மக்களவைத் தேர்தலில் பீகாரில் அய்க்கிய ஜனதா தளம் 2 இடங்கள் மட்டும் பெற்றமைக்கு தார்மீகப் பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக நிதிஷ்குமார் அறிவித்தார். எனினும் சட்டசபையைக் கலைக்கு அவர் கோரவில்லை. பதவி விலகல் முடிவைட் திரும்பப் பெற வேண்டும் என்று கட்சிக்குள் பலரும் கோரினாலும், அதில் உறுதியாக இருந்தார் நிதிஷ்.
தொடர்ந்து நடைபெற்ற அய்க்கிய ஜனதா தள சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் மூத்த அமைச்சர்களுள் ஒருவரான ஜிதன் ராம் மஞ்சி முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவரான ஜிதன் ராம் மஞ்சி முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது பல்வேறு தரப்பினரின் பாராட்டைப் பெற்றுள்ளது. மொத்தம் 243 பேரைக் கொண்ட பீகார் சட்டமன்றத்தில் 117 இடங்களைப் பெற்றுள்ள அய்க்கிய ஜனதா தளத்திற்கு காங்கிரஸ் – 4, கம்யூனிஸ்டுகள்-1, சுயேட்சை-2 என நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற போதுமான இடங்களை மஞ்சி தலைமையிலான அரசு பெறும் என்றாலும், தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து ஒரு முதல்வர் என்பதாலும், மதவாத சக்திகளை வீழ்த்தி, சமூகநீதியைக் காப்பாற்றவும் எங்களின் 21 சட்டப்பேரவை உறுப்பினர்களும் மஞ்சி அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று அறிவித்த லாலு தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் சொன்னபடியே வாக்களித்து மொத்தம் 145 வாக்குகளுடன் நம்பிக்கை அளித்துள்ளது. இதை எதிர்க்கவும் முடியாமல், ஏற்கவும் முடியாமல் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்தது பாரதிய ஜனதா. எதிரெதிர் திசைகளில் இருந்த லாலுவும், நிதிஷும் சமூக நீதித் தளத்தில் மறைமுகமாவேனும் கைகோர்த்திருப்பது நம்பிக்கைக் கீற்றைக் காட்டுவதாகக் கருதுகிறார்கள் சமூகநீதியாளர்கள்! இதைத்தான் நாடும் எதிர்பார்க்கிறது.