தென்தமிழ்நாட்டிலிருந்து வடமாநிலமான ராஜஸ்தானுக்கு எனது குடும்ப நண்பர்கள் இருபத்தி ஏழு பேர் ஒரு குழுவாக சுற்றுலா சென்றுவந்த போது ஏற்பட்ட பயண அனுபவங்களை உண்மை வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
அம்மாநிலத்திதற்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருப்பதும், தனித்துவம் மிக்கவையுமான பல புராதனக் கோட்டைகள், அரண்மனைகள், கோவில்களைப் பார்வையிட்டபோதிலும், அம்மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்துள்ள மூடநம்பிக்கைகள் பெரியார் மண்ணைச் சேர்ந்த எனக்கு மிகுந்த வியப்பிற்கும், நகைப்பிற்கும் இடந்தருவதாக இருந்ததாலேயே இப்பயண அனுபவத்தினைப் பதிவு செய்ய விரும்பினேன்.
ராஜஸ்தான் என்றாலே, வறண்ட பாலைவனம் என்பதுதான் நம் நினைவுக்கு வரும். நானும் அவ்வாறுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். நினைத்ததற்கு மாறாக, தெற்குப் பகுதியும், வடகிழக்குப் பகுதியும் வளமாக இருக்கின்றன. வடமேற்குப் பகுதிதான் வறண்ட பகுதியாக இருக்கிறது.
இம்மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூர். அந்நகரின் மத்தியிலேயே ஜல் மஹேல் (தண்ணீர் அரண்மனை) என்றழைக்கப்படும் ஒரு அரண்மனை உள்ளது. அரண்மனையைச் சுற்றிலும் அழகான பூங்கா உள்ளது. பக்கத்தில் ஏரியுள்ளது. ஏரியின் நீர்மட்டம் அரண்மனையைக் காட்டிலும் உயரத்திலிருப்பதால், குழாய் மூலமாக நீரைக் கொணர்ந்து பூங்காவிற்கு நீர் பாய்ச்சுகிறார்கள். பல நீர் ஊற்றுகள் செயல்படுகின்றன. ஒரு பகுதியில் நீர் ஊற்றுகள் செயல்படும்போது இயற்கையாக மழை பொழிவதுபோல் சப்தம் உண்டாவது ரசிக்கத்தக்கதாக இருக்கிறது.
ஜெய்ப்பூர் நகரின் ஒரு பகுதியை இளஞ்சிவப்பு நகர் (பிங்க் சிட்டி) என்று அழைக்கிறார்கள். ஜெய்ப்பூர் மகாராஜா இங்கிலாந்து நாட்டு மன்னரை வரவேற்கும் முகத்தான் நகரின் ஒரு பகுதிக் கட்டிடங்களுக்கு இளஞ்சிவப்பு வர்ணம் பூசி வரவேற்றதாக சுற்றுலா வழிகாட்டி விளக்கமளித்தார். நகரின் ஒரு பகுதியிலுள்ள கட்டிடங்கள் அனைத்தும் ஒரே வண்ணத்தில் இருப்பது வித்தியாசமாகத்தான் இருக்கிறது.
நகரின் பிரதான வீதிகளில்கூட மாடுகள் போக்குவரத்துக்கு இடையூறாகத் திரிகின்றன. மாடுகளைப் புனிதமாக நினைக்கும் மூடநம்பிக்கை பசு வளையம் என்று வருணிக்கப்படும் பல வடமாநிலங்களில் நிலவினாலும், ராஜஸ்தானில் இம்மூடநம்பிக்கை வலுவாக இருப்பதைக் காணமுடிந்தது. வழிகாட்டியாக வந்தவர்கூட மாடுகளைக் கோமாதா என்றுதான் வருணித்தார். வீதியில் திரியும் மாடுகளுக்கு வாகனங்களில் வந்து தீனியளிக்கும் மடமையைப் பரவலாகப் பார்க்க முடிந்தது. இம்மாதிரியான செயல்பாட்டை சென்னை, கோயம்புத்தூர், மதுரை போன்ற நகரங்களில்கூட, இந்நகரங்களில் வாழ்கிற ராஜஸ்தானியர்கள்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.
