கேள்வி : தமிழர்களைப் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் பொறுக்கிகள் என்றும் எலிகள் என்றுமே டுவிட்டரில் குறிப்பிடுகிறாரே சு.சாமி? படிக்கும்போதே கொதிக்கிறதே! – வி.குணசேகரன், மதுராந்தகம்
பதில் : அரசியல் புரோக்கரான சு.சாமியின் வாய்க்கொழுப்பு இதன்மூலம் வெளிவருகிறது; அவர் உருவத்தை தமிழர்கள்மூலம் பார்க்கிறார் போலும். அவர் பின்னால் செல்லும் விபீடணர்களைப் பார்த்தும்கூட அப்படி ஒரு முடிவுக்கு அவர் வந்திருக்கக்கூடும்.
கேள்வி : பாதுகாப்புத் துறையில் 100 சதவிகிதம் அன்னிய முதலீடு செய்ய பா.ஜ.க.வின் மத்திய அரசு பரிசீலனை என்ற செய்தியில் நாட்டுப் பாதுகாப்புக்கு மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளதா? – சா.கோவிந்தசாமி, பெரம்பலூர்
பதில் : முன்பு அவர்கள் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது இதை எதிர்த்துப் பேசிவிட்டு, இப்போது இப்படி என்றால், நிச்சயம் நாட்டின் பாதுகாப்பை அந்த வெளிநாட்டவர்களிடம் ஒப்படைப்பது நம் நாட்டு இராணுவத்தைத் தள்ளிவைத்து, அந்நாட்டு இராணுவத்தை வரவழைப்பதைப் போன்ற மிக ஆபத்தான, மோசமான செயல்; அனுமதிக்கவே கூடாது!
கேள்வி : தமிழகத்தில் அ.தி.மு.க. குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றிருந்தும் மத்தியில் வலுவான நிலையை அடையவில்லையே? – செ.உமா, பெரம்பலூர்
பதில் : மத்தியில் வலுவான நிலை என்றால் உங்கள் அகராதியில் ஒரு அர்த்தம். அ.தி.மு.க.வில் மற்றொரு அர்த்தம். எல்லாம் போகப்போகப் புரியும்.
கேள்வி : பொது சிவில் சட்டம் மற்றும் 370ஆவது பிரிவு குறித்து பொது விவாதம் நடத்துவதால் எந்தத் திருப்பமும் ஏற்பட்டு விடாது என மத்திய அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளது பற்றி? _ கோ.நளினி, பெரியார் நகர்
பதில் : அவர் ஆர்.எஸ்.எஸ்.ஸால் அமர்த்தப்பட்ட மத்திய அமைச்சர்களில் ஒருவர்; இப்படிப் பேசாமல் வேறு எப்படிப் பேசுவார்? பொது மனிதர்களின் கருத்தல்லவா முக்கியம்?
கேள்வி : மத்திய அரசை ஆளும் பா.ஜ.க. மிகக் குறுகிய காலத்திலேயே ஆர்.எஸ்.எஸ். கோட்பாடுகளுக்குச் செயல்வடிவம் கொடுக்க கொஞ்சமும் தயக்கம் காட்டவில்லையே? _ கா. திராவிடமுரசு, திருச்சி
பதில் : முந்தைய பதிலில் இதற்கும் பதில் இருக்கிறது. ஆட்சியையே ஆர்.எஸ்.எஸ். அமைத்து அதுதானே நடத்துகிறது. பின் எப்படி தயக்கம், மயக்கம் எல்லாம் வரும் அவர்களுக்கு?
கேள்வி : கோவில் நுழைவு உரிமை (ஸிவீரீலீ ஷீயீ ஜிமீனீஜீறீமீ ணிஸீக்ஷீஹ்) என்ற ஆங்கில நூலில், ஆகமங்களை நன்கு ஆய்ந்து படித்தால், ஆகமங்களின்படி கோவிலில் நுழைந்து வழிபட எந்த ஒரு பார்ப்பானுக்கும் உரிமை இல்லை என 1936ஆம் ஆண்டே தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட அந்நூலில் குறிப்பிடப்பட்டிருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
பதில் : நாகர்கோவில் பி.சிதம்பரம் (பிள்ளை) அவர்கள் வழக்குரைஞர்; ஆழ்ந்த சிந்தனையாளர். ஆங்கிலத்திலும் தமிழிலும் இவர் எழுதிய நூல்கள் ஏராளமான மறுக்கமுடியாத நுண்மா நுழைபுலத்துடன் கூடியது. (விரைவில் புதிய பதிப்பு வரும்) எனவே மறுக்க முடியாத கருத்து அது!
கேள்வி : தமிழகத்தின் பெரும்பாலான அஞ்சலகங்களில் அஞ்சல் அட்டை – தட்டுப்பாடு வரக் காரணம் என்ன? அஞ்சல் அதிகாரிகளின் அலட்சியப் போக்கா? மத்திய அரசின் கவனக்குறைவா? _ சுமதி சண்முகசுந்தரம், திட்டக்குடி
பதில் : அஞ்சல் துறையையே செயலற்றதாக ஆக்கி பல பிரிவுகளைக் குறைத்து, மாற்றி குளறுபடிகள் பெருகிவரும் நிலையில் இம்மாதிரி குறைபாடுகள் நாளும் பெருகி வருகின்றன. அஞ்சல்கள் போய்ச்சேருவதேகூட உரியகாலத்தில் அல்ல என்பது போன்றவைகளைக் களையவேண்டும்.
கேள்வி : ஸ்பெயின் நாட்டில் குழந்தைகளுக்கு கெட்ட ஆவி பிடிக்காமலிருக்க மதபோதகரே குழந்தைகளைப் படுக்க வைத்துத் தாண்டும் மூடநம்பிக்கை நடைபெறுகிறதே? _ த. கற்பகம், பாளையங்கோட்டை
பதில் : தந்தை பெரியார் அவர்கள் கூறியதுதான் இதற்குப் பதில். முட்டாள் தனமும் மூடநம்பிக்கைகளும் நமக்கு மட்டுமா ஏகபோக உரிமை; அங்கும் அத்தகையவர்கள் உள்ளார்கள் என்ற உண்மை வெளிவந்துள்ளன இதன்மூலம்!
கேள்வி : வைத்தீசுவரன் கோவில் என்ற ஊரில் ஓலைச்சுவடி ஜோதிடம் என்ற பெயரில் மிகப்பெரிய மோசடி பரவலாக நடைபெற்று வருவது, நம்பிய பக்தர்களை ஏமாற்றும் அயோக்கியத்தனம் இல்லையா? _ கோ.சரசுவதி, அந்தநல்லூர்
பதில் : இதுபற்றி வழக்கு நடந்து, ——–அம்பலப் படுத்தியவர்களுக்கு அளவற்ற தொல்லை தந்தார்கள். வியாபாரம் இப்படி செழித்தோங்குகிறது _ ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவரும் இருக்கத்தானே செய்வர்?
கேள்வி : சில நாளிதழ்கள் திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க 20 மணிநேரம் 30 மணிநேரம் பக்தர்கள் காத்திருந்தனர் என்று அடிக்கடி செய்திகளைப் போட்டு மகிழ்வதன் உள்நோக்கம் என்ன? – மா.இளவரசன், காரைக்குடி
பதில் : பக்தி, ஆன்மீக வியாபாரம் என்பதன்மூலம் தங்கள் வியாபாரத்தைத் தடையின்றி நடத்தவே.