புதுப்பாக்கள்

மே 01-15

நேர்எதிர்!

 

தீய பழக்கங்கள்
நம்மை
அண்டுவது
சுலபம்; விடுவது கடினம்!
நல்ல பழக்கங்கள்
நம்மை
அண்டுவது
கடினம்; விடுவது சுலபம்!

இது நிச்சயம்!?

குடிகாரனோடு
ஒரு நாளாவது
பழகியவனுக்கு
மட்டுமே
தெரியும்; அவனோடு
எப்படிப்பட்டவளும்
வாழ
விரும்பமாட்டாள்
என்று!?

உண்மைச் சுதந்திரம்!

 

பட்டுப்புடவை
தேர்வு செய்ய
நகைநட்டுகளை
தேர்வு செய்ய_
சமையலின் வகை
தேர்வு செய்ய_ இப்படியாக
சுதந்திரம்
கிடைத்த எனக்கு
முடிவெடுக்கும்
அதிகாரமில்லையாம்!?

– கல்மடுகன்

வில்லன்

 

வியர்வையில்
குளிக்க வைக்கலாம்
அதிர்ச்சியில் உறைய வைக்கலாம்

யாரை வேண்டுமானாலும்
மிரட்டலாம்
அவிழ்த்துவிடும் கதைகளால்
அவதூறு பரப்பலாம்

காவல் துறைக்கு பெரிய தலைவலியைக்
கொடுக்கலாம்
கடைசி நேரத்தில்
திருமணம்கூட
நின்று போகலாம்

குடும்பம் மொத்தமும்
சிதைந்து போகலாம்
ஒரேயொரு
மொட்டைக் கடிதாசி
வில்லனால்….

 

– ஆட்டோ. கணேசன்
அருப்புக்கோட்டை

வருவாயும் வெறுவாயும்

 

சின்னமணியை ஆட்டியோனுக்குச் சில்லரைகள்; பெரியமணியை ஆட்டியோனுக்குப்
பட்டைச் சோறு!

பல்லக்குச் சுமந்தோனுக்குத்
தோளில் காய்ப்பு,
பல்லக்கில் பயணித்தோனுக்குத்
தேங்காய் மூளிகள்!
இப்படியாகச்
சேர்ந்த சில்லரையில்
பெண்டு பிள்ளைகளுக்குச் சிறந்த கல்வி _ தொழிற்படிப்பு!
அரசுப்பணி மற்றும்
ஆரவாரத் திருமணங்கள்!

தேங்காய் மூளிகள்
எண்ணெய்க் குடங்கள்
தாராள விற்பனையில்!

பல்லக்குச் சுமந்தவனோ
பிள்ளைகளை அனுப்புவித்தான் மாடு மேய்க்க
பொறுப்புடைய ஒரு தந்தையாக!

மாடுமேய்த்த பிள்ளையோ
பால்கறந்து கொடுத்தான்
அக்கிரகார மாமிக்கு!

அவளும் – தீட்டுப்படாதவாறு பாலை
எடுத்துக் கொண்டாள்
தொலைவில் நின்றவளாய்

 

– கோ. கலைவேந்தர்

மனிதர்களின் பரிணாமம்!

திசைகள் உருவானது,
நான் ஓர் திசையில் சுணங்கிப் போனேன்; எனக்கென ஒரு கடவுள்
உருவானபோது நான் திசையறியாமல்
இணங்கிப் போனேன்; என்னைப் புறக்கணித்து பிறிதொரு
கடவுளும் மதமும் தோன்றுகையில் – நான்
எல்லாத் திசைகளிலும் கலங்கிப் போனேன்; கழிந்த காலங்களில் மதம் சிதறிய ஜாதிகளால் நான் இன்று இன்னும் சுருங்கிப்போனேன்; இத்தனைக்கும் பிறகு என்னை நானே மகான் என்றும் கடவுள் என்றும்
சொல்லிக்கொள்வேன்….
மனிதனென்றும் கூசாமல்…..

 

– பூரான் பூ. இராமச்சந்திரன்

சொன்னா தப்புனு சொல்றாங்க…

ஆளுயர மாலையை
ஆடுகள் மேய்கின்றன
பார்த்தபடியே பக்தன்

முப்புரி நூல் சுமந்து
தப்பு செய்யும் அர்ச்சகர்
காம போதையில் மந்திரங்கள்

காஞ்சி மடம்,
திறக்கிறது,
இரத்த வாடை சுமந்தபடி

காவிக்கென்ன பாடம்
காம சூத்ரா லீலை கழுத்தில் ருத்ராட்சக் கொட்டை

போலிச்சாமிகளின்
பொல்லாங்குச் செய்கையில்,
சிக்குண்டு போகுது,
சிங்காரி பார்வதி குடும்பம்

மேதை என்பானும்
பேதை என்பானும்
கை கூப்புகிறான்
கற்புப் பொங்கலுண்டவன்

பாப்பானுங்களும்
பாப்பானுங்கள்
கசமுச படங்கள்
கட்டிலறை முதல்
கருவறை வரை

எல்லாமறிந்த இறைவன்
சல்லாபக் காட்சிக்கு
சாட்சி நின்றதேன்?

 

– வீ. பாரதிராஜா
இராமநாதபுரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *