குழு சார்பில் அய்யா அவர்களுக்கு, நாங்கள் கொடுத்த அய்ம்பதினாயிரம் ரூபாய் தொகைக்கான (ரூ. 50,000) காசோலையை முதல்வர் பலத்த கைத்தட்டலுக்கிடையே அய்யா அவர்களுக்கு அளித்தார்கள்!
19 ஆவது நூற்றாண்டில் பிறந்த அய்யாவின் தொண்டு, இருபதாம் நூற்றாண்டிலும் தொடரப்பட்டு, இன்று இணையற்ற வெற்றியைத் தந்திருக்கிறது! புத்தரால் சாதிக்க முடியாததை, தந்தை பெரியார்தான் சாதித்தார்கள்! தாழ்த்தப்பட்ட, – ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகப் போராடி வரும் ஒரே ஒரு ஜீவன் தந்தை பெரியார்தான்! அவர்கள்தம் காலத்தில், அவர்களுக்குப் பரிசாக இப்பொருளைவிட, மாநில சுய ஆட்சியை அளிப்போம். அதில் வெற்றி காணும்வரை அய்யா வாழ வேண்டும் என்று மிகவும் உருக்கமானதொரு அரிய சொற்பொழிவினைக் கலைஞர் நிகழ்த்தினார்!
சுயமரியாதை இயக்கத்தின் இணையற்ற சுடராய் – பெரும் தூணாய் – எவரெஸ்ட் சிகரமாய் இருப்பவரே தந்தை பெரியார்; புத்தராலும் பெற முடியாத வெற்றியைப் பெற்ற பெருந்தகை தந்தை பெரியார் என்று கொள்கை மலர் தொடுத்து தந்தைக்குப் புகழ்மாலை சூட்டினார் கலைஞர்.
கலைஞர் தொடர்ந்து உரையாற்றுகையில், இந்தநாள் எழுச்சிபொங்கும் நாள்; உணர்ச்சி கொப்புளிக்கும் நாள்; உயிரணு ஒவ்வொன்றும் இன்பம் எய்தும் நாள்; தமிழகத்தின் தன்மானச் சுடரொளியாக- _ சுயமரியாதை இயக்கத்தின் சூறாவளியாக தமிழ் இயக்கங்கண்டு தமிழர் உரிமைக்காகப் போராடிவரும் தன்மானத் தலைவனாக வீற்றிருக்கும் தந்தை பெரியார் அவர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகின்ற வகையில், தஞ்சையிலுள்ள தமிழ் நெஞ்சங்கள் பல்லாயிரக்கணக்கில் கூடியிருக்கும் இந்தக் காட்சியைக் காணுவதில் பேருவகை கொள்கின்ற திருநாள்!
தந்தை பெரியார் அவர்களுக்கு இங்கே காரும், சிங்கப்பூரிலிருந்து வரவழைக்கப்பட்ட ஸ்பெஷல் கடிகாரமும், டேப்ரிக்கார்டரும், 50,000 ரூபாயும் பரிசளிக்கப்பட்டன. இந்தப் பரிசுகளுக்கெல்லாம் பெரும் பரிசினைப் பேரறிஞர் அண்ணா அவர்கள் 1967 – ஆம் ஆண்டில் தமிழக அமைச்சரவையே காணிக்கையாக அளித்தார்கள். சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டப்படி செல்லுபடியாக்க வேண்டும் என்று பெரியார் அவர்களும் அண்ணா அவர்களும் பல காலமாகக் கேட்டுக் கொண்டிருந்த போதெல்லாம், அதனை நிறைவேற்றி வைக்காத ஆட்சியாளர் மாறி, 1967-இல் அண்ணா தலைமையில் கழகம் ஆட்சிக் கட்டிலில் ஏறிய அந்த ஆண்டில் சுயமரியாதைத் திருமணம் செல்லுமென்று சட்டமன்றத்தில் சட்டமியற்றப்பட்டது. அப்போது, எதிர்க் கட்சியினரில் ஒருவர், அண்ணாவைப் பார்த்துக் கேட்டார். இது பெரியாருக்கு நீங்கள் தரும் பரிசா? என்று கேட்டார். அதற்குப் பேரறிஞர் அண்ணா, இந்த அமைச்சரவையே பெரியாருக்குத் தரப்பட்ட பரிசுதான் என்று பெருமிதத்தோடு கூறினார்.
