நவீன திறன்பேசிகள், குளிகைகள், கையடக்கக் கணினிகள் இன்று பெருகிப் போயுள்ளன. பகலெல்லாம் கட்டிக் கொண்டும், தூக்கிக் கொண்டும் அலைந்தாலும், இரவிலும் அவற்றை அணைத்தே பலர் உறங்குகின்றனர். படுக்கைக்கு அருகிலேயே வைத்து உறங்கும் பழக்கமும் இருக்கிறது. குறுஞ்செய்திக்காகவோ, அல்லது வேறு ஏதேனும் நினைவுறுத்தலுக்காகவோ அடிக்கடி ஒளியைப் பாய்ச்சும். இதனால் தூக்கம் பாதிக்கப்படும் என்கிறது ஓர் ஆய்வு.
இரவா, பகலா என்று அனிச்சையாக நாம் உணர்வதில் வெளிச்சத்தின் பங்கு முக்கியமானது. பொதுவாகவே, மாலை நேரம் ஆகஆக புறச்சூழலில் சிவப்பு நிறம் அதிகரிக்கிறது. கண்ணின் ஆழப்பகுதியில் இருக்கும் செல்களில் உள்ள மெலனாப்சின் என்ற புரோட்டீன் மீது இந்த சிவப்பு நிறம் விழும்போது, பொழுது போய்விட்டது. படுக்கப் போ என்று அந்த செல்கள், மூளைக்கு உத்தரவிடுகின்றன. ஆக, இரவு நேரம் என்றால் கண்ணில் சிவப்பு நிற ஒளிதான் படவேண்டும்.
இந்த அமைப்பை திறன்பேசிகள் குளறுபடி செய்கின்றன. அவற்றில் இருந்து வெளியேறும் நீல நிற ஒளி தொடர்ந்து கண்ணில் பட்டுக்கொண்டே இருந்தால் இன்னும் இரவு நேரம் வரவில்லை என்ற தவறான தகவலைத்தான் கண் செல்கள், மூளைக்குக் கடத்தும். ஏனென்றால், நீலநிறம் என்பது அதிகாலை நேரத்துக்கானது. தூங்கியது போதும் என்று படுக்கையில் இருந்து நம்மை எழுப்பிவிடுவதற்கானது.
எனவே, தொந்தரவு இல்லாத ஆழ்ந்த உறக்கம் கிடைக்க வேண்டும் என்றால் திறன்பேசிகளையும், குளிகைகளையும் அணைத்துவிட்டுப் படுங்கள். இல்லாவிட்டால் கண்ணில் படாமல் தொலைவிலாவது வைத்துவிட்டுப் படுங்கள் என்கிறார் இதுகுறித்து ஆய்வு நடத்திய அமெரிக்க வேதியியல் சங்கத்தைச் சேர்ந்த பிரையன் ஸோல்டோவ்ஸ்கி.