அய்யர் நடத்தும் அக்சயா ரகசியங்கள் அம்பலம்
2010ஆம் ஆண்டு யூடியூப், முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் சிஎன்என் ஹீரோ (CNN Heroes) போட்டிக்கு நமது இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவளியுங்கள் என்று விளம்பரம் வந்தது. உலக அதிசயமாக மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஓட்டுப் போடுங்கள் என்றாலும் என்ன அதிசயம் என்றும் கேட்காமல் ஓட்டுக் குத்தும் நம்மவர்கள் இந்தியரை ஆதரிப்போம் என்று கிளம்பினார்கள். அவர் பெயர் நாராயணன் கிருஷ்ணன். இளைஞர். அய்ந்து நட்சத்திர விடுதிகளில் சமையலராகப் பணியாற்றியவர். ஆதரவற்றோர் பலர் உண்ண உணவின்றி தவிப்பதையும், ஒரு பெரியவர் தன் கழிவையே உண்ண முயற்சித்ததையும் கண்டு இந்தப் பணியைத் தொடங்கினேன். தேடித் தேடி உணவற்றோருக்கு உணவிடுவதைத் தொண்டாகச் செய்கிறோம் என்று வீடியோவில் பேசினார். ஆதரவற்றோர் காலில் விழுந்து கும்பிடுவதையும் அவர்களை அணைத்து குளிப்பாட்டுவது முதல் சேவை செய்வதையும் வீடியோவில் காட்டியதும் சிந்திய கண்ணீரோடு ஓட்டுக்குத்தி அவரை சிஎன்என் ஹீரோவாக்கி விட்டுத்தான் ஓய்ந்தார்கள். இப்போது அவரது தொண்டு நிறுவனமான அக்சயா, அமெரிக்கா வரை கிளை பரப்பியுள்ளது. அந்த நாராயணன் கிருஷ்ணன் இப்போது கிருஷ்ணன் அய்யர்.
அன்று சிஎன்என் ஹீரோ விருது வாங்கி உலகப் புகழ் பெற்ற அக்சயா நிறுவனமும், கிருஷ்ண அய்யரும் இன்று வில்லன் படத்தின் கிட்னி திருடும் வில்லன் போல குற்றச்சாட்டுக்கு ஆளாகி நிற்கின்றனர்.
சில நாட்களுக்கு முன் அக்சயா தொண்டு நிறுவனத்தின் சுற்றுச் சுவற்றில் நிர்வாணத்துடன் ஏறிக் குதித்து, வெளியில் வேலை செய்த பெண்களிடம், தன்னைக் காப்பாற்றும்படி கூக்குரலிட்டு ஓடிவந்துள்ளார் ஆயிஷா என்ற இளம்பெண். உடுத்த உடை கொடுத்து, சாப்பாடு கொடுத்து கிராம நல அலுவலரின் உதவியுடன் அருகில் வேலை செய்த கொடிமங்கலம் என்ற ஊரைச் சேர்ந்த பெண்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அக்சயா ஆசிரமத்தில் சேவையோ தொண்டோ நடைபெறவில்லை. அனாதைகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் உடல் உறுப்புகளை விற்பனை செய்கிறார்கள். சுயமாகச் சிந்திக்க விடாமல் தினமும் மூன்று முறை போதை ஊசி போடுகிறார்கள். பாதி சாமத்தில் பெண்கள் அலறும்போது, ஜன்னல் வழியாகப் பார்த்தால் அடுத்த அறையில் ஆபாசப் படம் வீடியோ எடுப்பதையோ நிர்வாணமா ஆடவைத்துப் படம் எடுப்பதையோ பார்க்கலாம். ஆடைகளைக் கலைய மறுக்கும் பெண்களை அடிப்பார்கள். வாரம் ஒருமுறை யாராவது வெளிநாட்டுக்காரர்களைக் கூட்டிவந்து எங்களை வரிசையா நிக்க வச்சுப் பார்ப்பார்கள். அடுத்த 2 நாளில் அவங்க காட்டுனவங்க பிணமாகிடுவாங்க. சாகிறவங்க எல்லோரும் நைட்லதான் சாவாங்க. அதுவும் மயக்க மருந்துகூட கொடுக்காமல் உறுப்புகளை அறுத்தெடுக்கும் கொலை. ராத்திரியோட ராத்திரியா எரிச்சுடுவாங்க அல்லது புதைச்சிடுவாங்க. ஜூன் 4ஆம் தேதி வந்த வெள்ளைக்காரன் என்னை அடையாளம் காட்டிட்டுப் போனதிலிருந்து எனக்குப் பயம் வந்திடுச்சு. கூட இருந்த பொண்ணுங்க ஆயிஷா, உனக்கு அய்ந்தாம் நைட் ஆபரேஷனாம்னு சொல்லி அழுதாங்க. குளிக்கிறதாச் சொல்லிட்டு யூனிபார்மைக் கழட்டிப் போட்டுட்டு ஓடிவந்து இவர்களிடம் அடைக்கலம் புகுந்தேன் என்று கூறியுள்ளார்.
ஆயிஷா சொன்ன தகவல்கள் குறித்து, கொடிமங்கலத்தைச் சேர்ந்த ஒருவரிடம் கேட்டபோது,
அக்சயா ஆசிரமத்தில் நிறைய தப்புகள் நடப்பது உண்மை. மதுரை பெரியாஸ்பத்திரியில்கூட இவ்வளவு பேர் சாவதில்லை. மாதத்துக்கு 20, 25 பிணங்களை நாகமலை சுடுகாட்டுல எரிக்கவோ புதைக்கவோ செய்றாங்க என்று கூறியுள்ளார்.
மேலும், ஆயிஷாவுக்கு ஆடை கொடுத்து உதவிய பெண் கூறும்போது, அந்த ஆசிரமத்தில பொண்ணுங்க அலறுகிற சத்தம் நல்லா கேட்கும். நாம யாரும் அதுக்குள்ள போக முடியாது. இப்பக்கூட போலீசு ஆபீசர்களைக்கூட உள்ள விடமாட்றாங்க. அந்த ஆசிரமக்காரங்களைப் பார்த்து போலீசே பயப்படுதே என்று கூறியுள்ளனர்.
பழைய வி.ஏ.ஓ.வும் உதவியாளரும்கூட இதைப் பத்தி என்கிட்ட சொல்லி இருக்காங்க. கடந்த 6 மாதத்திற்குள் 50_க்கும் அதிகமான சாவுகள் நடந்திருக்கின்றன என்று சொன்னார்கள். ரொம்ப டவுட்டாதான் இருக்கு. போலீஸ்தான் விசாரித்து நடவடிக்கை எடுக்கணும். பணத்தால் எதையும் சரிக்கட்டிவிட முடியும்னு அந்த நிர்வாகம் எண்ணிக் கொண்டிருப்பதாகவும் கேள்விப்பட்டேன் என்று பொறுப்பு வி.ஏ.ஓ.வாக இருக்கும் திரவியம் கூறியுள்ளார்.
உடற்கூறு பரிசோதனை இன்றி, ஊர் அலுவலருக்குத் தகவலும் இன்றி எரிக்கப்பட்ட உயிர்கள் பற்றியும், உடலுறுப்புகள் திருடப்பட்டனவா என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் விசாரித்து அறிக்கை தரவேண்டுமென்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஊடகங்கள் உருவாக்கும் ஹீரோக்களின் மீதான பிம்பமும் நிஜத்திலும் உடையும் காலமிது! கிருஷ்ணன் அய்யர் மீது உருவாக்கப்பட்ட பிம்பம் உடைந்து கோரமுகம் வெளிப்படத் தொடங்கியுள்ளது.