மோடி அரசின் ரயில்வே நிதிநிலை அறிக்கை: ஒரு கானல்நீர்தான்!

ஜூலை 16-31

புதிதாக அமைந்துள்ள பா.ஜ.க. தலைமையிலான பிரதமர் மோடி அரசின், ரயில்வே துறை அமைச்சர் திரு.சதானந்த கவுடா தனது முதல் ரயில்வே நிதிநிலை அறிக்கையை 8.7.2014 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

ரயில்வே நிதிநிலை அறிக்கைக்கு முன்பாகவே, 14.2 சதவிகித பயணிகள் கட்டண உயர்வும், 6.2 சதவிகித சரக்குக் கட்டண உயர்வும் இந்த அரசால் அறிவிக்கப்பட்டு, உடனடியாக நடைமுறைக்கு வந்ததின்மூலம், 8000 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது.

இந்த ரயில்வே நிதிநிலை அறிக்கையில் அறிவிப்புகள்: சில புல்லட் ரயில் அறிவிப்பு, ரயில்வே பல்கலைக்கழகம் போன்ற வாணவேடிக்கை அறிவிப்புகளும், வழக்கமான முந்தைய அரசின்மீது புகார் பட்டியலும் இடம்பெற்றுள்ளன.

வருமானத்தில் ஒரு ரூபாயில் 94 காசுகள் செலவுள்ள நிலையில், (எஞ்சியது 6 காசுகளே) என்கிற நிலையில், இத்தகைய வினோத வித்தைகள் தேவைதானா என்ற கேள்வி நியாயமானதுதான்.

இந்த ரயில்வே பட்ஜெட்டின்மூலம் அந்நிய முதலீடு – வெளிநாட்டவர் உள்ளே நுழைதல், ஒட்டகம் கூடாரத்திற்குள் நுழைவதாகவும், துப்புரவுப் பணிகள் உள்பட பல பணிகளை தனியாரிடம் ஒப்பந்தங்களுக்கு (காண்ட்ராக்ட்) விடுவதன்மூலம், ரயில்வே துறை இனிவரும் 5 ஆண்டுகாலத்திற்குள், வெளியார் கம்பெனியாகவும், தனி முதலாளிகளின் வசமாகவும் ஆவதற்கான முன்னுரை எழுதப்பட்டுள்ளது என்பது மிகவும் வேதனைக்கும், கண்டனத்திற்கும் உரியதாகும்.

இது பெரிதும் ஏமாற்றத்தைத் தருகிறது என்று சொன்னாலும், பா.ஜ.க.வின் கொள்கை, முந்தைய காங்கிரசின் (மன்மோகன்சிங் தலைமையின்) உலகமயம், தாராளமயம், தனியார்மயக் கொள்கையிலிருந்து மாறுபடாதது என்பதால், இத்தகைய நிலைப்பாட்டை மக்கள் எதிர்பார்க்க வேண்டியவர்களே ஆவர். அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி (UPA) கடந்த ஆண்டு தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டில் ரயில் பெட்டிகளில் தீப்பிடித்தால், விபத்துகள் ஏற்பட்டால், அதிலிருந்து தப்பிக்கத் தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.

தங்களுக்குச் சாதகமாக இருக்கும்பொழுது, கடந்த காங்கிரஸ் ஆட்சி செய்ததைத்தான் நாங்களும் செய்துவருகிறோம் என்று கூறும் இன்றைய பி.ஜே.பி. ஆட்சி, கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அறிவித்த இந்த மிக முக்கியமான அறிவிப்பைச் செயல்படுத்த முன்வராதது ஏன்? இன்னும் சொல்லப்போனால், இந்த அதிமுக்கியமான பயணிகளின் உயிர்காக்கும் பிரச்சினையைக் கண்டுகொள்ளாதது கண்டிக்கத்தக்கதாகும்.

இந்தப் பட்ஜெட்டில் சன்னமாக நுழைந்துள்ள ஒரு திட்டம் திடுக்கிட வைக்கக்கூடியது _- மக்கள் தலையில் இடியை இறக்குவதாகும்.

டீசல், பெட்ரோல் விலை ஏற்றத்துக்கு ஏற்ப ரயில்வே கட்டணத்தை உயர்த்துவார்களாம். இதன் பொருள் என்ன? வாரா வாரம், மாதாமாதம் கட்டணத்தை உயர்த்துவார்கள் என்பதுதானே! இது குழப்பமானது _- நடைமுறைக்குச் சாத்தியமில்லாதது. ஆண்டுக்கொருமுறை கட்டணத்தை ஏற்றும்போதே எதிர்ப்புகள் வெடிக்கும் நிலையில், இப்படி டீசல், பெட்ரோல் விலை ஏறும்பொழுதெல்லாம் பயணக் கட்டணத்தை ஏற்றுவது என்பது கோமாளித்தனமானதாகும்.

இதுதான் இந்த ஆட்சியின் நிர்வாகத் திறமைக்கான எடுத்துக்காட்டுபோலும்! வாரா வாரம் ஏலம் போடும் இந்த விசித்திரத்தை என்னவென்று சொல்வது!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் _- நிறைவேற்றப்பட சுமார் 1800 கோடி ரூபாய்  தேவைப்படக்கூடிய நிலையில், யானைப் பசிக்குச் சோளப்பொரி என்பதுபோல, வெறும் 700 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. நமது தமிழ்நாட்டு எம்.பி.,க்கள் என்ன செய்யப் போகிறார்கள்? அழுத பிள்ளைதானே பால் குடிக்கும்? ஓங்கிக் குரல் எழுப்பிட வேண்டாமா? தமிழ்நாட்டின் முதலமைச்சர் இப்போது மோடி அரசை மிகவும் ஆதரிக்க வேண்டிய நிலையில் உள்ளார் என்பதை அவரது கருத்து (ஸிமீணீநீவீஷீஸீ) தெளிவாக்குகிறது.

முந்தைய அரசு கட்டணத்தை உயர்த்தியபோதும், பல வசதிகள் அறிவித்தபோதும் இப்படிப்பட்ட மென்மையான, வரவேற்புப் பத்திரம் அவர் படித்ததில்லை. அது ஒருபுறம் இருக்கட்டும்; 5 ரயில்கள் வாரத்தில் சில நாள்கள் மட்டுமே ஓடும்! மற்றபடி தமிழ்நாடு பெரிதும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

இந்திய நாடு பல மாநிலங்களின் கூட்டமைப்பு என்கிற நிலையில், ஒவ்வொரு மாநிலத்தின் வளர்ச்சி, தேவை என்பதை அவரவர்கள் கருத்துக் கேட்டு, கருத்திணக்கத்தை (Consensual Approach) முன்பே செய்தால், பல மாநிலங்களும் வளர வாய்ப்பு ஏற்படும். அந்த நிலை இல்லையே!

30 நாள்தானே என்ற சமாதானம் எவ்வளவு நாளைக்கு ஓடும்? முந்தைய அரசின்மீது பழி போடுவதும் எடுபடாது. எனவே, ரயில்வே பட்ஜெட் ஒரு கானல் நீர்தான்!

கி.வீரமணி,
ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *