கடவுளை நம்பினோர் கைவிடப்பட்டார்
– முருகு. சுப்பிரமணியன்
இளம் வயது முதல் புரட்சிக்கவிஞர் பாடல்களிலும் திராவிட இயக்கக் கொள்கைகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். படிக்கும்போதே இளந்தமிழன் என்ற திங்கள் இருமுறை ஏட்டைத் தொடங்கியவர். 1947ஆம் ஆண்டு பொங்கல் நாளையொட்டி பொன்னி இதழைத் தொடங்கி அதன் ஆசிரியரானார். 1954ஆம் ஆண்டு சிங்கப்பூர் தமிழ் முரசு நாளிதழில் துணையாசிரியராகவும் 1962ஆம் ஆண்டு மலேசியா தமிழ் நேசன் இதழின் தலைமையாசிரியராகவும் பணியாற்றிய பெருமைக்குரிவர்.
சிதம்பர நாதா, திருவருள் தாதா!
அம்பலவாண முதலியாரின் வேண்டுகோள் இது. கொல்லங்குடியிலே கோயில் கொண்டுள்ள நடராசப் பெருமான் திருமுன்னர்தான் முதலியார் இவ்வாறு பாடிப்பாடி உருகுவார். பொழுதும் விடியும்; கோயில்மணியும் ஒலிக்கும். அம்பலவாணரின் இன்னிசையும் முழங்கும். இவ்வரன்முறை கொல்லங்குடியிலே நித்திய நிகழ்ச்சியாகி விட்டது.
அம்பலவாண முதலியார் கொல்லங்குடியில் வாழும் மேட்டுக்குடி மக்களில் ஒருவர்; மற்றொருவர் அவர் தம்பி ஆடியபாதம். அவர்கள், குடும்பம்தான் அங்கே பணக்காரக் குடும்பம். அவர்கள் வைத்ததுதான் சட்டம்; நடத்தியதுதான் திட்டம். இப்படியாகக் கொல்லங்குடி இவர்களின் ஏகபோக ராஜ்யமாக இருந்து வந்தது.
நடராசர் கோயில் திருப்பணியை இவர்களின் தந்தையார்தான் நிறைவேற்றி வைத்தார்; கோயில்முன்னே நீர் நிறைந்துள்ள குளமும் இவர்கள் தருமத்தின் பயன்தான்; குளத்தைச் சுற்றியுள்ள அக்கிரகாரமும் இக்குடும்பத்தினர் எண்ணத்தில்தான் பூத்தது. சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் கொல்லங்குடியில் நிலவும் தரும கைங்கரியங்கள் அனைத்தும் இவர்கள் கைவண்ணமே!
தந்தையாரின் தரும சிந்தையும் பக்திப் பிரவாகமும் மூத்த மகனிடமே அடைக்கலம் புகுந்துவிட்டன என்று அக்கிராம மக்கள் கூறும்படியாக அம்பலவாணரின் தருமங்களும், பக்தி நெறியும் அமைந்தன. ஆடியபாதம் தந்தையார் சொத்தில் பாதி பெற்றாரேயொழிய தரும எண்ணம் ஆண்டவன் பக்தி ஆகியவற்றில் பங்கு கொள்ளவில்லை. அண்ணனுக்கே முற்றும் விடுத்து, பட்டணத்தில் வாணிபம் நடத்தச் சென்றுவிட்டார். ஆகவே அம்பலவாணர் ஒரு குடை நிழலில் கொல்லங்குடியில் குடியோச்சி வந்தார்.
