மைசூர் அருகே சாமுண்டி மலையடிவாரத்தில் உள்ள சுத்தூர் மடத்தில் நடைபெற்ற ஜெகத்ஜோதி பசவண்ணர் ஜெயந்தி விழா(பசவ ஜெயந்தி விழா)வில் கலந்து கொண்டார் கர்நாடக முதல் அமைச்சர் சித்தராமையா.
விழாவில் பேசியபோது, நமது நாட்டில் இன்னும் ஜாதிகள் ஒழியவில்லை. கடந்த 850 ஆண்டுகளுக்கு முன்னே ஜாதிகளை ஒழிக்கப் பாடுபட்டவர் பசவண்ணர். ஜாதிகளை ஒழிக்க நீண்ட காலமாகப் போராட்டம் நடத்தியதுடன் தாழ்த்தப்பட்ட மக்களை ஒன்றாகச் சேர்த்து, மனித ஜாதி ஒன்றே, வேறு எந்த ஜாதியும் இல்லை என உலகத்திற்கு அறிவித்தவர். ஜாதிகளை ஒழிக்க மகாமனே மற்றும் அனுபவ மண்டபங்களை உருவாக்கி அனைத்து மக்களும் சரிசமமாக வாழ நடவடிக்கை மேற்கொண்டவர்.
இன்றுவரை ஜாதிகள் ஒழியவில்லை. ஒவ்வொரு இனத்தினருக்கும் ஒரு ஜாதி உள்ளது. அந்த ஜாதிகளை ஒழிக்க நாம் ஒவ்வொருவரும் பாடுபட்டால்தான் நம் நாடு முன்னேறும். மனிதர்கள் அனைவரும் மனிதாபிமானத்துடன் வாழ வேண்டும். இன்றைய இளைஞர்கள் ஜாதி வெறியைத் தூக்கி எறிய வேண்டும் என்று கூறினார்.