பயனற்ற மாடுகளைப் பராமரிக்கும் மூடநம்பிக்கையோடு இன்னும் பல மூடநம்பிக்கைகள் கொண்டவர்களாக இம்மாநில மக்கள் இருக்கிறார்கள். நகரங்களில் புறாக்களை அதிகமான எண்ணிக்கையில் வளர்க்கிறார்கள்.
ஜெய்ப்பூரிலும், பிற நகரங்களிலும் புறாக்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. எங்கும் புறாக்கள் கூட்டம் கூட்டமாகப் பறந்து கொண்டிருக்கின்றன. அவைகளுக்கும் பலர் உணவளிக்கிறார்கள். அவை கட்டிடங்களில் அமர்ந்து எச்சமிடுகின்றன. அவற்றைப் பராமரிப்பதால் அவர்கள் காணும் பலன் அதுதான். அத்தொல்லை பற்றியும் புறாக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் அவசியத்தையும் அம்மக்கள் உணர்வதாகத் தெரியவில்லை.
புறாக்கள் பற்றி ஒரு உள்ளூர்வாசியிடம் விசாரித்தேன். வீதியில் திரியும் புறாக்களைப் பிடித்து யாரும் உண்ணுவதில்லையா என்று வினவினேன். அதற்கு அவர், யாரும் புறாக்கறி உண்ணுவதில்லை என்றார். யாராவது அப்படிச் செய்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டேன். அப்படிச் செய்தால், ஊரைவிட்டே விரட்டிவிடுவோம் என்றார்.
கொல்லாமைத் தத்துவம் வெறித்தனமாகச் செயல்படுத்தப்படுவதைக் கண்டேன். அதன் ஒரு அம்சமாக அம்மாநிலத்தில் காய்கறி உணவே பிரதானமாக இருக்கிறது. ஜெய்ப்பூரில் எண்பது சதவிகித மக்கள் காய்கறி உணவு உண்பவர்கள் என்று சுற்றுலா வழிகாட்டி சொன்னார். எங்களுக்கு வியப்பாக இருந்தது. இதுபற்றி, எங்கள் பேருந்தின் ராஜஸ்தானி டிரைவரிடம் வினவினோம். தான் ஜாட் என்றும், போர்வீரர் ஜாதியைச் சார்ந்தவர் என்றும் சொன்னார். அதனால், மாமிச உணவு உண்பதாகச் சொன்னார். உண்ணும் உணவைக்கூட சுயவிருப்பம் தீர்மானிக்காமல், ஜாதியம் தீர்மானிப்பதை அங்குக் கண்டேன்.
ராஜஸ்தானில் இன்னொரு முக்கிய நகரம் உதய்ப்பூர். இந்நகரை ஏரி நகரம் என்றழைக்கிறார்கள். ஏரியைப் பார்க்க சிறிது தூரம் ஒட்டக வண்டியில் செல்ல வேண்டியிருக்கிறது. அங்குள்ள ஏரியில் ஏராளமான மீன்கள் வளர்க்கப்படுகின்றன. உணவைப் பெறுவதற்காக மீன்கள் படித்துறைகளில் கூட்டம் கூட்டமாக நீந்திக் கொண்டிருக்கின்றன. சுற்றுலாப் பயணிகள் ரொட்டித் துண்டுகளை வாங்கி மீன்களுக்கு அளிக்கிறார்கள். மீன்களின் அடர்த்தி மிக அதிகமாக உள்ளது. அவை ஆரோக்கியமாக உயிர்வாழ்வதற்கே அவற்றின் எண்ணிக்கையைக் குறைப்பது அவசியமாகும்.
ரணக்பூர் என்ற ஊரில் பிரசித்தி பெற்ற ஜைனக்கோவில் உள்ளது. முற்றிலும் சலவைக் கற்களால் கட்டப்பட்டிருக்கிறது. நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த கோவிலாக உள்ளது. கலை அம்சத்தோடு செதுக்கப்பட்டுள்ள சிற்ப வேலைப்பாடுகளும், நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ள குவிந்த மேற்கூரைகளும் வேலைப்பாடுகளும் பிரமிப்பூட்டும் வகையில் இருக்கின்றன. சிற்ப வேலைப்பாட்டிலும், அழகிலும் தாஜ்மஹா லுக்கு இணையாக உள்ளது. கோவிலின் உட்புறம் காற்றோட்டமாகவும், வெளிச்சமாகவும் உள்ளது. கோவிலை நிர்வகிப்பவர்களும் சுத்தமாக வைத்திருக்கிறார்கள்.
கோவிலைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கும்போது ஒரு காவி உடை தரித்த நபர் எங்களை அணுகினார். நாங்கள் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் என்றறிந்து மகிழ்வுடன் வரவேற்றார். அவர் ஜைனத் துறவியாயிருப்பார் என்று நினைத்தோம். மாறாக, அவர் தன்னை ஒரு பார்ப்பன அர்ச்சகர் என்று அறிமுகம் செய்துகொண்டார். தங்கள் குடும்பத்தாரே பரம்பரையாக இக்கோவிலின் அர்ச்சகராக இருப்பதாகச் சொன்னார். பார்ப்பனர்களை உயர்ந்த பிறவியென்பதை ஒத்துக்கொள்ளாத ஜைனமதத்தினரின் கோவிலில் எப்படி பார்ப்பனர் அர்ச்சகராக இருக்கிறார் என்று புரியவில்லை.
அந்த அர்ச்சகரிடம் ஜைனமதத்தின் கொள்கைகள் பற்றி வினவினோம். அவருக்கு ஜைனமதத்தின் கொள்கைகளைச் சொல்லத் தெரியவில்லை. கொல்லாமைதான் ஜைன மதத்தின் கொள்கை என்றார். கடவுள் மறுப்பு, வேதங்களை ஏற்காமை, உயிர்ப்பலிகளை நீக்குதல், ஜாதி மறுப்பு, அகிம்சை போன்ற உயரிய கொள்கைகளை வலியுறுத்திய ஜைன மதத்தை, இந்து மதத்தின் ஒரு பிரிவுதான் என்று தவறான விளக்கமளித்தார்.
இந்துக் கோவில்களில் செய்யப்படும் ஆர்ப்பாட்டமான பூஜைகள் எதுவும் அக்கோவிலில் செய்யப்பபடவில்லையெனினும், பார்ப்பனியம் வேறுவடிவத்தில செயல்படுவதைப் பார்த்தேன். கோவிலைச் சுற்றிக் காட்டிய அப்பார்ப்பன அர்ச்சகர் எங்கள் குழுவினர் அனைவரையும் கோவிலின் ஒரு பகுதியில் நிற்க வைத்து மந்திரம் சொல்வதுபோல் எதையோ சொன்னார். அத்துடன், எங்கள் எல்லோருடைய வாழ்வு சிறப்பாக இருக்க வேண்டுமென ஆங்கிலத்தில் வாழ்த்தினார். ஆசிர்வாதத்தை முடித்துவிட்டு, வசூல் வேட்டையை மிக நாசூக்காக நிறைவேற்றிக் கொண்டார். தங்களுக்குச் சம்பளம் கிடையாதென்றும், பக்தர்களின் காணிக்கைதான் வருமானம் என்றார். இதைக் கேட்டவுடன், எங்கள் குழுவினர் அனைவரும் மனமுருகி பணத்தைத் தாராளமாகக் கொடுத்தார்கள். அவர் செய்த பத்து நிமிடச் சேவைக்கு எங்கள் குழுவினர் கொடுத்த பணம் ரூபாய் ஆயிரத்துக்கும் மேலிருக்கும்.
ஜைனக் கோவிலுக்கு வெளியே பூங்கா அழகுற அமைத்துள்ளார்கள். எனினும், பூங்கா பகுதியில் காலாற நடந்து செல்ல முடியவில்லை. எங்கும் குரங்குகள் அச்சம் தரும் வகையில் நடமாடுகின்றன. அவ்வமயம் ஒரு செய்தி சொன்னார்கள். சில நிமிடங்களுக்கு முன்னர் ஒரு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணியைக் குரங்கு கடித்துவிட்டதாகவும், அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் தகவல் சொன்னார்கள்.
பிரசித்தி பெற்ற ஒரு ஜைனக் கோவிலின் சுற்று வளாகத்தில அதிகமான எண்ணிக்கையில் குரங்குகளைப் பராமரிப்பதும், நடமாட அனுமதித்திருப்பதும் அறிவுக்குப் பொருத்தமான செயலாகத் தெரியவில்லை.
ராஜஸ்தான் மாநிலத்தின் வடமேற்குப் பகுதியில் தார்ப் பாலைவனத்தின் எல்லையில் இருக்கும் நகரம் ஜெய்சல்மார். அந்நகரில்தான் 850 ஆண்டுகள் பழைமையான கோட்டையும், அரண்மனையும், வீடுகளும் உள்ளன. கட்டிடங்கள் மஞ்சள் நிறக் கற்களைக் கொண்டு மிக நேர்த்தியாக அழகுறக் கட்டப்பட்டிருக்கின்றன. கட்டிடங்களைப் பளிங்குக் கற்களில் நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட ஜன்னல்கள் அலங்கரிக்கின்றன. அரசில் உயர் பதவி வகித்தவர்களின் வீடுகளை ஹவல் என்கிறார்கள். அய்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட நான்கு வீடுகள் வரிசையாக உள்ளன. வீடுகளின் முன் தோற்றம் பளிங்குக் கற்களால் நுணுக்கமாக அழகுடன் கட்டப்பட்டிருக்கிறது. கட்டிடக் கலை சிறப்பாக இருக்கிறது.
சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், சுற்றுலாத் துறையினர் ஒரு அரங்கத்தில் அம்மாநிலத்தின் பாரம்பரிய இசை, நடன, பொம்மலாட்ட நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். அவற்றைப் பார்த்தோம். ரசிக்கத்தக்க வகையில் இருந்தன. எனினும், உணவருந்தச் சென்ற உணவு விடுதியில் எங்களுக்காக ஒரு நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார்கள். ஒரு சிறுமேடையில், ஒரு அழகான குழந்தை, இரண்டு இசைக் கலைஞர்களின் இசைக்கேற்ப ராஜஸ்தானிய நடனம் ஆடினாள். எங்கள் குழுவில் இந்தி பேசத் தெரிந்த பெண்கள் அக்குழந்தையுடன் உரையாடினார்கள். அக்குழந்தைக்குப் பத்து வயதுதான் என்று அறிந்தோம். படிப்பு பற்றி வினவியபோது, பள்ளிக்கே சென்றதில்லை என்று சொல்லியிருக்கிறாள். இம்மாநிலத்தில் எட்டு சதவிகிதப் பெண்களே கல்வி கற்றவர்கள் என்பது செய்தி. இது ராஜஸ்தான் மாநிலத்தின் இன்னொரு பக்கம்.
ஜெய்சல்மாரிலிருந்து தார்ப் பாலைவனத்தைப் பார்க்க மாலையில் சென்றோம். சிறிது தூரத்தில் சாலை முடிவடைந்துவிடுகிறது. அவ்விடத்தில பஸ்கள், வேன்கள், கார்கள் நிறுத்தப்பட்டுவிடுகின்றன. சுமார் நான்கு கிலோமீட்டர் உள்ளே சென்று பாலைவனத்தின் உண்மைத் தன்மையை சுற்றுலாப் பயணிகள் பார்க்கிறார்கள். மாலை நேரத்தில் அங்கு சுமார் இரண்டாயிரம் பேர் கூடுகிறார்கள். அம்மணல் பகுதிக்கு ஒட்டகத்திலும் செல்லலாம். ஒட்டக வண்டியிலும் செல்லலாம். பாலைவனத்து மணல் கடற்கரை மணலைப்போல் அல்லாமல் மாவு போல இருக்கிறது. அந்த மணல்மேடுகளில் கூட்டம் கூட்டமாக உட்கார்ந்திருக்கும் சுற்றுலாப் பயணிகளின் முன் பத்து முதல் பன்னிரண்டு வயதுக் குழந்தைகள் ராஜஸ்தானிய உடை அணிந்து நடனமாடினார்கள். கொடுத்த அன்பளிப்பைப் பெற்றுக் கொண்டார்கள். வலிய வந்து பணம் கேட்கவில்லை. அக்குழந்தைகள் கலைச்சேவை செய்வதாக எனக்குப் படவில்லை. அவர்களைக் குழந்தைத் தொழிலாளர்களாகத்தான் உணர்கிறேன்.
ராஜஸ்தானின் வடபகுதியில் இருக்கும் ஒரு நகரம் பிக்கானீர். அந்த ஊரிலுள்ள ஜூனாகர் கோட்டையும், லால்கர் அரண்மனையும் மிகப் பெரிய அளவில் இருக்கின்றன. அந்த ஊருக்கு அருகில் கார்னி மாதா கோவில் என்று ஒரு கோவில் உள்ளது. அக்கோவிலுக்குள் ஏராளமான எலிகளை வளர்க்கிறார்கள். ஆகவே, அதை எலிக்கோவில் என்கிறார்கள். கோவில் ஒன்றும் பெரிய கோவிலுமல்ல. சிற்பக்கலை அம்சம் கொண்ட கோவிலுமல்ல. எலிகள்தான் அக்கோவிலின் சிறப்பம்சம். கோவிலுக்குள் சென்றால், ஒரு சாதாரண சிறிய சிலை. அதற்கு அருகில் ஒரு அர்ச்சகர் அமர்ந்திருக்கிறார். அவர் மீதும், சாமி சிலை மீதும் எலிகள் ஊர்கின்றன. அப்பூசாரி எலிக்கு தேங்காய்ச் சில்களை உணவாகக் கொடுத்துக் கொண்டிருந்தார். பக்தர்களுக்கும் அதே தேங்காய்ச் சில்களைப் பிரசாதமாகக் கொடுத்தார். எலிகளின் மலக்கழிவால் கோயில் கெட்ட நாற்றமடிக்கிறது. அந்தத் துர்நாற்றத்தையும் சகித்துக் கொண்டு, தங்கள் கால்களில் எலிகள் ஏறிச்செல்வதையும் சகித்துக் கொண்டு ஆண்களும், பெண்களும் பக்தியோடு அச்சிலையைக் கும்பிடுவதைப் பார்த்தேன். அருவருக்கத்தக்கதாக இருந்தது. அதைக் கண்டபோது பெரியார் சொன்னதுதான் என் ஞாபகத்திற்கு வந்தது. பக்தி வந்தால் புத்தி போய்விடும்; புத்தி வந்தால் பக்தி போய்விடும் என்று பெரியார் கூறியது ஞானமான கருத்து என்பதனை இக்கோவில் மெய்ப்பிக்கிறது.
இக்கோவில் பற்றியும் ராஜஸ்தானியர்களின் பழக்க வழக்கங்கள் பற்றியும் பஸ்ஸில் பேசிக்கொண்டு வரும்போது, எங்கள் வழிகாட்டியாக வந்த ராஜஸ்தானியரிடம் அங்கு நடைபெறும் குழந்தைத் திருமணம் பற்றி விசாரித்தோம். நகர்ப்புரங்களில் அது நடைபெறுவதில்லை என்றும், கிராமப்புறங்களில் அவை நடைபெறுகின்றன என்றும், ஒளிவுமறைவில்லாமல் சொன்னார். உலகிலேயே இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் திருமணம் நடைபெறுவது ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டுமே. இவை, ராஜஸ்தானியர்களிடம் சரியான விழிப்புணர்ச்சி ஏற்படாமையைக் காட்டுகின்றன. அம்மாநில மக்கள் அறிவிற்கும், ஆய்வுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்காமையையும் வெளிக்காட்டுகின்றன.
சுற்றுலாவை முடித்துக் கொண்டு ஊர் திரும்ப ஜெய்ப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் காத்துக் கொண்டிருந்தபோது, ஒரு படித்த மார்வாடி நடுத்தர வயதுக்காரர் என்னுடன் உரையாடினார். நாங்கள் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் என்றறிந்து ராஜஸ்தான் பற்றிய என்னுடைய விமர்சனத்தைக் கேட்டார். ராஜஸ்தானின் கோட்டைகள், கொத்தளங்கள், அரண்மனைகள், கோவில்கள், நகரங்கள் நன்றாகத்தான் இருக்கின்றன. நகர, கிராம மக்கள் அனைவரும் புறத்தோற்றத்தில் அழகாக இருக்கிறார்கள். ஆனால், பெரும்பான்மை மக்கள் பல்வேறு மூடநம்பிக்கைகளை நம்பி மூடர்களாக இருக்கிறார்கள் என்பது என் கருத்து என்றேன். என்னுடைய அந்த விமர்சனம் அவருக்குக் கசப்பானதாக இருந்திருக்கலாம். ஆனால், அதுதான் உண்மையான விமர்சனம்.