* * * * *
அம்மா, தாயே, இந்தப் பொங்கலுக்காவது கண் திறப்பாயா? பிள்ளை குட்டிகளும் என் பெண்சாதியும் வயிறு நிறையச் சாப்பிட்டு எத்தனையோ காலமாச்சே! தாயே! உலகையே ரட்சிக்கும் உனக்குத் தெரியாதா எங்கள் பாடு! வருகிற பொங்கலுக்காவது பால் பொங்கட்டுமடி ஆத்தா! உன்னைத்தான் நம்பியிருக்கேன்
இப்பிரார்த்தனையும் நாள் தவறாமல், கொல்லங்குடியில் நிகழ்ந்து வந்தது; ஆனால் நடேசர் சன்னிதியில் அல்ல. ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் எழுந்தருளியுள்ள காளியம்மன் முன்னிலையில், அவளுக்குப் பக்கத்திலேயே சேரியில் வாழும் சூரியன் மண்டியிட்டவாறு கெஞ்சிப்பேசும் சொற்கள் இவை.
காளியம்மனிடம் அடைக்கலம் புகுபவர்கள் தொகை சொற்பம்தான்; அது தாழ்த்தப்பட்டோரின் தெய்வம்; ஜாதியிலே மேலோர் அவளிடம் சரணாகதி அடைவதில்லை. கொல்லங்குடிக் காளியம்மனுக்கும் இந்தக் கதிதான்!
அவள் கோயிலில் ஆறுகால பூஜையில்லை; திருவமுது படைப்பதில்லை; அவளுடைய பக்தர்களின் வீட்டிலே மகிழ்ச்சி பொங்கினால்தான் ஆத்தாள் சன்னிதியிலும் விளக்கெரியும்.
விளக்கெரிந்தாலும் எரியா விட்டாலும் காளியைக் காணாது சூரியன் இரவு துயில்வதில்லை. காலையிலே நீராடி, புத்தாடையுடுத்து நெற்றியிலே திருநீறணிந்து காளியை அவன் பூசிக்க முடிவதில்லை. எனவே வேலை முடிந்து இரவு தொடங்கி நெடுநேரமான பின்பே காளி பிரார்த்தனைக்குச் செல்வான். இது வாடிக்கையாகிவிட்டது. அந்த நேரத்தில் கேட்கும் உருக்கமான வேண்டுகோளில் சூரியன் படும் துயரம் இணைந்திருப்பதை அக்கிராம மக்கள் எத்தனையோ முறை கேட்டிருக்கிறார்கள்.
சூரியன் பழங்குடி மக்களிலே ஒருவன்; அவனோடு தோளோடு தோள்போட்டு நிற்க அக்கிராமத்தில் எண்ணற்றவர் உண்டு. உழைப்பையே முதலாகக் கொண்ட அவன் குடும்பம் துன்பத்தில் உழன்றதில் வியப்பில்லை. வயலையும் அங்கே விளைகின்ற நெல்லையும் நம்பி அவன் வாழ்க்கை உருண்டு கொண்டிருந்தது.
* * * * *
அப்போது அறுவடைக் காலம். பொங்கல் வரவிருந்தது. இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்து கொண்டிருந்தது அந்நாட்களில். நாட்டில் பணம் மிகுந்தும் விளைபொருள்கள் குறைந்தும் போனநிலை. விளைகின்ற உணவுப் பொருள்களிலும் பிறவற்றிலும் நாட்டைக் காக்கின்ற பட்டாளத்தார் தீர்த்தது போக எஞ்சியவற்றைத்தான் வீடுகளிலேயுள்ள பயந்தாங்கொள்ளிகள் தின்னவேண்டியிருந்தது; பணம் படைத்தோரை எந்தப் பஞ்சமும் பாதிக்காதது போலவே யுத்தப் பஞ்சமும் பாதிக்கவில்லை; நடுத்தரக் குடும்பத்தினர், ஏழை மக்கள் அப்போது பட்ட அவதிக்கு அளவேயில்லை.
கொல்லங்குடியிலும் இப்பஞ்சம் கோர நர்த்தனமாடியது; தொடர்ந்தாற்போல் இரண்டு மூன்றாண்டுகள் நிலங்களில் விளைவேயில்லை. உழைப்பும் பொருளும் வீணானதுதான் பயனாயிற்று. ஆண்டு முற்றும் பாடுபட்டு, அறுவடைக் காலத்தை எதிர்பார்த்திருக்கும் உழவர்கள் ஏமாற்றத்தையே கண்டார்கள்; விதைபோட்ட நெல்லிருந்தாலும் சில நாள் உணவாயிருக்குமே என்று கவலையுற்றார்கள். அடுத்து வரும் ஒவ்வொரு நாளும் எப்படி வாழ்க்கையை ஓட்டுவது என்று தெரியாமல் திண்டாடினார்கள்.
