குறைந்த நிலப்பரப்பில் குறைவான தொழிலாளர்களுடன் அதிக உற்பத்தி கிடைக்கும் வகையில் கண்டுபிடிப்புகள் தேவை. எண்ணெய் மற்றும் எரிவாயு சிக்கனம், கழிவுநீர்க் கால்வாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்குவது போன்றவற்றிலும் புதிய கண்டுபிடிப்புகள் தேவை.
இப்போது இருக்கும் கண்டு பிடிப்புகளைப் பயன்படுத்துவதில் சிக்கல் உள்ளது. உதாரணமாக தங்க நாற்கர சாலைத் திட்டத்தில் ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டன. மரங்களைப் பெயர்த்து வேறு இடங்களில் நடும் தொழில்நுட்பம் இருந்தும் அதனைப் பயன்படுத்த முடியவில்லை. இந்த இடைவெளியைக் களையவேண்டும்.
– பொன்ராஜ் வெள்ளைச்சாமி, அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர்.
தங்களது குழந்தைகளுக்கு தாய்மொழியான தமிழைக் கற்றுத்தர வேண்டும் என்ற எண்ணம் பெற்றோரிடம் உருவாக வேண்டும். அவ்வாறு தமிழர்களிடையே முதலில் தமிழ்ப்பற்று வளர்ந்தால்தான் பிறமொழிகளின் திணிப்பை எதிர்கொள்ள முடியும். -கவிப்பேரரசு வைரமுத்து
செல்பேசி, மின்-அஞ்சல், முகநூல் ஆகியவற்றை அதிகமாகப் பயன்படுத்துவோர் அடையாளம் தெரியாத பெயர்களில் தங்களுக்கு வரும் தகவல்களைக் காண ஆர்வம் காட்டக்கூடாது. தகவல் தொழில்நுட்பத்தை நல்ல நோக்கத்துக்காக மட்டும் பயன்படுத்தினால் சைபர் குற்றங்கள் குறையும். முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் மாணவர்களை பெற்றோர்கள் கண்காணிப்பதுடன் இணையதளத்தில் உள்ள நன்மை தீமைகளை அவர்களுக்கு விளக்கிக் கூற வேண்டும்.
– லத்திகா சரண், முன்னாள் காவல்துறை தலைமை இயக்குநர்
வழக்கு விசாரணையிலிருந்து நீதிபதிகள் விலக நேரிடும்போது அதற்கான காரணங்களை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். இதுபோன்ற சூழலில் நீதிபதிகளிடமிருந்து உண்மையான காரணத்தைக் கொண்டு வருவதற்காக ஊடகங்கள் பல்வேறு யூகங்களை வெளியிடுகின்றன. பின்னர் அந்த யூகங்களுக்கு நீதிபதிகள் மறுப்புத் தெரிவிக்கிறார்கள். எனவே, வழக்கிலிருந்து நீதிபதிகள் விலகும்போது இந்தக் காரணங்களால் விலகுகிறேன் என்று கூறுவது நல்லது.
– பாலி நாரிமன், மூத்த வழக்குரைஞர், உச்ச நீதிமன்றம்