அண்மைக் காலமாக தமிழ் சினிமா ஒரு புதிய தடத்தை நோக்கிப் பயணிக்கிறது என்பது அதன் முழு வடிவம் புரிந்தவர்களுக்கு நன்கு தெரியும். அந்த வகையில் கிராமங்களில் நிலவும் பல வகையான மூட நம்பிக்கைகளுக்கு ஒரு கிராமமாக ஒட்டு மொத்த அடிமையாக இருக்கும் சூழலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம்தான் முண்டாசுப்பட்டி. அதென்ன முண்டாசுப்பட்டி? அந்த ஊரில் எல்லோரும் எப்போதும் தலையில் முண்டாசு கட்டிய படியே உள்ளனர். எனவே அது முண்டாசுப்பட்டி அவ்வளவுதான். மற்றபடி அதற்க்கு ஒரு பெரிய விளக்கம் இல்லை.
1947இல் இந்திய நாடு விடுதலை அடைவதற்கு முன் அந்த கிராமத்திற்கு வரும் ஒரு வெள்ளைக்கார அதிகாரி அங்கு உள்ள கலாச்சாரங்களை தனது புகைப்பட கருவியில் (போட்டோ கேமரா) பதிவு செய்கிறார்.
அப்போது ஒரு வயதான மூதாட்டியைப் படம் பிடிக்கும்போது தன்னியல்பாக அவர் இறந்து போகிறார். மேலும், அந்தக் கிராமத்தில் ஒரு விதமான நோய் பரவி பலர் இறக்கின்றனர். அதைக் கண்டு அச்சப்படும் மக்களிடயே மேலும் ஒரு பிரச்சினையாக கொள்ளைக்காரர்கள் கூட்டமாக வந்து கொள்ளையடிக்கின்றனர். அப்போது அந்த கிராம மக்கள் கடவுளை நோக்கி எங்களைக் காப்பாற்று என்று வேண்டும்போது வானியல் அதிசய நிகழ்வாக விண்கல் ஒன்று வேகமாகப் பயணித்து அந்த முண்டாசுப்பட்டி கிராமத்திலேயே அதுவும் அந்த கொள்ளைக்காரர்கள் மீதே வந்து விழுந்து விட, அந்தக் கல்லையே கடவுளாக வழிபடத் தொடங்கி விடுகின்றனர். அதன் பிறகு அந்தக் கிராமத்தில் யாரும் போட்டோ எடுக்கக் கூடாது மீறி எடுத்தால் இறந்து விடுவோம் என்ற மூட நம்பிக்கை பரவுகிறது. அடுத்து கதைக்களம் 1982ஆம் ஆண்டில் பயணிக்கிறது. இது போக மேலும் பல சின்னச் சின்ன மூட நம்பிக்கைகள் அந்த மக்களிடையே நிலவுகிறது. பக்கத்து ஊரில் போட்டோ ஸ்டுடியோ வைத்திருக்கும் கதாநாயகன், அவனது உதவியாளர், முண்டாசுப்பட்டி கிராமத்தின் தலைவரின் மகள் கதாநாயகி, நகைச்சுவை நடிகராக பாத்திரமேற்றிருக்கும் முனீஸ்காந்த், என இந்த நால்வரைச் சுற்றியே கதை நகருகிறது. முன்பு போட்டோ எடுத்த அந்த வெள்ளைகார அதிகாரி அந்த ஊரில் விழுந்த விண்கல்லின் துகள்களை ஆய்வு செய்து அது விலை மதிக்க முடியாத கனிமம் என்று கோமளப்பட்டி ஜமீன்தாரிடம் சொல்ல அவரும் அந்தக் கல்லைத் (வானமுனி இது அந்த விண்கல்லுக்கு கிராமத்தினர் வைத்த பெயர்) திருட முயற்சிக்கும் வேலை ஒரு பக்கம் என்று படம் மிகச் சிறப்பாக நகர்கிறது. ஒருவரிக் கதையை வைத்துக் கொண்டு கொஞ்சமும் சலிப்பில்லாமல் அதே நேரத்தில் இப்படித்தான் சினிமா என்பதை உடைத்து சாதாரணமாகப் பதிவு செய்த இயக்குனரைப் பாராட்டியே ஆக வேண்டும். இது போக அந்த ஊரில் ஒரு சாமியார். அவரிடம் குறி கேட்டுத்தான் அந்தக் கிராமமே இயங்குகிறது. ஆனால் அவரின் பின்புலம் என்ன என்று பார்த்தால் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு சிறைத் தண்டனை அனுபவித்து விடுதலை ஆகி வந்தவர். வெளியில் வந்து முண்டாசுப்பட்டி கிராமத்தின் கோவிலில் ஓர் இரவு படுத்து மறுநாள் காலை எழுந்து பார்த்தால் கிராம மக்கள் அவர் முன் கூடி சாமி! நீங்கதான் எங்க கிராமத்தைக் காப்பாத்தணும் என்று சொல்ல, அவரும் நமக்கு ஒரு சரியான இடம் கிடைத்து விட்டது என்று அந்த ஊரிலேயே தங்கி தனது வாழ்க்கையை நடத்துகிறார்.
(இப்படி பல ஊர்களில் சாமியார்கள் உண்டு என்பதை அனைவரும் அறிவோமல்லவா?). அந்தக் கிராமத்தில் உள்ள வானமுனியைக் கடத்திப் போக அதை மீட்டு வந்து தந்து கதாநாயகன், தன் காதலியான அந்த ஊரின் தலைவர் மகளைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார். இறுதியில் கதாநாயகன் திட்டப்படிதான் வானமுனி காணாமல் போனது என்று தெரியவர, கல்யாணம் நடத்தி முடித்த கையோடு ஊரை விட்டு ஓடிப்போகும் போது அந்த ஊர் மக்கள் அவர்களைப் பிடிக்க விரட்டுகிறார்கள். அப்போது வேறு வழியே இல்லாமல் அவர்களிடம் இருந்து தப்பிக்க, திரும்பி கேமராவை எடுத்துக் காட்ட கிராம மக்கள் பயந்துகொண்டு திரும்ப ஓடுகிறார்கள்.படம் முழுக்க சின்னச் சின்ன விசயங்களை மிக அழகாக, நேர்த்தியாக இணைத்து மக்கள் மத்தியில் மண்டக் கிடக்கும் மூடநம்பிக்கைகளை எடுத்துச் சொல்லியுள்ள இயக்குனர் வசனங்களிலும் சரியாகக் கவனம் செலுத்தியுள்ளார்.
மற்றபடி ஒளிப்பதிவு, பின்னணி இசைப் பாடல்கள்,என அனைத்தும் வித்தியாசமாக செய்திருக்கிறார்கள். படக்குழுவினர் படம் தொடங்கியதிலிருந்து, முடியும் வரை முழு நீள நகைச்சுவைப் படமாக நகர்கிறது. கதை நாயகன், நாயகி தவிர மற்ற நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் என அனைவரும் புதியவர்கள். மிக சாதாரண மனிதர்களிடம் உள்ள திறமைகள் கண்டிப்பாய் மதிக்கப்பட வேண்டும். அதைச் சரியாக இனங்கண்டு பயன்படுததியிருக்கிறார்கள். எள்ளி நகையாடப்படவேண்டிய மூடநம்பிக்கைகளை அதே சுவையில் சொல்லி அனைவரையும் கவர்ந்திருக்கும் மூடநம்பிக்கைப்பட்டி மன்னிக்கவும் முன்டாசுப்பட்டி நல்ல செய்தியுடன் கூடிய பொழுதுபோக்குப் படம்.
– தம்பியப்பா