சூரியனும் இந்தச் சுழலில் சிக்கினான். அறுவடை பெரும் பயன் தருமென்றெண்ணி, முதலீடாகப் பணம் நூறுரூபாய் போலக் கடன் வாங்கிச் செலவழித்திருந்தான். நல்ல விளைவு காணுமென்று உரத்திற்கும், விதை நெல்லிற்கும் அப்பணம் பயன்பட்டது. இத்தனை பாட்டிற்கும் பயன் பாழ்நிலையானதறிய அவன் வெதும்பினான்; வயல்களில் தலை சாய்ந்து வெறும் சாவியாய்ப் போன நெற்பயிரை நோக்கி நோக்கி விம்மினான்; வானம் வேண்டிய நேரத்தில் மழை பொழியாது தங்களைத் தவிக்க விட்டதை எண்ணிப் பொருமினான்.
விடிந்தால் பொங்கல் நன்னாள்; மகிழ்ச்சி களிநடம்புரியும் திருநாள். சூரியன் கவலையே உருவாயிருந்தான்; காளியம்மன் நினைவு அவன் முன்னே குதித்தது. பறந்தான் அங்கே! பஞ்சையைப் பாரம்மா என்று இருகை கூப்பினான். இத்தனை நாள் நான் கூறியும் உனக்கு இரக்கமில்லையா? என்று கதறினான். நானும் என் குடும்பமும் செத்து மடிவதைத் தவிர வேறு வழியில்லையா? என்று கூவினான். இப்படியே அப்பா அப்பா என்ற கூக்குரல் கேட்டுத் திடுக்கிட்டான். கண்களில் வழியும் நீரைத் துடைத்துக் கொண்டு வெளியே வந்தான். அய்யோ! அவன் கண்ட காட்சி!
அவன் குடிசை தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது; அவனுடைய குழந்தைகள் அவனை நோக்கி ஓடிவந்து கொண்டிருந்தார்கள். சூரியனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அவசர அவசரமாக ஓடினான். தீப்பற்றி எரியும் குடிசையுள் புகுந்தான். அங்கே அவனுடைய மனைவி பற்றி எரியும் தீயில் வெந்து கொண்டிருந்தாள். சூரியன் அவளை அப்படியே தூக்கிக் கொண்டு குடிசையை விட்டு வெளியே வந்தான். பக்கத்திலுள்ள மக்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டார்கள். பாழாய்ப் போன முதலி தீ வைத்து விட்டான் அவன் குடும்பம் மண்ணாய்ப் போக என்ற வசவுகள் ஒன்றன்பின் ஒன்றாக எழுந்தன. சூரியனும் அவன் குழந்தைகளும் இப் பொய்யுலகத்தை நீத்த அப்பெண்ணுயிரை எண்ணி எண்ணி கண்ணீர் விட்டுக் கதறிக் கொண்டிருந்தார்கள்.
கடனைப் பொங்கலுக்குப் பத்துநாள் முன்னே அடைப்பதாகச் சொன்ன பயல் இப்படி விதண்டாவாதம் செய்தால் யார்தான் பொறுக்க முடியும்? கேட்டுக் கேட்டுப் பார்த்தும் பயனில்லை. காசா லேசா? அதுதான் அந்தப் பயல் இல்லாத நேரமாப் பார்த்து அவன் குடிசையில் நெருப்பு வைக்கச் சொல்லி விட்டேன். மற்ற பயல்களாச்சும் இனி ஒழுங்காய் நடப்பார்கள். இல்லியா? என்று அம்பலவாணர் தன் கிளிமொழியாளிடம் அவ்வேளையில் கூறிக் கொண்டிருந்தார். பஞ்சணையில் நேரத்தை நீடிக்க இக்கதை அவர்கட்குப் பயன்பட்டது.
* * * * *
நாட்கள் உருண்டன; பஞ்சத்தால் பட்டினி கிடந்தனர் மக்கள்; தலைவிதியை எண்ணி வருவதெல்லாம் வரட்டும் என்று கைபொத்தி வாய் கட்டிச் சாவை வரவேற்றனர் மக்கள். ஏராளமான குடும்பங்கள் கூண்டோடு சிவபதவியடைந்தன.
அரசினர் பங்கீடும் சரிவர நடைபெறவில்லை; உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடியது; உணவு எங்கே? எங்கே? என்ற ஏக்கம் எல்லோருடைய உள்ளத்திலும் குடிகொண்டிருந்தது. அப்போதும் வழக்கம் போலத் துயர்வந்து தீண்டவில்லை, அம்பலவாணர் குடும்பத்தினரை. அவர்கள் தெவிட்டுமளவு உண்ணவும், கள்ளச் சந்தையில் விலை கூறவும் அவரிடம் நெல்லும் பிறவும் இருந்தே வந்தன. அவருடைய களஞ்சியம் வற்றாத ஊற்று. கொஞ்சம் குறைந்தால்கூட எவர் தாலியை அறுத்தாவது நிரப்பி விடுவார்.
அம்பலவாணர் பக்தி இப்பஞ்சகாலத்திலும் குறையவில்லை; மாறாக, பணத்தைப் போலப் பெருகிக் கொண்டிருந்தது. அன்று காலை நேரம்; கோயிலில் அம்பலவாணர் உருக்கமாகப் பிரார்த்தனை நடத்திக் கொண்டிருந்தார்.
எசமான், எசமான், களஞ்சிய நெல்லைப் பூராச் சூறையாடிட்டாங்க என்று சொல்லிக்கொண்டே அவர் வீட்டுக் காவற்காரன் மாடசாமி பிரார்த்தனை ஸ்தலத்திற்கே ஓடோடி வந்து முறையிட்டான்; அம்பலவாணர் வாங்க வேண்டிய விபூதிப் பிரசாதத்தைக்கூட வாங்காமல் வெறிக்க வெறிக்க ஓடினார்; அதற்குள் நெற்களஞ்சியம் காலியாகிவிட்டது. கொல்லங்குடி மக்களும் பக்கத்துக் கிராம மக்களும் ஒரே கூட்டமாக அங்கே கூடியிருந்தார்கள்; ஆளுக்கொரு பையில் நெல்லை அளந்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள், அவர்கள் தலைவர்கள். முதலியாருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை!
எங்கிட்டேக் கேட்டாக் கொடுக்க மாட்டேனா? ஏன் இப்படியெல்லாம் செய்ய வேண்டும்? நடந்தது சரி. எல்லோருமா எடுத்துக் கொள்ளுங்கோ என்று சாமர்த்தியமாக வார்த்தைகளை வீசினார். கேட்பதும் கொடுப்பதும் நடக்காதவை என்பது அவருக்குத் தெரியாததல்லவே!
அவர் நினைவு நடராசரை நாடிற்று; நாள்தோறும் நடத்திய பிரார்த்தனையின் பயனா இது? என்று விம்மினார்; கருணாமூர்த்தி இப்படி மோசம் செய்வார் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. தருமம் தலைகாக்கும் என்பது பொய்யென்று உறுமினார்; பாழாய்ப் போன சாமியை நம்பி மோசம் போச்சே என்று நடராசர் மீது வசை புராணம் தொடுத்தார்.
பாவம்! நடராசர் என்ன செய்வார்? சூரியன் குடிசை தீப்பற்றி எரிந்தபோது காளியம்மன் என்ன செய்ய முடிந்தது? அதனைத்தானே நடராசரும் செய்ய முடியும்! கடவுளை நம்பினோர் கைவிடப்பட்டார் என்று கூறுவதைத் தவிர வேறு முடிவென்ன இருக்கிறது!