ஆசிரியர் பதில்கள்

ஜூன் 01-15

கேள்வி : மோடியின் ஆட்சியில் 2014இல் இருந்து இந்தியா முன்னேற்றப் பாதையில் பயணிக்குமா? அல்லது பின்னிறக்கம் ஏற்படுமா? இதுபற்றிய தங்களின் கருத்தென்ன? – பி. கூத்தன், சிங்கிபுரம்

பதில் : மோடி அவர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூலம் நிறுத்தப்பட்டு, வெற்றிபெற வைக்கப்பட்டுள்ளார். அவ்வமைப்பின் நோக்கம் எப்படிப்பட்டது என்பது புரிந்த நிலையில், மோடி சுதந்திரமாக இயங்குவாரா? _ அமைச்சரவை அமைப்பதில் தொடங்கி எல்லாமே கேள்விக்குறி.

இப்போது 69 சதவிகித மக்களுக்கு (அவர்கள் மோடிக்-கு ஆதரவாக வாக்களிக்காதவர்கள்) சந்தேகம்தான் ஓங்கி இருக்கிறது. காலம்தான் தங்கள் கேள்விக்கு விடையளிக்க முடியும்.

கேள்வி : நாடாளுமன்றத் தேர்தல் முடிவுக்குப் பின்னர் தமிழக அரசியலில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதா?
– சா.வடிவேல், ஆவூர்

பதில் : நாளை காலை என்ன செய்தி? என்ன திடீர் நிகழ்வு என்பதுதான் அரசியலின் தனியான விசித்திரத் தன்மை!

கேள்வி : தமிழகத்தில் ஜாதிய மதவாத சக்திகள் மீண்டும் துளிர்விடத் துவங்கிவிட்டதே? – அ. கனிமொழி, திருப்போரூர்

பதில் : ஆபத்தான போக்கு; எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இன்றேல் நாடு மீண்டும் பெரியாருக்கு முன்பிருந்த கேவலமான இழிநிலைக்குச் சென்றுவிடக் கூடும்.

கேள்வி : சி.ஏ.ஜி.அறிக்கையை அரசியலுக்காக பயன்படுத்த வேண்டாம் என்று மோடி கூறியுள்ளது பற்றி? – இரா.சரவணா, திருநெல்வேலி

பதில் : தேர்தல் முடிவுற்ற நிலையில் பிரதமர் மோடி அவர்கள் கூறிய இக்கருத்து மிகவும் சிந்தித்து வரவேற்கத்தக்கது.

ஊழல்; ஊழலோ ஊழல் என்ற ஓங்காரக் கூச்சல் பலூன் இந்தக் குண்டூசி மூலம் வெகு சாதாரணமாகிவிடுமே!

கேள்வி : ஜெ.விடம் எடுத்தேன் கவிழ்த்தேன் நடைமுறை தான் உள்ளது என்ற முன்னாள் எம்.பி. மலைச்சாமியின் கூற்று? – மோ.வேல்முருகன், திருச்சி

பதில் : நாடறிந்த உண்மைக்கு மலைச்சாமிகளின் கூற்று மற்றுமோர் சாட்சியம்!

கேள்வி : நோட்டா வாக்குகள் சொல்லும் செய்தி என்ன?
– மா. சார்லஸ், வியாசர்பாடி

பதில் : முடிவெடுக்க முடியாத, பரிதாபத்திற்குரிய, வாக்குச்சாவடிக்கு வந்து தங்கள் நேரத்தை, நினைப்பை, உழைப்பை வீணாக்கிய உத்தம அறிவுஜீவிகளானவர்கள் என்பதே!

கேள்வி : மோடிக்கு ராஜபக்ஷே வாழ்த்து தெரிவித்ததுடன் இலங்கைக்கு வருமாறு அழைத்துள்ளாராமே? பதவி ஏற்பு விழாவிற்கும் வருவார்போல் இருக்கிறதே?
– நா.செல்வேந்திரன், பரமக்குடி

பதில் : வருவார் என்பதை உறுதிப்படுத்துகின்றதோடு அதை நியாயப்படுத்தி, தங்களின் ஆட்சி இப்பிரச்சினையில் காங்கிரசுக்கு அண்ணனாகவே இருக்கும் என்பதைத் தெளிவுபடுத்திக் கொண்டுள்ளார்கள் _ இவ்வளவு விரைவில்! அவர்களுக்கு வாக்களித்தவர்களுக்கு ஜே.

கேள்வி : பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட முஸ்லிம்கள் (7 தொகுதிகள்) எதிலும் வெற்றிபெறவில்லையே? – ம.அருள்குமார், சைதாப்பேட்டை

பதில் : சிதம்பர ரகசியம்போல இது ஒரு அதிசய அரசியல் ரகசியம் போலும்!

கேள்வி : தமிழக அமைச்சரவையின் அதிரடி மாற்றத்திற்குக் காரணம்?
– வே. கருணாகரன், காஞ்சி

பதில் : எப்போதும் அச்சத்தின் பிடியிலேயே அமைச்சர்கள் என்போர் இருந்துகொண்டே இருக்க வேண்டும் என்ற அ.தி.மு.க. தலைமையின் அரசியல் சூத்திரம் (Formula) தான்!

கேள்வி : மக்கள் மனநிலை மாறினால்தான் பணப் பட்டுவாடாவைத் தடுக்க முடியும் என்ற தேர்தல் அதிகாரி பிரவின்குமாரின் கருத்து பற்றி?
– அ.முத்துவீரன், வேலூர்

பதில் : இவர் அதிகாரியா? தத்துவஞான போதகரா? இதுதான் நமக்குப் புரியாத புதிராக இருக்கிறது!

இதே தேர்தல் ஆணையத்தில் ஆச்சாரியா என்ற ஒருவரைக் கண்டு பலரும் (அமைச்சர்கள் உட்பட) அஞ்சி ஓடி பதுங்கி பணப் பட்டுவாடாவைக் கைவிட்டு பலரும் ஓடினரே, அது எப்படிச் சாத்தியம் ஆயிற்று?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *