தொலைவில் இருக்கும் நிலவைக் காட்டி சோறு ஊட்டும் தாய்மார்கள் இப்போது யாரும் இல்லை. தொலைக்கட்சியில் திரை நட்சத்திரங்களைக் காட்டித்தான் உணவு (சோறு?) ஊட்டுகிறார்கள். குழந்தைகள் பிறப்பது வளர்வது எல்லாம் தொலைக்காட்சியின் முன்னால்தான். அவர்களின் விருப்பம், தேர்வு எல்லாம் ஊடகம் சொல்வதைத்தான்.
தொலைக்காட்சியில் வரும் நொறுக்குத்தீனிகளுக்கு குழந்தைகள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். காற்றடைத்த பையில் கொஞ்சமே இருக்கும் வற்றல் வகைகள் உண்மையில் உடம்பைக் காற்றடைத்ததைப் போல் ஊத வைக்கின்றன. அந்த உணவு வகைகளின் மணம்? வாயருகே கெண்டு செல்லும்போதே வாந்தி வருவதுபோல் இருக்கிறது. இருந்தாலும் விளம்பரக் கவர்ச்சியில் மயங்கிய சிறுவர்கள் பெருமையாக அதைச் சுவைத்து உண்கின்றனர்.
இந்த வகை உணவுகளில் கலக்கப்படும் வேதிப் பொருட்கள் ஒரு வகை போதைக்கு அவர்களை ஆளாக்கி திரும்பத் திரும்ப அதை வாங்கி சுவைக்கத் தூண்டுகிறது. பெற்றோர்கள் வங்கித் தரவில்லை என்றால் முரட்டுத்தனமாக நடந்துகொள்கிறார்கள்.தொந்தரவு செய்யாமல் இருந்தால் போதும் என்று காசைக் கொடுத்துவிடுகிறார்கள் பெற்றோர்கள். இதன் விளைவு அதீத உடற்பருமன். பெரியவர்கள் பலரும் இந்த நொறுக்குத் தீனிக்கு அடிமையாகி இருக்கிறார்கள் என்பதும் உண்மை.
பள்ளிக்குப் போகும் குழந்தைகளின் பாடப் புத்தகச் சுமையைப் பற்றிப் பேசும் அளவுக்கு அந்தக் குழந்தைகளின் உடல் எடையைப்பற்றிப் பேசுகிறோமா? குழந்தைப் பருவ உடற்பருமன் என்பது மக்கள் நலப் பிரச்சினைகளில் முக்கியமானது ஆகும். இது குழந்தைகளின் செயலற்ற தன்மையையும் இளவயது மரணத்தையும் ஏற்படுத்தக் காரணமாகிறது. அதுமட்டுமில்லாமல் நீண்டகால சமூக, பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது.
கடந்த கால் நூற்றாண்டில் குழந்தைப் பருவ உடற்பருமன் மும்மடங்காக அதிகரித்திருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. இப்போதுள்ள இளைஞர்களில் 20 % வரை அதிக உடற்பருமன் உள்ளவர்களாக இருப்பதாக ஒரு அபாய அறிவிப்பு அந்த ஆய்வில் இருக்கிறது. 2 லிருந்து 5 வயது வரையுள்ள குழந்தைகளில் உடற்பருமன் அதிகமாக உள்ளவர்கள் 5 .0 % லிருந்து 12 .4 % ஆகவும் 6 லிருந்து 11 வயதுக் குழந்தைகளில் உடற்பருமன் அதிகமாக உள்ளவர்கள் 6.5%லிருந்து 17%ஆகவும் அதிகரித்திருக்கிறது.
பதின்பருவத்தினரில் (Teenage) உடற்பருமன் அதிகமாக உள்ளவர்கள் 5.0 %லிருந்து 17.6% ஆகவும் அதிகரித்திருக்கிறார்கள். குழந்தைப் பருவத்தில் உடற்பருமன் அதிகரிப்பு நீரிழிவு, இருதய நோய்கள் மற்றும் ஒரு வகைப் புற்று நோய்க்கும் காரணமாகிறதாம்.
கூடுதல் எடையைக் குறைக்கும் முயற்சியைப் பெற்றோர்கள் குழந்தைகளுக்குச் சொல்லித் தரவேண்டும். இன்றைய குழந்தைகளில் 8 முதல் 18 வயது வரை உள்ளவர்கள் பலவகையான ஊடகங்களிலும் நேரத்தைச் செலவிடுகிறார்கள். வலைத்தளம் ,தொலைக்காட்சி , வீடியோ கேம் முதலியவற்றில் வாரத்திற்கு 45 மணி நேரம் வரை செலவிடுகிறார்கள். இந்த ஊடகங்களில் வரும் ஊட்டச்சத்தற்ற உணவுப் பொருட்களின் விளம்பரங்களுக்கும் குழந்தைகளின் உடற்பருமனுக்கும் முக்கியத் தொடர்பு உள்ளதாக ஆய்வில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். தொலைக்காட்சி,இணையம் ஆகியவற்றில் வரும் திண்பண்டங்களின் நம்பகத்தன்மையைக் குறித்து ஏதும் அறியாமலேயே அந்தப் பொருட்களை வாங்கிச் சாப்பிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். அதைப் பற்றிய விழிப்புணர்வு பெறும் வயதல்ல அவர்களுக்கு என்பது உண்மைதான். மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்படுகின்ற விளம்பரங்களின் வாசகங்கள், யுக்தி , கவர்ச்சி ஆகியவற்றால் உடல்நலனைக் கெடுக்கும் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் அதன் தாக்கத்திற்கு ஆளாகிறார்கள். பெற்றோர்களை வாங்கித்தரச் சொல்லி வற்புறுத்துகிறார்கள்.
விளம்பரங்களும் இளைஞர்களின் உடல், மன நலன் கேடுகளும்
1 குழந்தைகளையும் இளைஞர்களையும் குறி வைத்துச் செய்யப்படும் விளம்பரங்கள் அவர்களின் உடல் எடை அதிகமாவதற்குக் காரணமாகிறது. (மொறு மொறுப்பான நொறுக்குத் தீனிகள், அய்ஸ் கிரீம்கள் , சாக்லேட்டுகள், நூடுல்ஸ் இன்னும் பல. )
2 . வேறு சில நிறுவனங்களின் விளம்பரங்கள் இளம்பெண்களையும் நடுத்தர வயதுப் பெண்களையும் குறி வைக்கிறது. இதனால் அவர்களுக்கு தங்களின் உடலமைப்பு மீதான மனக்குறையும் ஒழுங்கற்ற உணவுப் பழக்கமும் தன்னம்பிக்கைக் குறைவும் மன அழுத்தமும் ஏற்படுகிறது.( சிகப்பழகு கிரீம், உடலழகுக் கருவிகள் ,மருந்துகள் பற்றிய விளம்பரங்கள்.)
3 . பல வளரிளம்பெண்கள் குறிப்பாக பதின் பருவத்தினர் (ஜிமீமீஸீணீரீமீ) விளம்பரங்களின் தாக்கத்தால் ஆரோக்கியமற்ற வழிகளில் எடைக் கட்டுப்பாட்டு முறைகளைக் கையாள்கிறார்கள்.
4 . ஆரோக்கியமற்ற எடைக் கட்டுப்பாட்டுப் பழக்கங்கள் ( பட்டினி, மிகக் குறைவாக உண்ணுதல், வேண்டுமென்றே வாந்தி எடுத்தல், வயிற்றுப் போக்கு மாத்திரைகள் சாப்பிடுதல் போன்றவை) எதிர் விளைவாக உடல் பருமனை அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. 5 . உடல் பருமன் அதிகமுள்ள இளையோரை மற்றவர்கள் ஏளனமாகப் பார்ப்பதும் கிண்டல் செய்வதும் அவர்களின் மனதைப் பாதிக்கிறது. 6 . உடல் பருமன் பற்றிய மனக்குறை உலகில் உள்ள எல்லா மனிதர்களிடத்திலும் இருக்கிறது. இதனால் மன அழுத்தமும் தன்னம்பிக்கைக் குறைவும் ஏற்படுவதோடு தற்கொலை எண்ணமும் உருவாகிறது.
தொலைக்காட்சி விளம்பரமும் குழந்தைப் பருவ உடற்பருமனும்
ஆதாரம் : Kaiser Family Foundation 2007
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் நேரம் அதிகரிக்க, அதிகரிக்க உடல் பருமனும் அதிகரிக்கிறது. நான்கில் மூன்று விளம்பரங்களில் வரும் உணவு வகைகள் ஊட்டச்சத்தற்றதாகவும் உடலைக் குண்டாக்கக்கூடியதாகவும் இருக்கிறது. குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளில் வரும் விளம்பரங்களில் அய்ம்பது விழுக்காடு ஆக்கரமித்திருப்பது உணவு வகைகள்தான்.
அதிக கலோரி, குறைந்த ஊட்டச்சத்துக் கொண்ட துரித உணவுகள் சுவையூட்டப்பட்ட பானங்கள் ஆகியவற்றின் மீதான ஆர்வம், அவற்றை வாங்கி உண்ணத் தூண்டுகிறது. ஒரு நாளைக்கு 150 கலோரிகள் அதிகமானாலே உடற்பருமன் அதிகரிக்க ஆரம்பித்துவிடும்.
தெளிவாகச் சொல்லவேண்டும் என்று சொன்னால் 8 லிருந்து 12 வயது வரையுள்ள குழந்தைகளைக் குறி வைத்து விளம்பரப்படுத்தப்படும் உணவு வகைகள் அவர்களை ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தில் தள்ளிவிடுகிறது.
வயது வாரியாக குழந்தைகளைக் குறிவைத்துச் செய்யப்படும் விளம்பரங்களின் விவரத்தைக் கீழே காணலாம்.
தொலைக்காட்சி மட்டுமல்லாமல் இணையதளமும் இதே வேலையைச் செய்கிறது. ஆனால், இணையதளத்தைப் பயன்படுத்தும் குழந்தைகளின் வயது 8 க்கு மேல் இருப்பதால் அதனுடைய தாக்கம் குறைவு. ஆன் லைன் விளையாட்டுகளில் செய்யப்படும் விளம்பரங்கள் குழந்தைகளின் கவனத்தை ஈர்க்கின்றன.
பெற்றோருக்குச் சில குறிப்புகள்
- தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தைக் குறைப்பது, குறிப்பிட்ட நேரத்தில் உணவு உண்பது , தவறாமல் உடற்பயிற்சி செய்வது போன்றவற்றைக் குழந்தை களுக்குப் பழக்கப்படுத்தவேண்டும்.
- 8 வயதுக்குக் குறைவான குழந்தைகள் எந்த மாதிரியான நிகழ்சிகளைப் பார்க் கிறார்கள் என்பதைக் கண்காணியுங்கள்.
- பழங்கள், காய்கறிகள், தானியங்கள், கொழுப்புக் குறைக்கப்பட்ட பால் பொருட்கள், கொழுப்பற்ற மாமிசம், மீன், போன்ற உணவுகளை மட்டுமே சாப்பிடச் செய்யுங்கள் . அதோடு உடலுழைப்பை அதிகப்படுத்தக் கற்றுக்கொடுங்கள். குழந்தைகளோடு சேர்ந்து உண்பது மனதுக்கும் மகிழ்ச்சியளிக்கும் என்பதை உணருங்கள்.
- ஆரோக்கியமான உணவு உண்பதும் உடற்பயிற்சி செய்வதும் நல்லது என்பதற்கு நீங்களே முன்னுதாரணமாக இருங்கள்.