இங்கு, பெரியாருக்குக் கார் அளிப்பதற்காகப் பாடுபட்டவர்களுக்கெல்லாம் நன்றி தெரிவிக்கப்பட்டது. பெரியாரின் உடல் நலம் பேணும் மருத்துவர்களுக்கும் நன்றி செலுத்தப்பட்டது. அவர்களுக்கெல்லாம் என்னுடைய இதயத்தையும் இணைத்துக் கொள்கிறேன்.
பெரியார் அவர்கள் நமக்கெல்லாம் இன்னும் நீண்ட நாளைக்குத் தேவைப்படுகிறார். பெரும் புரட்சியை உருவாக்க நினைத்த புத்தன் நீண்ட காலமாகத் தான் நினைத்து உருவாக்கிய புரட்சிக் கருத்துகள் இந்த நாட்டுக்குப் பயன்படுமென்று கருதினான். ஆனால், புத்தனின் கருத்துகள் வெளிநாட்டுக்குத்தான் ஏற்றுமதி ஆனது; உள்நாட்டில் விலைபோகவில்லை.
தந்தை பெரியார் அவர்கள் 19-ஆம் நூற்றாண்டில் ஒரு புரட்சியை உண்டாக்கினார், 20-ஆம் நூற்றாண்டில் அவரால் உருவாக்கப்பட்ட மாணவர்களால் – அவரால் உருவாக்கப்பட்ட பிள்ளைகளால் – அவரால் உருவாக்கப்பட்ட குழந்தைகளால் – அவரால் உருவாக்கப்பட்ட தொண்டர்களால் அமைக்கப்பட்ட ஆட்சியில் அவரது புரட்சிக் கருத்துகள் படிப்படியாக நிறைவேறி வருகின்றன. பெரியாரின் கொள்கைகள்தான் தி.மு.க. அரசினால் நிறைவேற்றப்பட்டு வருகின்றன என்று இங்கே வீரமணி அவர்கள் சுட்டிக் காட்டினார். அதற்கு ஏற்பத்தான் இந்த அரசும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஒரு முறை சட்டமன்றத்திலே இந்த அரசை மூன்றாம்தர அரசு என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினார்கள். இது மூன்றாம்தர ஆட்சி அல்ல; நாலாம் தர ஆட்சி. நாங்கள் எல்லாம் நாலாம் தர மக்கள்தான்; அதாவது, சூத்திரர்களால் ஆளப்படுகிற ஆட்சி இந்த ஆட்சி என்று நான் கூறினேன். அய்யாவின் பள்ளியில் -_ அண்ணாவின் கல்லூரியில் படித்ததால்தான் அப்படி அடக்கத்தோடு சொன்னேன்.
அண்மையில், இந்த ஆட்சியின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டபோது கடந்த 4 ஆண்டுகளில் 99 உத்தியோகங்கள் யார் யாருக்குத் தரப்பட்டது என்று எடுத்துக் காட்டினேன். அவை எல்லாம் தந்தை பெரியார் வழியில்-, அண்ணாவின் வழியில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகப் பாடுபட்டுக்கொண்டிருக்கிற இந்த அரசு, அந்தச் சமுதாய மக்களுக்குத்தான் அளித்துள்ளது என்பதை எடுத்துக் காட்டினேன்.
கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக இல்லாத வரலாறாக, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் நீதிபதியாக வீற்றிருக்கின்ற நிலையை உருவாக்கியுள்ளது, இந்தக் கழக அரசுதான். இப்படிச் செய்வது குற்றம் என்று சொன்னால் – இப்படிச் செய்கின்ற அரசின் மீது நம்பிக்கை இல்லை என்றால், நாங்கள் இதே தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்போம் என்றும் குறிப்பிட்டேன்.
