்கிருத மொழியில், யாராவது இருக்கீங்களா, நாங்க பூமியிலிருந்து பேசுகிறோம் என்று சொல்லிக் கொண்டே இருக்குமாம். அப்படித் தான் சொல்கிறது அந்தச் செய்தி!
உண்மையில் உலகிலுள்ள மொழிகளிலேயே சீனமும் சமஸ்கிருதமும்தான் கடினமான மொழிகள் என்கிறார்கள். ஆனால், இணையதளத்தில் வெளிவரும் செய்திகளில் சீனமும் சமஸ்கிருதமும் மிகமிக எளிமையாக இருப்பதுடன் கணினிப் பயன்பாட்டு மொழிக்கு ஏற்ற வகையில் இருப்பதாகவும் பொய்யாகக் கூறப்பட்டுள்ளது.
சமஸ்கிருதத்தில் 248 எழுத்துகள் உள்ளன. சீன மொழியில் 10 ஆயிரம் எழுத்துகள் உள்ளன. சீன மொழியினை எழுத படிக்கத் தெரிய வேண்டுமென்றால் சுமார் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் எழுத்துகள் வரை தெரிந்திருக்க வேண்டும். தற்போது அதிக அளவில் கணினிப் பயன்பாட்டில் உள்ள ஆங்கிலம்தான் மிக எளிதான மொழி என்று கணினி நிபுணர்களே ஒத்துக் கொண்டுள்ளனர்.
சமஸ்கிருதம் என்ற வார்த்தையே நாசா இணையதளப் பக்கத்தில் இடம்பெறவில்லை. மேலும், பிற கோள்களில் வசிக்கும் மனிதர்களுடன் தொடர்புகொள்ள என்று தனியாக எந்த ஒரு மொழியும் இருப்பதாகத் தெரிவிக்கப்படவுமில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
விண்வெளியில் உலவும் தேவர்களின் பாஷை என்று இங்கு அவிழ்க்கும் புளுகு மூட்டைகளை நாசாவையும் முன்வைத்து அவிழ்க்கப் பார்க்கிறது ஆரியம்! எச்சரிக்கையடைந்திருக்குமா நாசா?
பி.கு: இதே போன்ற போலி மின்னஞ்சல் மூலம் தான் ராமர் பாலம் என்ற கட்டுக்கதையும் நாசாவின் பெயரால் பரப்பப்பட்டது.