இப்படிப்பட்ட உறுதியை அண்ணாவுக்கும், எனக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும் ஊட்டியவர்தான் இங்கே வீற்றிருக்கின்ற வெண்தாடி வேந்தர், – பகுத்தறிவுச் சிங்கம் தந்தை பெரியார் அவர்கள். அவருக்குக் கார் பரிசு கொடுத்தேன். எனக்கு ஜனாதிபதியிடம் போய் புகார் கொடுக்கிறார்கள்! புகார் கொடுத்தீர்களே அதற்கு விளக்கம் கூற வாருங்கள் என்றால் சட்டசபைக்குள் புகார் என்ற நிலையில் அவர்கள் இருந்து விட்டார்கள்.
கழக அரசு மாநில சுயாட்சியைக் கேட்கிறது. நாங்கள் பெரியாரின் பிள்ளைகள்; பிள்ளைகளாகிய நாங்கள் கேட்கின்ற மாநில சுயாட்சியைக் கொடுத்து விடுங்கள்; இல்லையேல் நீங்கள் பெரியாரோடு போராட வேண்டி வரலாம்; பெரியாரோடு போராடுவதைத் தவிர்க்கவாவது, பிள்ளைகளாகிய நாங்கள் கேட்கின்ற மாநில சுயாட்சியைக் கொடுப்பது நல்லது என்றுதான் நாங்கள் மத்திய அரசுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்.
எங்கோ எஜமானர்களாக உட்கார்ந்து கொண்டு, மாநிலங்களை அடக்கி ஆளுகின்ற தன்மை மாற வேண்டும் என்றுதான் மாநில சுயாட்சி கேட்கிறோம். நாங்கள் மாநில சுயாட்சி கேட்பது, இந்தியா பிளவுபட அல்ல; இந்தியா தனித் தனியாக ஆக்கப்பட அல்ல; இந்தியாவைத் துண்டு துண்டாக வெட்ட அல்ல; கலனாகிவிட்ட கங்கை கொண்ட சோழபுரம் -மாநில சுயாட்சி தேவை என்று சொல்லவில்லையா? உழுபவனுக்கே நிலம் சொந்தம் எனும் சட்டம் இயற்றி 4,5, மாதங்கள் ஆயின கையெழுத்துப் பெறுவதற்காக மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட அது, இன்னும் சட்ட இலாகாவை விட்டுத் தப்பி வரவில்லை. இன்னும் மத்திய அரசின் ஆலோசனையிலேயே அது இருக்கிறது. இது கேட்கவில்லையா மாநில சுயாட்சி?
பஸ்கள் தேசியமயமாக்கப்பட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதற்காக அமைச்சருக்குப் பாராட்டு விழாகூட எடுத்துவிட்டோம். இப்போது அந்தச் சட்டம் எங்கே? நீதிமன்றத்துக்குப் போயிருக்கிறது. இது கேட்கவில்லையா மாநில சுயாட்சி?
தமிழகத்தில், தீவிரமாகச் சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அவையெல்லாம் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கே ஒப்புதலுக்காகத் தவம் கிடக்கின்ற நிலை ஏற்படுகிறது. இவையெல்லாம்தான் சொல்கின்றன -மாநில சுயாட்சி தேவை தேவை என்று! சுயமரியாதை இயக்கத்தின் அணையாத விளக்காய் _ -பெரும் தூணாய்- _ எவரெஸ்ட் சிகரமாய் இருப்பவர் தந்தை பெரியார்.
தாழ்த்தப்பட்டோருக்கு_-நாட்டில் அவதிப்படுவோருக்கு_-வீதியோரத்தில் வீசியெறியப்பட்டவர்களுக்கு- _ நாயினும் கேவலமாக நடத்தப்பட்டோருக்கு என்று, இந்த மக்களுக்காகப் பாடுபட்டவர்தான் இதோ இங்கு வீற்றிருக்கின்ற பெரியார்!
பேரறிஞர் அண்ணா, மாநிலங்களவையில் பேசும் போது சொன்னார். நான் இங்கே தி.மு.க. சார்பில் பேச வரவில்லை; தமிழ்நாட்டின் தெருவோரத்து மக்களின் பிரதிநிதியாக வந்து பேசுகிறேன். -ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் புராண இதிகாசங்களின் பெயரால் ஒதுக்கித் தள்ளப்பட்ட மக்களின் சார்பில் பேசுகிறேன் என்றார். அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்ட நாங்களும் இந்த மக்களுக்காகத்தான் பேசுகிறோம். ஏன்? எதற்காக? என்பதுதான் பெரியார் அவர்களின் இலட்சியம்! ஏன் எதற்காக என்ற கேள்விகள் ஆரம்பம் ஆகிவிட்டாலே அதுதான் பகுத்தறிவின் ஆரம்பம். ஏன் – எதற்காக என்ற கேள்விகள் தொடங்கினாலே சிந்தனை உதயமாகி விடுகிறது.
இத்தகைய சிந்தனையை – பகுத்தறிவின் உதயத்தை உருவாக்கிய தந்தை பெரியார் அவர்கள் மாநில சுயாட்சியின் வெற்றி விழாவை நாம் நடத்தும் வரையில் வாழ வேண்டும். அய்யா அவர்களின் கொள்கையான ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைக்கவேண்டும் என்ற எண்ணத்தில், மாநில சுயாட்சி கேட்கிறோம். அய்யா அவர்கள்கூட, நமது பிள்ளைகள் கொஞ்சம் பயந்து கொண்டு மாநில சுயாட்சி கேட்கிறார்கள் என்று சொல்வார்கள்.
நான், மத்திய ஆட்சியைக் கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் கேட்பதை நீங்கள் இன்றைய தினம் கொடுக்க வில்லையானால், நீங்கள் பெரியாரோடு போராட வேண்டி இருக்கும். அய்யா அவர்களுடைய இலட்சியம் என்ன? எதையும் – ஏன்? எதற்காக? எப்படி? என்று கேள் என்பதாகும். இந்தக் கேள்வியிலேதான் சிந்தனை பிறக்கிறது. மனிதன் செத்த பிறகு கருமாதி கொண்டாடுகிறார்கள். கருமாதியிலே என்ன சொல்கிறார்கள்? இறந்தவனுடைய உயிர் நெருப்பாற்றைக் கடக்க முடியாமல் தத்தளிக்கிறது. நெருப்பாற்றிலே ஒரு மயிர்ப்பாலம். பசுவைத் தானமாகக் கொடுத்தால், அந்தப் பசு அந்த ஜீவனை நெருப்பாற்றிலே அழைத்துச் செல்லும் என்கிறார்கள். பெரியார் கேட்டார்; நெருப்பாறு இருக்க முடியுமா? அப்படியே இருந்தாலும் அதிலே மயிர்ப்பாலம் இருந்தால் நெருப்பிலே பொசுங்கிப் போகாதா? என்று கேட்டார். கூட்டத்தில் கேட்டவர்கள் சிரித்தார்கள். வீட்டிற்குப் போனதும் அவர்களது மூளை வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. ஆம்! அதுதான் பெரியாரிசம்! அப்படியே வளர்ந்து வளர்ந்துதான் இன்றைக்கு ஆயிரக்கணக்கில் இங்கு கூடியுள்ளீர்கள்.
அய்யா அவர்கள் நாங்கள் மாநில சுயாட்சி உரிமையைப் பெறும் காலம்வரை – அந்த வெற்றித் திருநாளை எய்தும்வரை, நீண்ட நாள் வாழவேண்டும் என்ற ஆசையைத் தெரிவித்து விடைபெறுகிறேன், வணக்கம் எனக்கூறி முடித்தார்கள்.
அய்யா அவர்கள் பதிலுரையில், இம்முயற்சியில் ஈடுபட்ட கழகப் பொதுச் செயலாளருக்கும், அவருக்கு முழு ஆக்கமும் ஊக்கமும், தந்த தோழர்களுக்கும், மக்களுக்கும் நன்றி தெரிவித்து, ஜாதி ஒழிந்து சூத்திரப் பட்டம் ஒழிய வேண்டுமானால் மக்கள் கோயிலுக்குப் போகாமல், விபூதி பூசாமல், கடவுளைக் கும்பிடாமல் இருந்தால்தான் முடியும் என்று கூறி, தனக்குப் பிறகு இப்படி ஒரு கொள்கையை எடுத்துச் சொல்லும் துணிச்சல்காரர்கள் வருவது சுலபமா என்பதை மக்கள் உணர்ந்து, இப்பிரச்சாரத்தின் மேன்மையைப் புரிந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று, மிகவும் உள்ளத்தைத் தொடக்கூடிய வகையில் உரை நிகழ்த்தி, தன்னைப் பாதுகாத்து வரும் டாக்டர்களைப் பாராட்டி நன்றி தெரிவித்தார்கள்!
தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் தோலி ஆர். சுப்பிரமணியம் அவர்கள் அறிமுக உரையாற்றி, விழாவிற்குப் போக்குவரத்துத்துறை அமைச்சர் மாண்புமிகு இராமச்சந்திரன் அவர்களைத் தலைமை ஏற்று நடத்திக் கொடுக்குமாறு முன் மொழிந்தார். நான் அனைவரையும் வரவேற்று உரை ஆற்றினேன்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்விழாவில் அமைச்சர் பெருமக்களின் உரைகளுக்குப் பின்னர் இறுதியில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:- இன்றைய தினம் நமது வீரமணி அவர்களின் முயற்சியால் கார் ஒன்றும் மற்றும் சில முக்கியப் பொருள்களும் எனக்குப் பரிசாகக் கொடுத்து அனுப்பினார்.
இந்தப் பொருட்களை எல்லாம் நான் என்ன செய்யப் போகிறேன் என்று எனக்கே தெரியவில்லை. கார் ஒன்றுதான் எனக்கு அதிகம் பயன்படும். எனக்கு இந்தப் புதிய வேனில் சவாரி செய்வதால் ஒன்றும் அதிகம் வாழப் போவதில்லை. ஆனால், இதைப் போன்ற விழாக்களைக் காணும்போதுதான் எனக்கு உற்சாகம் ஏற்படுகிறது.
இந்தக் கார் நிதிக்கு, இந்தத் தமிழ்நாட்டு மக்கள் ஏராளமாக -கேட்டதற்கு மேல் அதிகமாகக் கொடுத்துள்ளார்கள். அதிலே குறிப்பாக, தஞ்சை மாவட்டம் 40 ஆயிரம் ரூபாய் அளித்து இருக்கிறது, அந்த அளவுக்கு நமது கொள்கைக்கு நாட்டில் வெற்றி கிட்டி இருக்கிறது, செல்வாக்குப் பெருகிவிட்டது.
இங்கு டாக்டர்களுக்கு எல்லாம் பொன்னாடை போர்த்திச் சிறப்பித்தார்கள். எனது நோய்த் தொல்லையை ஆபரேஷன் செய்து, பெரும் அளவுக்கு நமது டாக்டர் பட் அவர்கள் குறைத்தார்கள். அதிலே வேடிக்கை என்ன வென்றால், ஆபரேஷன் செய்ததே எனக்குத் தெரியாது; மறுநாள்தான் ஆபரேஷன் நடந்ததே எனக்குத் தெரியும். அவ்வளவு சவுகரியமாக இந்த ஆபரேஷனைச் செய்து முடித்தார்கள். அவர்களுக்கு நான் நன்றி செலுத்துவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்.
அதைப் போலவே நமது டாக்டர் இராமச்சந்திரா அவர்கள் சென்னை மருத்துவமனையிலே பெரிய டாக்டர். எப்போது நான் சென்னைக்குச் சென்றாலும். எனக்கு வேண்டிய மருத்துவ உதவிகளை எல்லாம் செய்து தருவார். அதைப்போலவே, நமது டாக்டர் ஜான்சன் அவர்களும். அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்கு இன்றைக்கு வயது 94. அடுத்த மாதம் பிறந்தால் 95. அறுபது வருடங்களுக்கு முன்பு நமது மக்களின் யோக்கியதை என்ன? அதாவது, நாம் முயற்சி எடுப்பதற்கு முன்பு இந்த நாட்டு மக்களின் யோக்கியதை என்ன? 1925 வாக்கிலே நாம் நூற்றுக்கு அய்ந்துபேர்தான் படித்து இருந்தோம். ஏன் அந்த நிலைமை? பள்ளிக்கூடங்களே இல்லாது போயிற்றா? அந்த நேரத்தில்கூட பார்ப்பான் நூற்றுக்கு நூறு படித்து இருந்தானே! அது மட்டும் எப்படி முடிந்தது?